
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் , நடிகர் மற்றும் இயக்குனர் என்ற பன்முகத்தில் ஜொலிக்கும் பிரபு தேவா, ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி சேர்ந்திருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘ஜென்டில்மேன்' படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரெயிலே...' பாடலுக்கு பிரபுதேவா ஆடிய ஆட்டம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக 'பேட்டராப்', 'ஊர்வசி ஊர்வசி', 'முக்காலா முக்காபுலா', 'வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா' உள்ளிட்ட பாடல்கள் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்காகவும், பிரபுதேவாவின் நடனத்திற்காகவும் இன்றுவரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தது என்றே சொல்ல வேண்டும். முதன்முறையாக ஜென்டில்மேன் படத்தில் ஒரு பாடலுக்கு இணைந்த இவர்கள் 1994-ம் ஆண்டு வெளியான 'காதலன்' படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்தன் மூலம் இணைந்தார்கள். அதனைத்தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘காதலன்', ‘லவ் பேர்ட்ஸ்', ‘மிஸ்டர் ரோமியோ', ‘மின்சார கனவு' படங்களுக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் மின்சார கனவு திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு என்.எஸ்.மனோஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மூன்வாக்' என்ற படத்தில் ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் அதாவது இரு ஜாம்பவான்களும் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏனெனில் இதற்கு முன் இந்த கூட்டணியில் வெளியாக பாடல் மற்றும் நடனம் அதிரடியாக இருந்தால் இந்த படத்திலும் அதைபோல் மாஸ்ஸாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தப் படத்துக்காக, ஒரு பாடல் காட்சியை முழுவதும் கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பான் இந்திய ரீதியில் வெளியாகும் இந்தப் படம் தற்போது படப்பிடிப்பும், எடிட்டிங்கும் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் வேகமாக முன்னெடுக்கப்படுகிறது.
இந்த படம் இசை, நடனம், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் வகையில் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மனோஜ் என்எஸ் இயக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்க்ஸி, லொள்ளு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர், மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனூப் வி.எஸ் ஒளிப்பதிவும், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.