ARM Review
ARM Review

விமர்சனம்: ARM - 'அஜயன்டே ரண்டாம் மோஷனம்'!

Published on
ரேட்டிங்(3 / 5)

ந்தியா முழுவதும் செவிவழிக் கதைகளாக பல்வேறு கர்ண பரம்பரை கதைகள் தலைமுறை தலைமுறைகளாக சொல்லப்பட்டு வருகின்றன. இந்தக் கதைகள் வழியாக மானுடம், வாழ்வியல், நீதி ஆகியவை போதிக்கப்படுகின்றன. இதுபோன்ற கதைகளை சினிமாவாக உருவாக்குவதில் திறமைசாலிகள் மலையாளிகள். அந்த வகையில் கேரள  நாட்டுப்புற செவிவழிக் கதை ஒன்றை மையமாக வைத்து வெளிவந்துள்ள படம், 'அஜயன்டே ரண்டாம் மோஷனம்.' இதை சுருக்கி ARM என்று பெயர் வைத்திருக்கிறார்கள். டோவினோ தாமஸின் 50வது படமாக வந்துள்ள இந்தப் படத்தை ஜித்தன் லால் இயக்கி உள்ளார்.

ARM Review
ARM Review

மன்னர் காலத்தில், ‘குஞ்சு கெழு’ என்ற மாவீரன் இருக்கிறார். அவரது வீரத்துக்கு பரிசாக விண்கல்லில் இருந்து உருவாக்கப்பட்ட ஜ்யோதி விளக்கு ஒன்றை மன்னரிடம் இருந்து பரிசாகப் பெறுகிறார். குஞ்சு கெழுவும் அந்த விளக்கை தனது ஸ்ரீபுரம் கிராமத்திற்குக் கொண்டு வந்து கோயில் கட்டி ஆண்டுக்கு ஒரு முறை அதை மக்கள் பார்வையிட வகை செய்கிறார். மன்னர் தனக்குத் தந்தது உண்மையான ஜ்யோதி விளக்கு அல்ல, போலி என குஞ்சு கெழுவுக்கு இறக்கும் தருவாயில் தெரிய வருகிறது. சில நூற்றாண்டுகளுக்குப் பின்பு, 50 ஆண்டுகளுக்கு முன்பு  கெழுவின் வம்சத்தில் இருக்கும் மணியன் என்பவருக்கு இந்த உண்மை தெரிய வர, உண்மையான ஜ்யோதி விளக்கைத் திருடுகிறார். இதனால் ஊர் அவரை துரத்த அவர் மறைந்து விடுகிறார்.

இன்றைய சமகாலத்தில் வாழும் இவரது பேரன் அஜயன் சிறு சிறு எலக்ட்ரிக் வேலை செய்து தனது அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். கூடவே களரி பயிற்சியும் செய்து வருகிறார். இருந்தாலும் திருட்டு பரம்பரை என்ற முத்திரை குத்தி அவனை ஊர் அவமானப்படுத்தி வருகிறது. அந்த ஊருக்கு வரும் சுகதேவ் என்பவரால் அஜயனுக்கு விளக்கை வைத்து பிரச்னை வருகிறது. இந்தப் பிரச்னை என்ன? அஜயனின் குடும்பத்தின் மீது இருக்கும் அவமானம் நீங்கியாதா என்பதுதான் இந்த, ‘அஜயன்டே ரண்டாம் மோஷனம்’ படத்தின் கதை.

அரண்மனை, கடற்கரை, மன்னர் என அன்றைய சேர தேசத்தை (இன்றைய கேரளா) ஒரு கதையின்  வழியே விவரிக்கும்போதே திரைக்குள் நம்மைக் கொண்டு வந்து விடுகிறார் டைரக்டர். மணியன் காட்சிகளும், அஜயன் காட்சிகளும் மாறி, மாறி வந்தாலும் குழப்பமில்லாமல் படம் செல்கிறது. இருந்தாலும் திரைக்கதை ஒரு கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. வில்லனுக்கு ஹீரோவை பிடிக்கவில்லை என்றாலும் வில்லனின்  மகள் ஹீரோவை காதல் செய்யும் 'மேஜிக்' இந்தப் படத்திலும் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
கையில் ரம்பம்… சுவற்றில் ரத்தம்… அய்யய்யோ பேயின் சத்தம்! 
ARM Review

கேரளாவிற்கே உரித்தான ஜண்டை, ஓவியம், களரி என காட்சிகளின் பின்புலத்தில் இருப்பது ஒரு கேரள வாழ்க்கையை  நேரில் பார்த்த உணர்வைத் தருகிறது. இதுபோன்ற கதைகளில் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் இருவரும் டைரக்டரின் எண்ண ஓட்டத்தை மிக துல்லியமாகப் புரிந்து செயல்பட்டு இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ஜோமன் T.ஜான், பட தொகுப்பாளர் சமீர் முகமது இருவரும் ஒவ்வொரு காட்சியிலும் டைரக்டரின் மனதை சரியாக புரிந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆரம்ப சண்டைக் காட்சிகள், திருவிழா என பல காட்சிகளில் படத் தொகுப்பு மற்றும்  ஒளிப்பதிவின் முத்திரை தெரிகிறது.

ARM - Tovino Thomas
Tovino Thomas

ஆங்காங்கே திணரும் திரைக்கதையை  தாங்கிப் பிடிப்பது டொவினோ தாமஸ் நடிப்புதான். மூன்று காலகட்டத்தில் நடிக்கும்போது முக பாவனைகள் மட்டுமில்லாது, உடல் மொழியிலும் வேறுபாடு காட்டுகிறார். தன்னைத் திருடன் என்று சொல்லும்போது, ‘நான் திருடன்தான்’ என்று தெனாவட்டாக நிற்கும் மணியனும், செய்யாத திருட்டுக்காக கூனி குறுகி நிற்கும்  அஜயனும்  'சபாஷ் சேட்டா' என்று சொல்ல வைக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி ஷெட்டி, சுரபி லக்ஷ்மி என மூன்று ஹீரோயின்கள் படத்தில் இருக்கிறார்கள். மூவரில் ஜொலிப்பது சுரபிதான். கள்ளச் சிரிப்பு என்பார்களே இதை கண்ணில் காட்டுகிறார் சுரபி. போலீஸ் கைது செய்ய வரும்போது, கண்டுகொள்ளாமல் அரிசியில் கல் பொறுக்குவதும், கணவனிடம் பொங்கும் போதும் சேச்சியின் நடிப்பு பிரமாதம்.

இதையும் படியுங்கள்:
இந்தப் படத்தை இரவில் பார்க்க உங்களுக்கு தைரியம் இருக்கா?
ARM Review

வில்லனாக வரும் ஹரிஷ் உத்தமன் அளவாக நடித்திருக்கிறார். ‘ராஜாக்கள் செய்றது திருட்டு இல்லை, ராஜதந்திரம்’ என இவர் சொல்லும் வசனம் இன்றைய சமகால அரசியலைப் பற்றி யோசிக்க வைக்கிறது. ஜாதிய கண்ணோட்டத்துடன் மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பது என்பதை பிரசாரமாக இல்லாமல், இயல்பாக சொல்கிறது இப்படம். திரைக்கதை வலுவாக இருந்திருந்தால், படத்தின் கருத்தும் மனதில் இன்னும் ஆழமாகப் பதிந்திருக்கும். ஒரு மாறுட்ட  மலையாள உலகை காண நினைப்பவர்களுக்கு இந்த ARM திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்.

logo
Kalki Online
kalkionline.com