
சினிமா பிடிக்காதவர்கள் அன்று இல்லவே இல்லை. குடும்பம் குடும்பமாக சினிமா செல்வது வாடிக்கை. இந்த கலாச்சாரம் நன்றாகவே இருந்தது. ஆனால் கடைசி 20 வருடங்களாக சினிமா வீடியோ மற்றும் டிவி வரவால், சினிமா தொழில் நசுங்கியது. சென்ற 25 வருடங்களில் பல திரை அரங்கங்கள் மூடப்பட்டன. தமிழ் நாட்டில் மட்டுமே சுமார் 3000 திரை அரங்குகள் மூடப்பட்டன.
சென்னையில் புதிதாக மால்கள் வந்தன. ஐ. டி. ஊழியர்களுக்காகவே இவை வந்தன. டிக்கெட் விலை ₹250, காபி ₹150, பாப் கார்ன் ₹100. நடுத்தர வர்க்கம் கூட போக முடியாத நிலை.
மால்கள் ஐ. டி. ஊழியர்களை நன்கு சுரண்டின.
சினிமா என்பது மிக பெரிய பொழுது போக்கு சாதனம்.
தாமஸ் ஆல்வா எடிசனுக்கு ஒரு சல்யூட். நான் இங்கே எழுத விரும்பியது இது அல்ல.
நல்ல சினிமா ரசனை பற்றிதான்.
நான் 6 வது படிக்கும் போது முதன்முதலாக வீட்டிற்கு தெரியாமல் பார்த்த படம் “காதலிக்க நேரமில்லை… “
எனக்கு படம் பிடித்து இருந்தது. வீட்டிற்கு பக்கம் உள்ள நண்பர்களுடன் வாராவாரம் சனி மற்றும் ஞாயிறு அன்று சினிமா போய் விடுவோம்.
எல்லாம் விலை குறைந்த பென்ச் டிக்கெட் தான். பழைய படங்கள் மற்றும் புதிய படங்கள் பார்ப்பேன்.
சனி, ஞாயிறு வந்தால் காசு வேண்டும். சில முறை அப்பா தருவார். இல்லை என்றால் வேலைக்கு போகும் என் பெரிய அக்காவின் பர்ஸிலிருந்து ஒரு ரூபாய் நாணயம் எடுத்து விடுவேன். டிக்கெட்டுக்கு பிறகு 5 பைசா முறுக்கு சாப்பிடுவேன்.
6, 7, 8, 9, 10 மற்றும் 11 (எஸ். எஸ். எல். சி) வகுப்பில் என் சினிமா விஜயம் தெடர்ந்தது.
10-11 படிக்கும் போது அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவள் ஒரு தொடர்கதை என்று பாலசந்தர் படங்களை பெரிதும் விரும்பினேன்.
எனக்கு பிடித்த இயக்குனர் பாலசந்தர் தான். அவர்கள், தப்பு தாளங்கள், வறுமையின் நிறம் சிவப்பு மற்றும் சிந்து பைரவி என்று புதுமையான கதாப்பாத்திரங்களை வைத்து புதுமையாக கதை நகர்த்தி செல்வார். ஆனால் முடிவில் பெரும்பாலும் புதுமைக்கு இடம் இருக்காது.
1970 களில் பாரதி ராஜா மற்றும் இளையராஜா திரை உலகை புரட்டி போட்டார்கள். 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள் என்று புத்தம் புதிய கதை, புதிய கோணத்தில் காட்டினார்.
இயக்குனர் இமயம் ஆனார். மேலும் 80 களில் சொல்ல பட வேண்டியவர்கள் பாலு மகேந்திரா, மகேந்திரன், ருத்ரையா, ஹரிஹரன் போன்றவர்கள் திரையில் புரட்சி செய்தார்கள்.
மூடுபனி, மூன்றாம் பிறை, அழியாத கோலங்கள் என தனக்கு என்று தனி இடம் பிடித்தார் பாலு மகேந்திரா. அவரது மாஸ்டர் பீஸ் மூன்றாம் பிறை. க்ளைமாக்ஸில் கமல் எல்லோரையும் அழ வைத்து விடுவார்.
மகேந்திரன் உதிரி பூக்கள் மற்றும் முள்ளும் மலரும், நெஞ்சத்தை கொள்ளாதே… ! என தூள் கிளப்பினார். அதேபோல் பழைய மாடரன் தியேட்டர்ஸ் எடுத்த சி. ஐ. டி படங்கள் (வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள், கைதி கண்ணாயிரம்) மக்கள் மனதில் இடம் பிடித்தன.
சினிமா மக்கள் வாழ்வை சுற்றியே இருக்கிறது. 70-90 களில் நடந்த புரட்சி இப்போது இல்லை. இன்றைய சினிமாவை பற்றி சொல்ல வேண்டும் ஆனால்… நோ கமென்ட்ஸ்… !