விமர்சனம்: டீசல் - வடசென்னை கதை, புது ஐடியா, ஆனா...
ரேட்டிங்(2 / 5)
வட சென்னை கதை என்றாலே ஆள் கடத்தல், கஞ்சா கடத்தல் போன்ற விஷயங்கள் தான் நினைவுக்கு வரும் டீசல் படத்தில் 'வித்தியாசமாக யோசிக்கிறேன்' என்ற பெயரில் இப்படத்தில் வட சென்னையில் டீசல், பெட்ரோல், கேஸ் தயாரிக்க பயன்படுத்தப்படும் கச்சா ஆயிலை கடத்துவதை பற்றி சொல்லி இருக்கிறார் சண்முகம் முத்துசாமி.
ஹீரோ ஹரிஷ் கல்யாண் டீசல் என்று வட சென்னை மக்களால் அழைக்கப்படுகிறார். இவரது அப்பா சாய் குமார் பெட்ரோல் டீசல் விநியோக சங்கத்தின் தலைவராக இருக்கிறார். வட சென்னைப் பகுதியின் வாழ்வாதாரத்தை அழித்து துறைமுகம் கட்ட சாய் குமாரின் உதவியை கேட்கிறார் கார்பொரேட் முதலாளியான பதான். சாய் குமார் மறுத்து விட அரசியல் வாதிகள் உதவியு டன் சாய் குமாரை சிறையில் தள்ளுகிறார் பதான். இதற்கிடையில் ஒரு சிறிய தகராறில் போலீஸ் கமிஷனரை அடித்து விட்டு தலைமறைவாகிறார் ஹரிஷ் கல்யாண். இந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி இருவரும் தப்பித்தார்கள் என்று சொல்கிறது டீசல்.
காட்டை காப்பாத்துவோம், விவசாயத்தை காப்பாத்துவோம், கார்ப்பரேட் வில்லன் என்று சொன்னால் வழக்கமான படம் என்று சொல்லி விடுவார்கள் என்று நினைத்து டைரக்டர் இந்த படத்தில் மீன் வளத்தை கையில் எடுத்து இருக்கிறார். எடுத்தது தான் எடுத்தார் ஆழமாக, சரியாக சொல்ல வேண்டாமா? நாம் சமூக வலைத்தளங்களில் பார்த்த கேட்ட அம்சங்களை அப்படியே சொல்லி இருக்கிறார் டைரக்டர். காட்சியில் புரிய வேண்டிய விஷயங்களை எல்லாம் வசனத்தில் சொல்லி 'வாயில் வடை சுட்டு இருக்கிறார்' டைரக்டர்.
ஹீரோ ஹரிஷ் பேசுகிறார் பேசுகிறார் பேசி கொண்டே இருக்கிறார். இந்த படத்தில் காமெடி நடிகர்கள் இரண்டு பேர் இருந்தாலும் சிரிப்பு வரவில்லை. மாறாக விவேக் பிரசன்னா வில்லத்தனம் செய்யும் போது நமக்கு சிரிப்பு வருகிறது. ஹீரோவுக்கு வேலை வெட்டி இல்லை என்றாலும் காதலித்து ஆக வேண்டும் என்ற தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதியின் கீழ் ஹீரோயின் அதுல்யா ஹரிஷ் கல்யாணை காதலிக்கிறார்.
லப்பர் பந்து, பார்க்கிங் படங்களில் நடித்து தனக்கான திறமையை நிரூபித்த ஹரிஷ் கல்யாண் டீசல் படத்தில் இதை தக்க வைக்க தவறி விட்டார் என்றே சொல்ல வேண்டும். மாஸ் ஆக்ஷன் ஹீரோ சப்ஜெக்ட் ஹரிஷ்க்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. உங்ககிட்ட இருந்து நல்ல கதை அம்சம் உள்ள படங்களை எதிர் பார்க்கிறோம் ஹரிஷ்.
படத்தில் ஒளிப்பதிவு சற்றே பாசிட்டிவான விஷயமாக உள்ளது. படம் பார்த்த பின் கவுண்டமணி பாணியில் ஒன்று சொல்ல தோன்றுகிறது 'கொஞ்ச நாளைக்கு கார்ப்பரேட் முதலாளிகளை எல்லாம் வேலை செய்ய விடுங்க விலைவாசி ரொம்ப ஏறி கிடக்கு.'
டீசல் - இது வாயில் வடை சுடுற கதை!