
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் வரும் ஜூன் 5-ம்தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கமலுடன் சிலம்பரசன், திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக தக் லைஃவ் உருவாகியுள்ளது.
பல்வேறு சிறப்பு அம்சங்களுக்காக இந்த படம் ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 38 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள படம், மணிரத்னம்-கமல்ஹாசன்-ஏ.ஆர்.ரகுமான் என மூன்று லெஜண்ட்கள் இணைந்துள்ளது மற்றும் முதல் முறையாக கூட்டணி சேர்ந்துள்ள கமல்ஹாசன்-சிம்பு என இந்த காரணங்களுக்காக இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று சொல்லலாம். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் மற்றும் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் அன்பரிவ் செய்துள்ளார்.
இந்த படத்தில் கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இதை இயக்குனர் மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் "சக்தி, கிளர்ச்சி மற்றும் வெற்றியின் காவியக் கதை" என்று விவரித்திருந்தது.
பட ப்ரோமோஷன் வேலையில் பட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் அப்படக்குழுவினர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றி வருகின்றனர். இதன் பட ப்ரோமோஷன் விழாவில் பங்கேற்று வரும் கமல்ஹாசன் சினிமா குறித்து பேசும் பல விஷயங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் ‘சுகர் பேபி’ பாடல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது மட்டுமில்லாமல் படத்திற்காக எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இந்த படத்தின் டிரெய்லர் கடந்த மே 17-ம்தேதி வெளியிடப்பட்ட நிலையில் படத்தின் இசை வெளியீடு இன்று (மே 24) மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது குழுவினரின் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் படக்குழு மற்றும் முக்கிய பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
முன்னதாக, இசை வெளியீட்டு விழா மே 16-ம் தேதி சென்னையில் நடைபெறவிருந்தது. இந்தியா-பாகிஸ்தான் மோதல்கள் காரணமாக, இசை வெளியீட்டை தயாரிப்பாளர்கள் ஒத்திவைத்தது குறிப்பிட்டதக்கது.