மிகப் பிரபலமான ஒரு படத்தை ரீமேக் செய்யும்போது மிகப்பெரிய சவாலாக இருக்கக்கூடியது என்னவென்றால், புதிதாகச் செய்ய எதுவும் இருக்காது. விஜயின் நண்பனுக்கே கூட எதுவும் இல்லாமல் தான் இலியானா நடனத்தை வைத்தார் ஷங்கர்… அந்தாதுன் போன்ற அனைவரும் கொண்டாடித் தீர்த்த ஒரு படம். ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகப் போகிறது. படம் முடிந்தே இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும். அப்படியொரு படம் வெளிவரும்போது என்ன ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அது தான் நடந்திருக்கிறது அந்தகனுக்கு.
பிரஷாந்த் நடித்துப் பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் வெளியாகும் படம் இது. இடையில் ராம் சரணுக்கு அண்ணனாக இவர் நடித்த 'வினய விதேய ராமா' படத்தைப் பார்த்தவர்கள் மட்டுமல்ல, அப்படத்தின் இயக்குனர், ஹீரோ என்று அனைவருமே அதை மறக்க விரும்புவார்கள். கிண்டலடித்து பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் சேர்ந்தது அந்தப் படம்.
சரி அந்தகனுக்கு வருவோம். கண் தெரியாதது போல் நடிக்கும் ஒரு பியானோ வாசிப்பாளன், கண் முன்னே இரண்டு கொலைகளைப் பார்க்கிறான். ஒரு கட்டத்தில் அவனுக்கு இரண்டு கண்ணும் போயே விடுகிறது அந்தக் கொலையைச் செய்தவர்களால். முடிவு என்ன? இது தான் அந்தகன்.
மூன்று மொழிகளில் ரீமேக் செய்யப் பட்டாலும் இந்தப் படங்களைப் பார்க்காத ரசிகர்களுக்காக எடுக்கப் பட்ட படம் இது. பிரசாந்த் தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார். ஒரு ஹீரோ செய்யத் துணியாத காட்சிகளில் நடிக்க ஒத்துக் கொண்டு இருப்பதும் ஆச்சரியம். ஒரு பெண் கதா பாத்திரத்தின் கையால் சரியான அடி வாங்கி மயங்குவது எல்லாம் யாரும் அவ்வளவு சுலபமாகச் செய்யமாட்டார்கள் அதுவும் தமிழில்.
அவருக்கு அடுத்தபடி ஸ்கோர் செய்பவர் சிம்ரன். வயது கொஞ்சம் தளர்ச்சியை காட்டினாலும், தபு அளவுக்கு ஸ்கோர் இல்லை என்று சொன்னாலும், இவர் நிச்சயம் ஒரு பலம் இந்தப் படத்திற்கு.
நவரச நாயகன் கார்த்திக் கார்திக்காகவே வருகிறார். நடிப்பு…ஹும்…அவ்வளவே…
இதைத் தவிர சமுத்திரக்கனி, யோகி பாபு, ரவிகுமார், ஊர்வசி, வனிதா விஜயகுமாரெனப் போதுமான அளவு நடிகர்கள், போதுமான அளவு நடிப்பு.
இசை சந்தோஷ் நாராயணன். படத்தின் மிகப் பெரிய மைனஸ். பிரஷாந்த் ரெஸ்டோ பாரில் பாடும் பாடல்களை எல்லாம் பாடல்கள் என்று நம்ப வைத்தார் பாருங்கள்! தியாகராஜன் மற்றும் பிரஷாந்த் மட்டுமல்ல நாமும் பாவம் தான். இதை ரசித்துத்தான் கார்த்திக் தன் வீட்டிற்கு அவரைப் பாட அழைக்கிறார். கொடுமை. படத்தின் ஆகச் சிறந்த நகைச்சுவைக் காட்சி! பின்னணி இசை கொஞ்சம் பரவாயில்லை. கார்த்திக் நடித்த படங்களின் ஹிட் பாடல்களைக் கோர்த்த விதம் ஸ்மார்ட் மூவ்.
கேரக்டர்களை கச்சிதமாக முடித்த இயக்குனர் சமுத்திரக்கனி கேரக்டரை மட்டும் அம்போ என விட்டு விட்டார். அனைவருமே கெட்டவர்கள் என்பதால் கொஞ்சம் நல்ல கெட்டவன் இவன் என ஹீரோவுக்கு ஆதரவு தர வேண்டியிருக்கிறது.
இருந்தாலும் மூன்று மொழிகளிலும் பார்த்த படம். இந்தியைத் தவிர மற்ற இரண்டும் பெரிதாக ஈர்க்கவில்லை. மூன்று ஆண்டுகள் வெளியீட்டிற்கு காத்திருப்பு. இது அனைத்தையும் மீறி இந்தப் படம் கொஞ்சம் ரசிக்கத் தான் வைக்கிறது. இந்தப் படங்கள் எதுவும் பார்க்காதவர்களுக்கு நிச்சயம் அட என்று சொல்ல வைக்கும். பிரஷாந்த் மட்டுமல்ல ஒளிப்பதிவாளர் ரவி யாதவிற்கும் இது அப்படித்தான்.
அந்தகன் - பார்க்கலாம். 'போர் அடித்தால் பார்வையை மொபைலுக்கு மாற்றிக் கொள்ளலாம்' என்று எண்ணத் தோன்றாத படம்!