
திரைப்படங்கள் மக்களின் வாழ்வியலோடு வாழ்வியலாக கலந்து விட்டன. நல்ல கருத்துள்ள, நல்ல கதை களத்தோடு வரும் திரைப்படங்களை மக்கள் என்றுமே கொண்டாட தவறுவதில்லை. எதிர்பார்ப்புக்கு எகிறிய திரைப்படங்கள் போதிய எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாமல் இருந்தாலும் கூட அதற்கான விமர்சனங்களை காட்ட கொஞ்சம் கூட தயங்குவதில்லை.
இப்போது, திரையரங்குகளில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி உலக அளவில் வெளியானது. இத்திரைப்படத்தினை ரிஷப் செட்டி அவர்கள் இயக்கி உள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதற்கு முன் இவர் இயக்கத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் ஒரு புதுவித கதை களத்துடன் வந்த காரணத்தினால், ரசிகர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது. அதேபோல் 450 கோடிக்கு மேல் வசூலிலும் பட்டையக் கிளப்பியது. ஆன்மீகக் கருவை மையமாகக் கொண்டும், மக்களின் தெய்வ வழிபாட்டை உணர்த்தும் விதமாகவும், பண்டைய புராண கருத்துக்களை வெளிப்படுத்தும் திரைப்படமாக காந்தாரா அமைந்தது.
2022 ல் வெளியான காந்தாரா திரைப்படத்தில் கூறப்பட்டுள்ள மற்றும் ஆராயப்பட்ட புராணக் கதைகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் பேசும் ஒருவித முன்னோடியான பண்டைய புராணங்களையும், ஆன்மீகத்தையும் சேர்த்த இயற்கையோடு இணைந்த கதைக்களமாக அமைந்திருக்கிறது இந்த காந்தாரா சாட்டர் 1 திரைப்படம். இத்திரைப்படம் இப்போது ரசிகர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டு வருகிறது.
இத்திரைப்படத்தில் ரிஷப் செட்டி, ருக்குமணி வசந், குல்சந்த் தேவ்வையா, ஜெயராம் போன்றோர்கள் நடித்துள்ளார்கள். இன்றுடன் இத்திரைப்படம் வெளியாகி 14 நாட்களைக் கடந்திருக்கிறது. முதல் வாரத்திலேயே ரூபாய் 337 கோடி வசூலித்தது. அதன் பின் விடுமுறை நாட்களிலும் வசூலை வாரிக் குவித்தது.
இதன் தொடர்ச்சியாக இரண்டாவது வாரத்தில் 146 கோடி வசூலித்தது. மொத்தமாக இந்த திரைப்படம் உலக அளவில் 14 நாட்களில் கிட்டத்தட்ட 675+ கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. மேலும், பண்டிகை காலங்கள் வருவதால் இந்த திரைப்படத்தின் வசூலானது இன்னும் கூடுதலாக அதிகரிக்கக்கூடும் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறார்கள்.
கன்னட சினிமாவில் இதற்கு முன் வெளியான கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்தது. அதே வரிசையில் மற்றொரு கன்னட சினிமாவான காந்தாரா சாப்டர் 1 திரைப்படமும் ஆயிரம் கோடி வசூலை எட்டிப் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படி பிடித்து விட்டால், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஆயிரம் கோடி வசூலை வாரிக்குவித்த முதல் கன்னட சினிமாவாக மாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.