திரைப்படப் பின்னணி பாடகிகள் என்றாலே 1960 மற்றும் 70ம் ஆண்டுகளில் முதல் இரண்டு மூன்று பேர்களில் ஒருவராக பெருமையாகச் சொல்லப்பட்டவர் எல்.ஆர்.ஈஸ்வரி. காரணம், இவரது கணீரென்ற குரல். சினிமா பாடல்கள் என்றாலும் சரி, பக்திப் பாடல்கள் என்றாலும் சரி இவரது குரல் அனைத்துக்கும் பொருத்தமாக இருக்கும் என்று பலராலும் சொல்லப்பட்டவர். வித்தியாசமான வளமும் வசீகரமும் கொண்ட இவர் பாடிய பாடல்கள் கேட்பவர்களை தன்னை மறந்து ஆட வைக்கும்.
தொடக்கத்தில் குழு பாடல்களில் பங்களிப்பு செய்த இவரின் தனித்துவமான குரலை அடையாளம் கண்டு திரையிசை பயணத்தைத் துவக்கி வைத்தவர் திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன். லூர்து மேரி ராஜேஸ்வரியாக அடியெடுத்து வைத்த இவர் எல்.ஆர்.ஈஸ்வரியாக பாடத் துவங்கினார். அப்படி இவர் பாடிய பாடல்களின் ஊடான பயணத்தில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் ‘பாச மலர்' படத்தின் 'வாராயோ தோழி வாராயோ' எனும் அசத்தலான பாடலுக்குப் பின் மக்களிடையே அதிகம் கவனம் பெற்றார்.
அதைத் தொடர்ந்து பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் தனித்தும், இணைந்தும் கொடிகட்டிப் பறந்த அந்தக் குரல் தற்போது வரை தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று வெவ்வேறு மொழிகளிலும் கொண்டாடப்படுகிறது. தனியாகவும், இணை குரலாகவும் ஒலித்த எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் இரவு பகல் என எந்தப் பொழுதுக்கும், எந்த உணர்வுக்கும் ஏற்றவாறு ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தது என்றால் அது மிகையில்லை.
தன்னுடன் சேர்ந்து பாடும் இணைக் குரல்களின் தனித்தன்மைக்கு ஏற்ப இயைந்து பாடி தனித்துவத்தை நிரூபிப்பதில் வல்லவர் எல்.ஆர்.ஈஸ்வரி. உதாரணமாக, ‘மன்மத லீலை’ படத்தில் வரும் ‘ஹலோ மை டியர் ராங் நம்பர்’ பாடலில் இணைந்து பாடிய யேசுதாஸ் குரலின் மென்மையான குரலிற்கேற்பவும் பாட முடியும் எனப் பாடி பாராட்டுப் பெற்றவர்.
தனது அற்புதமான மென்குரலால், 'காதோடுதான் நான் பாடுவேன்' என்று பாடி ஜோடிகளை புளகாங்கிதம் கொள்ளவைத்த அதே குரல்தான், ‘பட்டத்து ராணி பார்க்கும் பார்வை' என்று அலட்டலான, அதிரடியாக பாடி அசத்தியது. ‘அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்‘ என சமூகத்தின் அவலங்களை கம்பீரமாக உரத்துக் காட்டியது.
‘கறுப்புப் பணம்’ படத்தில் இடம்பெற்ற, 'ஆடவரெல்லாம் ஆட வரலாம்' பாடல் அவரது குரலின் வேறொரு பரிமாணம் காட்டியது. அந்நாட்களில் படங்கள் தோறும் நிச்சயம் இடம்பெற்ற கவர்ச்சி வகை நடனத்துக்கான பாடல்களுக்கு ஈஸ்வரிதான் என்ற முத்திரை குத்தப்பட்டு அதிலும் தான் சளைத்தவரில்லை என குத்தாட்டம் போட வைத்த பாடல்களைப் பாடி அசத்தினார்.
இசைவாணியாக கொடிகட்டிப் பறந்த பி.சுசீலாவோடு இணைந்து இவர் பாடிய பாடல்கள் ‘கட்டோடு குழலாட ஆட’, ‘அடி போடி பைத்தியக்காரி’, ‘உனது மலர்க்கொடியிலே எனது மலர் மடியிலே’, ‘மலருக்குத் தென்றல் பகையானால்’ உள்ளிட்ட பல பாடல்கள் நட்பின் வெவ்வேறு மனநிலையின் வடிவங்களாக மனம் நெகிழ வைத்தது எனலாம்.
கணக்கில்லாத திரைப்பாடல்கள் மட்டுமல்ல, பக்தியுணர்வுடன் அவர் பாடிய ‘கற்பூர நாயகியே கனகவல்லி, செல்லாத்தா… செல்ல மாரியாத்தா’ பாடல்கள் இப்போதும் எண்ணற்ற பாமர மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த பக்திப் பாடல்களாகத் திகழ்கின்றன.
பெரிய குங்குமப் பொட்டுடன், தலை நிறைய பூவுடன், சிரித்த களையான முகத்துடன் இவர் பாடிய இந்தப் பாடல்கள் மூலம் நேரில் காணாத கடவுளை மனதார தரிசித்து ஆனந்தம் அடைந்தவர்கள் ஏராளம். கடவுள் நம்பிக்கையற்றோரையும் ஈர்க்கும் இவ்வகைப் பாடல்கள் மதங்களைப் தாண்டி இசையை ரசிக்கும்படி பலரையும் ஈர்த்தது.
தலைமுறைகள் கடந்தும் தனது அட்டகாசமான குரலில் சளைக்காமல் இன்று வரை தனது இசைப் பயணத்தைத் தொடர்ந்து வரும் எல்.ஆர்.ஈஸ்வரி இக்கால தலைமுறையினராலும் விரும்பப்படுவது சிறப்பு. சமீபத்தில் தனது 85ம் வயதை அவர் எட்டியிருந்தாலும் என்றும் இளமை குன்றாத இசையரசியாகவே நம் காதுகளிலும் மனங்களிலும் நிறைந்திருக்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி.