விமர்சனம்: பைசன் காளமாடன் - போராட்டமும், கம்பீரமும்!
ரேட்டிங்(3 / 5)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் ஹீரோவாக நடிக்க வெளிவந்திருக்கும் படம் பைசன் - காளமாடன். கபடி விளையாட்டிற்க்காக அர்ஜுனா விருது பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கணேசன் வாழக்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வானதி என்ற ஊரில் மிக எளிமையான குடும்பத்தில் வாழ்ந்து வருபவர் கிட்டான். கபடி விளையாட்டில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். இவரது ஆர்வத்தை பார்த்து பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் இவரை உற்சாகப்படுத்துகிறார். கிட்டானை பல்வேறு கிளப்களில் விளையாட வைக்கிறார். உள்ளூரில் உள்ள சமூக, வர்க பிரச்சனைகள் கிட்டானின் வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருக்கிறது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இரண்டு பெரிய தாதாகள் தூத்துக்குடி சுற்று வட்டார பகுதியில் அவ்வப்போது மோதி கொள்கிறார்கள். இவர்களில் ஒரு தாதா கிட்டானை தன் கபடி கிளபில் ஆட வைக்கிறாரார். ஒரு கட்டத்தில் இரண்டு தாதாக்களுமே கொல்லப்படுகிறார்கள்.
மிகுந்த போராட்டத்திற்கு பிறகு ஜப்பானில் நடைபெற போகும் இந்தியா - பாகிஸ்தான் கபடி போட்டியில் கலந்து கொள்ள தமிழ் நாடு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஜப்பான் செல்கிறார். அங்கே இந்திய கபடி கழகத்தில் பெரிய பதவியில் இருக்கும் ஒருவர் கிட்டான் கபடியில் பங்கு பெறுவதை தடுக்க நினைக்கிறார். கிட்டான் வெற்றி பெறுகிறாரா? என்று சொல்கிறது மீதி கதை.
படத்தின் முதல் காட்சியில் உடற்பயிற்சி ஆசிரியர் கிட்டானிடம் கபடியின் ஆர்வத்தை கண்டறிந்து கபடி சொல்லித்தரும் காட்சியிலேயே படம் இது ஒரு சாதாரண படமல்ல என்று புரிய வைத்து விடுகிறது. பேருந்தில் ஆடு சிறுநீர் கழிக்கும் போது நடக்கும் சிறு பிரச்சனை ஜாதி சண்டையாக மாறுவது, கோச் பேசும் வசனங்கள், கிளைமாக்ஸ் காட்சிகள் என சில காட்சிகள் தனித்துவமாக தெரிகிறது. இரண்டு தாதாக்கள் இருந்தால் ஒருவர் வில்லனாக மாறுவார் என்ற சினிமா பொதுவிதிக்கு மாறாக காட்சிகள் அமைந்துள்ளன.
பரியேறும் பெருமாள் படத்தில் நாய், கர்ணன் படத்தில் குதிரை போன்ற விலங்குகளை ஒரு அடையாளமாக பயன்படுத்திய மாரி செல்வராஜ் பைசன் படத்தில் காளமாடன் என்ற நாட்டார் தெய்வத்தை அடையாளமாக காட்டியுள்ளார். இறுக்கமான உடல், வெற்றிக்கும், ஒதுக்கப்படுதலுக்கும் இடையேயான மனப் போராட்டம், இரண்டையும் சரி விகிதத்தில் தந்து நடிப்பில் ஒரு கபடி பைசனாக வாழ்ந்து காட்டி விட்டார் துருவ். அப்பா விடம் சண்டை போடும் போதும், மைதானத்தில் கபடி வீரனாக நிற்கும் போதும் சபாஷ் சொல்ல வைக்கிறார். துருவிற்கு இப்படத்திற்காக விருதுகள் காத்திருக்கிறது.
ஒரு அப்பாவாக பசுபதி தன் மகனுக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்ற தவிப்பில் சிறப்பாக நடித்துள்ளார். வாத்தியாராக வரும் மதன் தக்ஷிணாமூர்த்தி, தாதாக்களாக வரும் அமீர், லால், அக்காவாக வரும் ரசிஷா விஜயன் அனைவரும் தூத்துக்குடி மனிதர்களாக வாழ்ந்து காட்டி உள்ளார்கள்.
அமீர் நடிப்பை பார்க்கும் போது தென் மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு சமுதாய தலைவர் நினைவுக்கு வருகிறார். படத்தின் இசையில் பாடல்களும், ஒளிப்பதிவும் மிக சிறப்பாக உள்ளது. குறிப்பாக சில காட்சிகள் கருப்பு வெள்ளையில் இருப்பது கூடுதல் சிறப்பு. தாதாக்கள் காட்சிகள் சற்று அதிகமாக இருப்பது ஒரு குறையே. இதை தவிர்த்து கபடி காட்சிகளை அதிகம் வைத்திருந்தால் பைசன் இன்னும் சிறப்பாக வந்திருப்பான்.