
இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் அனுராக் காஷ்யப், இந்தித் திரைப்படத் துறையின் மீதான தனது விரக்தியை மீண்டும் வலியுறுத்தி, பாலிவுட்டில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் பாலிவுட் திரையுலகம் ‘டாக்சிக்’ திரையுலகம் என்றும் அவர் சாடியுள்ளார். பாக்ஸ் ஆபிஸ் எண்ணிக்கை மீதான தொழில்துறையின் அதிகரித்து வரும் மோகம் மற்றும் படைப்பு சுதந்திரத்திற்கான இடம் சுருங்கி வருவதை மேற்கோள் காட்டி, காஷ்யப் தனது முடிவை உறுதிப்படுத்தினார்.
தேவ் டி , அக்லி , பாஞ்ச் , பிளாக் ப்ரைடே , கேங்ஸ் ஆப் வாஸீப்பூர் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் அனுராக் கஷ்யப். இவரது பல படங்கள் திரையரங்கில் வெளியாவதற்கு முன்பாகவே தடை செய்யப்பட்டுள்ளன. இவரின் ‘கேங்ஸ் ஆஃப் வசேபூர்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 1993 மும்பை குண்டு வெடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவரது பிளாக் ஃபிரைடே என்கிற திரைப்படம் பல தேசிய விருதுகளை வென்றதுடன் பல சர்ச்சைகளையும் உண்டாக்கியது.
அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் இவரது மிரட்டலான வில்லன் கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. 'மகாராஜா' படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான 'லியோ' மற்றும் வெற்றிமாறனின்'விடுதலை 2' படத்திலும் நடித்துள்ளார்.
இதற்கிடையில், அதிரடி த்ரில்லர் படமான ரைபிள் கிளப் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் அனுராக் காஷ்யப் இரக்கமற்ற கொடூரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். மேலும் இவர் ஒன் 2 ஒன் என்ற தமிழ் படத்திலும், தெலுங்கு, இந்தியில் உருவாகும் டகோயிட்: எ லவ் ஸ்டோரி என்ற படத்திலும் நடிக்கிறார். ‘பேட் கேர்ள்’ (BAD GIRL) என்ற படத்தை இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகும் ‘டகோயிட்’ என்ற படத்தில் அச்சமற்ற போலீஸ்காரராக நடிக்கிறார்.
பாலிவுட் திரைப்படத் துறையினரிடமிருந்து நான் விலகி இருக்க விரும்புகிறேன். இந்தத் துறை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறிவிட்டது. அனைவரும் பாக்ஸ் ஆபிஸ் வெறி கொண்டு, நம்பத்தகாத இலக்குகளைத் துரத்துகிறார்கள், அடுத்த ரூ. 500 அல்லது ரூ. 800 கோடி படத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். படைப்புச் சூழல் போய்விட்டது என்று அவர் கூறினார்.
பாலிவுட் மீது அடிக்கடி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் காஷ்யப், மும்பையை விட்டு வெளியேறும் முடிவு, இந்தித் திரைப்படத் துறையின் மீதான ஏமாற்றத்தால் ஏற்பட்டது என்றும் அவர் கூறினார்.
அதுமட்டுமின்றி பாலிவுட்டில் படைப்பாற்றல் பின்தங்கியிருப்பதாகவும், நடிகர்கள் அர்த்தமுள்ள சினிமாவை விட ஆடம்பரத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும், தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்கள் துணிச்சலான கதைசொல்லலில் இருந்து விலகி இருப்பதாகவும் அவர் புலம்பினார். தென்னிந்திய திரைப்பட இயக்குநர்களை பார்க்கும்போது பொறாமையாக உள்ளது என்றும் சுகுமாரின் 2024 தெலுங்கு திரைப்படமான புஷ்பா 2: தி ரூல் வெளியான பிறகு, பாலிவுட் ஒருபோதும் அப்படி ஒரு படத்தை உருவாக்க முடியாது என்றும் கூறினார்.
தனது வாழ்க்கையை மாற்றிய முடிவைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது, பாலிவுட்டில் உள்ளவர்கள் மற்றவர்களை வீழ்த்த முயற்சிக்கிறார்கள் என்று அவர் கூறினார். மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்துவது போன்ற தனது எதிர்காலத் திட்டங்களை மன அழுத்தமில்லாமல் செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
இவர் தனது படைப்பு ஆசைகளை நிறைவேற்ற தென்னிந்திய சினிமாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதால் பெங்களூருக்கு குடியேற உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தாலும் அனுராக் காஷ்யப் குடியேறும் இடத்தை ரகரியமாக வைத்துள்ளார்.