
உருவகேலி செய்யும் வகையில் பேசிய ஹிந்தி தொலைக்காட்சி நடிகர் கபில் சர்மாவுக்கு நேருக்கு நேர் நெத்தியடி பதில் கொடுத்த இயக்குநர் அட்லியின் தற்போது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அட்லீ இயக்குநர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து விட்டு 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைதொடர்ந்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கி முன்னணி டைரக்டராக உயர்ந்தவர் அட்லி.
இவரது இயக்கத்தில் இந்தியில் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா நடித்து வெளிவந்த 'ஜவான்' திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.
ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு அட்லிக்கு பல இந்தி படங்களை இயக்க வாய்ப்புகள் வருகின்றன. இந்த நிலையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அட்லியை உருவக்கேலி செய்த சம்பவம் பரபரப்பாகி உள்ளது. அட்லீ தனது பேபி ஜான் படத்தை விளம்பரப்படுத்த கபில் சர்மா ஷோவிற்கு வருகை தந்தார். அவருடன் பாலிவுட் நட்சத்திரம் வருண் தவான் மற்றும் நடிகை வாமிகா கபி ஆகியோரும் பங்கேற்றனர்.
அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கபில் சர்மா அட்லியிடம், “இளம் வயதில் பிரபல இயக்குனராக உயர்ந்து இருக்கிறீர்கள். ஒரு பெரிய நடிகரை நீங்கள் சந்திக்க சென்று அவர் உங்கள் தோற்றத்தை பார்த்து நீங்கள்தான் அட்லியா? என்று கேட்டு இருக்கிறாரா?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு நெத்தியடியாக பதிலடி கொடுத்து அட்லி, “என்னுடைய முதல் படத்தை தயாரித்த ஏ.ஆர்.முருகதாஸ் சார் அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர் ஒரு ஸ்கிரிப்டைக் கேட்டார், ஆனால் நான் எப்படி இருக்கிறேன் அல்லது நான் அதைச் செய்ய முடியுமா இல்லையா என்பதை அவர் பார்க்கவில்லை. ஆனால், அவர் என் கதையை விரும்பினார். ஒருவரை தோற்றத்தை வைத்து மதிப்பிடக்கூடாது. இதயத்தை வைத்துதான் மதிப்பிட வேண்டும். இந்தியில் ஜவான் வெற்றிப்படம் கொடுத்த என்னை பார்த்து இதுபோன்ற கேள்வியை கேட்கலாமா?'' என்றார்.
அந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி வைரலானதையடுத்து நிகழ்ச்சியின் போது அட்லியின் தோற்றத்தை தொகுப்பாளர் கபில் சர்மா நுட்பமாக கேலி செய்ததாக பயனர்கள் பலர் பல்வேறு விமர்சனங்களை பதிவு செய்தனர்.
எபிசோடில் இருந்து ஒரு கிளிப்பைப் பகிர்ந்து, X இல் ஒரு பயனர் "கபில் ஷர்மா நுட்பமாக அட்லீயின் தோற்றத்தை அவமதிக்கிறாரா? அட்லீ ஒரு முதலாளியைப் போல் பதிலளித்தார்" என்று பதிவிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக கபில் சர்மா, எபிசோடில் தோற்றத்தைப் பற்றி ஒருபோதும் பேசவில்லை என்று கடுமையாக மறுத்துள்ளார். முழு வீடியோவையும் பார்க்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். இது குறித்து அட்லீ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.
இந்நிலையில் கபில் சர்மா இடுகைக்கு நேரடியாக பதிலளித்துள்ளார், "அன்புள்ள ஐயா, இந்த வீடியோவில் தோற்றம் பற்றி நான் எங்கே, எப்போது பேசினேன் என்பதை தயவுசெய்து விளக்க முடியுமா? தயவு செய்து சமூக ஊடகங்களில் வெறுப்பை பரப்ப வேண்டாம். (நண்பர்களே, நீங்களே பார்த்து முடிவு செய்யுங்கள்; ஆடுகளைப் போல் யாருடைய ட்வீட்டையும் பின்பற்றாதீர்கள்). நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.