

இசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்ட இளம் இசையமைப்பாளர் அனிருத், இப்போது தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார். கிரீஸில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் யார் யாரெல்லாம் கலந்துகொண்டார்கள் தெரியுமா?
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இசையால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் அனிருத் ரவிச்சந்தர். மறுபுறம், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ரிமையாளர்களில் ஒருவராகவும், சன் குழுமத்தின் முக்கிய நிர்வாகப் பொறுப்பிலும் இருப்பவர் காவ்யா மாறன். இவர்களுடைய திருமணம் குறித்த எதிர்பார்ப்பு நீண்ட காலமாக ரசிகர்களிடையே பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருமணப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
நவம்பர் 11, 2026 அன்று கிரீஸ் நாட்டில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அனிருத் – காவ்யா மாறன் திருமணம் நடைபெற்றுள்ளது. நவம்பர் 10ஆம் தேதி முதல் திருமணக் கொண்டாட்டங்கள் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமணத்திற்கு பிறகு அனிருத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மனைவி காவ்யாவுடன் இருக்கும் முதல் புகைப்படத்தை பகிர்ந்தார். அதனுடன், 'My once in a lifetime, for a lifetime' என்ற அழகான வாசகத்தையும் 11.11 என்ற தேதியையும் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு ரசிகர்களின் கவனத்தைபெரிதும் ஈர்த்தது.
திருமணப் புகைப்படங்களில் அனிருத் வெள்ளை நிற வேஷ்டி, குர்தா மற்றும் வேலைப்பாடுகள் நிறைந்த மேலாடையிலும், காவ்யா இளஞ்சிவப்பு நிற அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட லெஹங்காவிலும் அழகாகக் காட்சியளித்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பின்னணியில், மலர்த் தூவல்களுக்கு இடையே இருவரும் கைகோர்த்து நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்தத் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னாள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் விழாவில் பங்கேற்றுள்ளார். அனிருத், ரஜினிகாந்தின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காவ்யா மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், சன் டிவி நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பு வகிக்கிறார். கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவரது முகம் மிகவும் பரிச்சயமானது.
இவர்களது திருமண வரவேற்பு நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பை காவ்யாவின் பெற்றோர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு வழங்கியதைத் தொடர்ந்து, தெலங்கானா முதல்வர் அலுவலகமும் வரவேற்புத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
கிரீஸிலும் மாறாத தமிழர் பாரம்பரியம் :
வெளிநாட்டில் திருமணம் நடைபெற்றாலும், தமிழர் பாரம்பரியத்துக்கு இந்த தம்பதியினர் முக்கியத்துவம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.. நவம்பர் 10ம்தேதி பாரம்பரிய தமிழ் முறைப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.. இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் கிரீஸ் நாட்டில் நடைபெற்ற திருமண விருந்துக்கான உணவு ஏற்பாடுகளை சென்னையை சேர்ந்த அறுசுவை அரசு கேட்டரர்ஸ் கவனித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
அதேபோல் இவர்களது திருமண வரவேற்புக்கான அழைப்பிதழும் தனிக் கவனம் பெற்றுள்ளது..ஐவரி, பவுடர் ப்ளூ நிறங்களுடன் பாரோக் கலைப் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த அழைப்பிதழை ரஞ்சனி ஐயங்கார் வடிவமைத்துள்ளார்..அழைப்பிதழின் வடிவமைப்பில் அனிருத்,காவ்யா இருவரும் நேரடியாகப் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.. இப்படி திருமணத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் தனித்துவத்தை வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அழைப்பிதழிலும் ஒரு கலைநயம் :
இந்தத் திருமணத்தைப் போலவே அழைப்பிதழ் தயாரிப்பிலும் தம்பதியினர் தனிக்கவனம் செலுத்தியுள்ளனர்.. சுமார் 10 முதல் 12 அலங்காரச் செதுக்கல்கள், முப்பரிமாண வேலைப்பாடுகள், கையால் வரையப்பட்ட வண்ண அலங்காரங்கள் என ஒவ்வொரு அம்சமும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.. அழைப்பிதழ் என்பது ஒரு நிகழ்ச்சிக்கான அழைப்பாக மட்டும் அல்லாமல் திருமண நினைவாக நீண்ட காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அவர்களது விருப்பம்.. எளிமையான விருப்பத்தை அழகான கலைப் படைப்பாக மாற்றி இருப்பது உண்மையிலேயே வியப்பளிக்கிறது..
சென்னையில் ரிசப்ஷன் எங்கே?
கிரீஸில் திருமணக் கொண்டாட்டங்களை முடித்துக் கொண்ட அனிருத் _ காவ்யா தம்பதியினரின் வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்னையும் தயாராகி வருகிறது.. நவம்பர் 21 ம்தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இந்த வரவேற்பு நடைபெற இருப்பதாக அழைப்பிதழ் தொடர்பான செய்திகள் தெரிவிக்கின்றன..
இந்த விழாவுக்கு அரசியல் தலைவர்கள் (முதலமைச்சர் விஜய் முதல் பிரதமர் நரேந்திர மோடி வரை ) ,திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..இசையுலகையும் கிரிக்கெட் உலகையும் இணைக்கும் இந்தக் கொண்டாட்டத்தில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது..
அனிருத்தின் இசை ரசிகர்களும் , ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதாராபாத்அணியின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான காவ்யாவின் ரசிகர்களும் இந்த திருமணக் கொண்டாட்டத்தை ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.. இசையுலகமும் கிரிக்கெட் உலகமும் இணையும் இந்த இனிய நிகழ்வு ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன!