விமர்சனம்: அமரன் - நிஜத்திலும் நிழலிலும் வென்றிருக்கிறார் மேஜர் முகுந்த் வரதராஜன் - சல்யூட் சார்!

Amaran Movie Review
Amaran Movie Review
Published on

சிவகார்த்திகேயனின் கேரியரை அமரனுக்கு முன் அமரனுக்குப் பின் எனப் பிரிக்கலாம் என்றே தோன்றுகிறது. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்தவரா இவர்?' என்று கேட்க வைத்ததில் உள்ளது இந்தப் படத்தின் வரவேற்பும் வெற்றியும். 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் மற்றும் சோனி தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் தான் அமரன். இது ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு (பயோபிக்) என்று வந்துள்ளது. பொதுவாகவே ராணுவம் தொடர்பான படங்கள் மிகைப்படுத்தலான கதையமைப்பால் எடுக்கப்பட்ட ஒன்றாகவே வெளியாகியிருக்கின்றன. அதுவும் தமிழில் தேசபக்திப் படங்கள் என்றால் அர்ஜுனும், கேப்டனும் தான். அப்படியிருக்கையில் நம்மிடையே வாழ்ந்து மறைந்த ஒரு ராணுவ வீரரின் கதையை அவரது மனைவியின் பார்வையில் தந்துள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. மேஜர் முகுந்தின் மனைவி  இந்து ரெபெக்காவாகச் சாய் பல்லவி. "இந்தக் கடலுக்கும் ஆகாயத்துக்கும் உள்ள தொடர்புபோல ஒரு தொலை தூர உறவு தான்" எனக்கும் எனது கணவன் முகுந்திற்கும் என்று ஆரம்பிக்கிறார் சாய் பல்லவி.

தொடர்ந்து விரியும் அவர்களது இளமைக் காலங்கள், கல்லூரி நிகழ்வுகள், பெரிய சம்பவங்களோ அல்லது சங்கடங்களோ இல்லாமல் மிக இயல்பாக உருவாகும் காதல். அதற்கு ஒரு தரப்பு பெற்றோரின் ஆதரவு, மற்றொரு தரப்பில் எதிர்ப்பு என வளர்கிறது படம். தொடக்கத்தில் ஓர் அரை மணி நேரம் கதை இப்படித் தான் நகர்கிறது.

"மேடையேறுவதற்கு பயமென்றால், அதை உடைப்பதற்காக நாம் செய்ய வேண்டிய முதல் செயல் மேடை ஏறுவது தான்" என்று அவரை ஒரு ரேம்ப் வாக்கிற்காகத் தயார் செய்கிறார் சிவகார்த்திகேயன். இந்த ஒரு சம்பவத்தில் இருவரும் தங்கள் வாழ்வு இப்படித்தான். இனிமேல் ஒன்றாகத்தான்  என்று முடிவு செய்கிறார்கள். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதே எனது வாழ்வின் லட்சியம் என்று சொல்லும் முகுந்திற்கு அனைத்து விதங்களிலும் துணையாக இருக்கிறார் இந்து. மதங்களோ கடவுள் நம்பிக்கைகளோ இவர்களுக்கிடையில் வருவதில்லை. சொன்னபடி ராணுவத்தில் சேர்கிறார். எல்லைப் பாதுகாப்பிற்கு முதலில் அனுப்பப்படும் முகுந்த் காஷ்மீரில் பணியாற்ற அழைக்கப்படுகிறார்.

காஷ்மீர் என்ன மாதிரியான இடம் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். இப்போதைக்கு முப்பது ஆண்டுகள் முந்தைய காஷ்மீர். தீவிரவாதிகள், கலகக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீர். அடுத்தடுத்து நிகழும் குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு, ராணுவத்தினருக்கு இருக்கும் கட்டுப்பாடுகள். Suspect Everybody. But respect everybody. இது தான் முதல் மந்திரம். பொது ஜனத்திற்கு எதுவும் ஆகக் கூடாது ஆனால் தங்கள் மீது கல்லெறிபவர்களைக் கூடத் திருப்பித் தாக்க முடியாது. அப்படியொரு நிலையில் ராணுவம். அங்கு முகுந்த் எதிர்கொள்ளும் தீவிரவாதிகளும், தற்கொலைப்படைத் தாக்குதல்களும், காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் சண்டைகளை எப்படி காஷ்மீர் மக்களின் துணையுடன் முறியடிக்கிறார்கள் என்பதும் தான் கதை. 

முகுந்த் வரதராஜனாகச் சிவகார்த்திகேயன். கல்லூரிப் பருவத்திலும் சரி. ராணுவத்தில் சேரும்போதும் சரி மேஜராக வளர்ந்து நிற்கும் போதும் சரி அப்படியே கண் முன் வந்து நிற்கிறார். எந்த இடத்திலும் தனது வழக்கமான விளையாட்டுத் தனமான உடல்மொழியோ, வார்த்தை உச்சரிப்புகளோ வராமல் புகுந்து விளையாடியிருக்கிறார். மிடுக்கான நடையுடனும், பார்வையுடனும் அவர் நடவடிக்கைகள் சபாஷ் போட வைக்கின்றன.

இவருக்குச் சற்றும் குறையவில்லை மனைவி இந்து ரெபெக்காவாக வரும் சாய் பல்லவி. எந்த விதமான ஒப்பனையும் இல்லாமல் இவர் தான் உண்மையான ரெபெக்கா என்றால் கண்ணை மூடிக் கொண்டு நம்பலாம். அந்த அளவு மலையாளம் அல்லது மலையாளம் கலந்து தமிழ் பேசிக்கொண்டு உயிர்ப்புடன் அந்தப் பாத்திரத்தைச் செய்து காட்டியிருக்கிறார். காதலர்களாகவும் தம்பதியாகவும் இவர்கள் அவ்வளவு கச்சிதம்.  இதைத் தவிர ராகுல் போஸ், புவன் அரோரா, கீதா கைலாசம் என அனைவரும் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு வலுச் சேர்த்திருக்கிறார்கள். 

இவர்களைத் தவிரப் படத்திற்கு மூன்று ஹீரோக்கள் உண்டு.

இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர் சாய், எடிட்டர் கலைவாணன்.

ராணுவம் தொடர்பான படம் எப்படி எடுக்கலாம் எந்த மாதிரியாகக் காட்சி அமைப்புகள் வரலாம், எப்படி எடிட் செய்தால் அந்தப் படத்தின் பரபரப்பு சற்றுக் கூடக் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று இவர்கள் மூவரும் கைக்கோர்த்து பயணம் செய்திருக்கிறார்கள். வீரர்கள் தங்களைத் தயார் செய்து கொள்வதிலிருந்து தாக்குதலில் ஈடுபடும் வரை அனைத்துக் காட்சிகளும் நன்றாக வந்திருப்பதில் இவர்கள் பங்கு தவிர்க்க முடியாதது. காடுகள், குறுகிய தெருக்கள், வீட்டினுள் நடைபெறும் துப்பாக்கிச் சூடுகள் என அனைத்திலும் புகுந்து புறப்பட்டிருகிறார்கள். படம் பார்க்கும் ரசிகர்கள் கலவரம் நிறைந்த ஒரு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயணம் செய்து வந்ததைப் போல உணர வைக்கிறார்கள்.  நடந்தது உண்மைச் சம்பவங்கள் என்பதால் அதை மறு உருவாக்கம் செய்ததில் இந்த அணி கெத்து காட்டியிருக்கிறது. சண்டைப்பயிற்சி இயக்குநர்களுக்கும் ஒரு சபாஷ். 

இதையும் படியுங்கள்:
அயோத்தியில் உள்ள குரங்குகளை பராமரிக்க நன்கொடை அளித்த அக்ஷய் குமார்!
Amaran Movie Review

இப்படித் தான் ஆரம்பிக்கும், இப்படித் தான் வளரும், இப்படித் தான் முடியும் என்று தெரிந்திருந்தாலும், படம் முடிந்த பின்னரும் ரசிகர்கள் இருக்கையை விட்டு எழாமல் முகுந்த் வரதராஜனின் உண்மைக் குடும்பத்தையும் அந்த ராணுவ வீரர்கள் குறித்த விவரங்களையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். கைதட்டிக் கொண்டாட வேண்டிய ஒரு க்ளைமாக்ஸ் அழுத்தமான நடிப்பினால் அவர்களை அழுத்தி வைக்கிறது. வயது வித்தியாசம் இல்லாமல் கண்ணில் நீருடன் அமர்ந்திருப்பவர்களைப் பார்க்க முடிந்தது.

இது சாதாரணமாகக் கைதட்டி விசில் அடித்துப் பார்க்க வேண்டிய படமல்ல. அப்படிப் பார்க்கவும் முடியாது. ஓர் இரண்டரை மணி நேரம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் பங்கெடுத்துக் கொண்டு திரும்பும் உணர்வு தான் பலருக்கும் வரும்.

*மட்டமான படங்கள் பார்த்து ரசிகர்கள் கெட்டுப் போகிறார்கள் என்று ஒரு கருத்து இருந்து கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட படங்களுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்கள் மனதில் ஒரு சிறு மாற்றம் வந்தால் கூட அது இயக்குநருக்கு வெற்றி தான்.

*எமோஷன் என்ற பெயரில் உணர்சிகளைக் கொட்டி புல்லரித்தே ஆக வேண்டும் என்று காட்சிகளை வைக்க இவர்கள் மெனக்கெடவில்லை.

*குறைகளைக் கண்டு பிடித்தே ஆக வேண்டும் என்ற நினைப்பில் இந்தப் படம் பார்க்கத் தேவையில்லை. 

*மக்கள் இங்கு நிம்மதியாகத் தூங்கி எழுந்து தீபாவளி கொண்டாடிப் படம் பார்க்கையில் எல்லையிலும், போர்க்களத்திலும் அவர்களுக்காகக் காத்து நிற்கும் உயிர் விடும் ராணுவ வீரர்களுக்கு இந்தப் படம் ஓர் அஞ்சலி.

ஒரு ராணுவ வீரனைத் திருமணம் செய்து கொண்டால் நீங்களும் ராணுவ வீரர் தான் என்கிறார் ஒருவர். நாட்டின் பாதுகாப்பே முக்கியம் எனக் கடமையாற்றும் முகுந்த் போன்ற ராணுவ வீரர்களுக்கும் அவர்களுக்காகக் காத்திருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஒரு மிகப் பெரிய சல்யூட். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com