

மஞ்சுமல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம், 'பாலன்: தி பாய்' என்ற படத்தை தற்போது இயக்கியுள்ளார். படத்தின் நாயகி பர்சானா முதல் காட்சியில் சிறையில் இருந்து விடுதலை ஆகிறார். இவருக்கு சிறு வயது மகன் இருக்கிறான். தான் சிறையில் இருந்ததை மறைத்து பல இடங்களில் வேலைக்கு செல்கிறார். தன் மகனிடமும் சிறையில் இருந்ததை சொல்லக்கூடாது என்று சொல்லி விடுகிறார் பர்சானா. வேலைக்கு பல்வேறு இடங்களுக்கு செல்கிறார். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. தொடர்ந்து அம்மாவும் மகனும் இருவரும் நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு கிராமத்தில் ஒரு வயதான பாட்டி மட்டுமே இருக்கும் வீட்டில் வேலைக்கு செல்கிறார் பர்சானா. பாட்டி வீட்டில் அம்மாவும், மகனும் தங்குகிறார்கள். அந்தப் பாட்டி ஆரம்பத்தில் மிகவும் கண்டிப்புடன், பின்பு கொஞ்சம் அன்புடனும் இருக்கிறார். 'பிரச்சனை தீர்ந்தது இனி நாம் ஓடவேண்டியது இல்லை' என்று நினைக்கும் நேரத்தில் பாட்டி இறந்து விட வேறு ஒர பிரச்சனை வருகிறது. அது என்ன பிரச்சனை? இதற்கு என்ன தீர்வு? என்று சொல்கிறது 'பாலன்: தி பாய்'.
இதுவரை இங்கே சொன்ன விஷயங்கள் படத்தின் கதையில் ஒரு பாதி தான். படத்தின் இரண்டாவது பாதி வேறொரு திசையை நோக்கி நகர்கிறது. ஒரு சிறு ஒன்லைனை கூட வைத்துக் கொண்டு அதை பெரிதாக்கி ஒரு பரபரப்பான த்ரில்லர் கதையை உருவாக்குவதில் வல்லவர்கள் மலையாள எழுத்தாளர்கள் மற்றும் இயக்குனர்கள்.
இந்த படத்திலும் ஒரு சிறிய ஒன்லைனை வைத்துக் கொண்டு ஒரு மிகப்பெரிய விஷயத்தை கையாண்டு இருக்கிறார் டைரக்டர். இது மஞ்சுமல் பாய்ஸ் போன்றே ஒரு சர்வைவல் திரில்லர் படமாகும். இதில் அம்மா மகன் சென்டிமென்ட் கலந்து உள்ளது. படத்தின் முதல் பாதை பர்சானா ஒவ்வொரு இடமாக நகரும்போது 'இவர் எங்கே மாட்டிக் கொள்வாரோ' இவரின் உண்மையாக ரூபம் தெரிந்து விடுமோ என்று நாம் பயப்படும் அளவிற்கு திரைக்கதை வலுவாகவும், பரபரப்பாகவும் இருக்கிறது.
ஆனால் படத்தின் இரண்டாம் பாதை சற்று பொறுமையை சோதிக்கிறது. இருந்தாலும் கிளைமாக்ஸில் நாம் எதிர்பாராத ஒரு ட்விஸ்ட் வந்து ஒட்டுமொத்த படத்தை தூக்கி நிறுத்தி விடுகிறது. படத்தின் பரபரப்பான திரில்லர் நடுவில் கேரளாவின் சமகால வாழ்வியல் சொல்லப்பட்டிருக்கிறது. இன்று பல கேரள கிராமங்களில் வீடுகளில் இளைஞர்கள் இல்லாமல் இருக்கிறார்கள். கேரளா வீடுகளில் முதியவர்கள் தனிமையை அனுபவித்து வருகிறார்கள். இந்த முதியவர்களின் மகன்களும், மகள்களும் வளைகுடா நாட்டில் வேலை செய்கிறார்கள். கேரள வீடுகளில் சொல்லப்படாத ஒரு தனிமை நிலவுகிறது. இந்தத் தனிமையை பாட்டி வசிக்கும் வீட்டின் வழியாகவும், பாட்டியின் கேரக்டர் வழியாகவும் நம்மிடையே உணர்த்தி இருக்கிறார் டைரக்டர்.
'போராடும் உயிர்கள் மட்டுமே வாழும்' என்ற நியதிக்கு ஏற்ப ஒவ்வொரு இடத்திலும் படத்தின் நாயகி பர்சானா ஒரு போராட்டத்தை சந்தித்து எப்படி தப்பிக்கிறார்? என்று சுவாரசியமாக சொல்லப்பட்டிருக்கிறது. தன்னுடைய உண்மையான முகம் வெளிப்பட்டு விடக்கூடாது என்ற பயம், மற்றொருபுறம் தன் மகனுக்கோ, தனக்கோ பிரச்சனை வந்தால் எதிர்கொள்ளும் போது வரும் கோபம் என நாயகி பர்சானா படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். இரண்டு அல்லது மூன்று முக பாவனைகள் மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார்.
படத்தில் சிறுவனாக வரும் ஆதிசேஷன் 'சபாஷ் தம்பி' என்று சொல்லும் அளவிற்கு பிரமாதமாக நடித்துள்ளார். அதிக வசனங்கள் இல்லை. ஆனால் முகத்தில் சிறு உணர்ச்சியை மட்டுமே வைத்துக் கொண்டு நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்கள் கூட மிகவும் நேர்த்தியாகவும், சரியாகவும் நடித்துள்ளார்கள். பாட்டியாக நடிக்கும் பெண்மணி உட்கார்ந்த இடத்திலிருந்து மிரட்டுவதும், அன்பிற்கு ஏங்குவதும் என நடிப்பில் அமர்க்கள படுத்தியிருக்கிறார். பவித்ரன் என்ற பெயரில் வரும் போலீஸ்காரர் அதிகமாக கத்தாமல், யாரையும் அடிக்காமல், சிறு உணர்ச்சிகள் மூலம் சைக்கோ தனம் கலந்த போலீஸ்காரராக நடித்திருக்கிறார்.
ஒரு பெரிய ஹீரோ கூட ஒரு சிறுவனை மையப்படுத்தி எடுத்த கதையில் சிறு ரோலில் நடிக்க முடியும் என்றால் அது மலையாள சினிமாவில் மட்டுமே சாத்தியம். மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருக்கும் டொவினோ தாமஸ் 'அப்பாஸ்' என்ற ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இவர் சில காட்சிகள் வந்தாலும் நடிப்பு பேசும்படியாக இருக்கிறது. ஒரு படத்தின் வெற்றியின் ரகசியம் என்பது பிரம்மாண்டத்தில் இல்லை. எழுத்தில் தான் இருக்கிறது என்பதை இப்படம் உணர்த்தி இருக்கிறது. ஜித்து மாதவன் எழுத்தில் திரைக்கதை இப்படத்திற்கு பெரிய பலம்.
சைஜூ காலித் ஒளிப்பதிவில் கேரளாவின் காடுகளும், அந்த தனிமையான வீடும் ஏதோ ஒரு கதையை சொல்வது போலவே உள்ளது. சுஷின் ஷ்யாம் இசை கொஞ்சம் ரம்யமாகவும் அதிகம் பரபரப்பும் கலந்து இருக்கிறது.
முதல் பாதியில் இருக்கும் பரபரப்பை இரண்டாம் பாதியிலும் முழுமையாக தக்க வைத்திருந்தால் இப்படம் இன்னொரு மஞ்சுமல் பாய்ஸ் என்று சொல்லி இருக்கலாம்.
இருந்தாலும் கதை நகரும் விதம், கதாபாத்திரம், நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் போன்ற அனைத்தையும் சரியான விகிதத்தில் கலந்து வந்துள்ள சர்வைவல் திரில்லர் படம் என்று இந்த 'பாலன்: தி பாய்' சொல்லலாம்.
பாலன்: தி பாய் - ரசிக்கலாம்.