

தீரன் அருண் குமார் இயக்கத்தில் வெற்றி, அபிராமி வெங்கடாசலம், லிவிங்ஸ்டன் நடித்துள்ள படம் பிளாக் கோல்ட்.
லாரி டிரைவராக இருக்கிறார் லிவிங்ஸ்டன். அன்பான மனைவி, மகன், மகள் என்று வாழ்ந்து வருகிறார். உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் இவரிடம் இவரது முதலாளியான வெங்கடேஷ் எமர்ஜென்சியாக ஒரு லாரியில் அதிக விலை உயர்ந்த சரக்கு ஒன்றை கொண்டு செல்ல வேண்டும் என்கிறார். இவரும் முதலாளி சொல்கிறார் என்று எடுத்துச் செல்கிறார். சரக்கு தமிழக எல்லையை தாண்டி ஆந்திரா பார்டரில் செல்லும்போது அங்கே இந்த லாரி காணாமல் போகிறது. டிரைவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. இவரை அனுப்பிய முதலாளி டிரைவர் லிவிங்ஸ்டன் தான் சரக்கை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார் என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக இருக்கும் அபிராமி இதை விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் போலீஸ் விசாரணையில் நம்பிக்கை இல்லாத வெற்றி தானே இறங்கி தன் தந்தையை தேடி போகிறார். இறுதியில் என்ன ஆனது என்று சொல்கிறது படம். படத்தின் ஒன்லைன் ஓகே தான். பல்வேறு புனித ஸ்தலங்களில் காணிக்கையாக தரும் முடிகள் மற்றும் சலூன் கடையில் கீழே விழும் தலை முடிகளும் எங்கே செல்கின்றன என்று யோசித்து இருக்கிறோமா? இந்த முடிகள் எங்கே செல்கிறது? என்பதை ஒரு ஒன்லைனாக எடுத்து ஒரு கதை சொல்லி இருக்கிறார் டைரக்டர்.
படத்தில் லிவிங்ஸ்டன் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது. இவர் நடிப்பை பார்க்கும் போது தமிழ் சினிமா லிவிங்ஸ்டனை சரியாக பயன்படுத்தவில்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது.
ஒரு அப்பாவாக குடும்பத்தில் ஒரு எளிய மனிதனாக நடிக்கும் போது வில்லன்களிடம் இருந்து தப்பிக்க கெஞ்சும் போதும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக நடிப்பில் ஸ்கோர் செய்வது அபிராமி. கொஞ்சம் டெரர் போலீசாக ஒரு நல்லதொரு நடிப்பை தந்திருக்கிறார். படத்தின் பின்னணி இசையும் படத்தொகுப்பும் ஓரளவு படத்திற்கு கை கொடுக்கிறது.
சரி இந்த படம் ஒன் லைன் நன்றாக இருக்கிறது. ஆனால் நகர்ந்த விதம் என்பது இன்னும் சுவாரஸ்ய படுத்திருக்க வேண்டும். படம் செல்ல செல்ல திரில்லர் என்ற இடத்தில் இருந்து ஆக்சன் என்ற பாணிக்கு நகர்கிறது. இது அவ்வளவாக இந்த திரைக்கதைக்கு கை கொடுக்கவில்லை. மேலும் வெற்றி நடிக்கும் படம் என்றாலே கதை வித்தியாசமாக இருக்கும் என்று நம்பி உள்ளே வரலாம். இந்த படத்திலும் கதை நன்றாகத் தான் இருக்கிறது. மாற்றுக் கருத்து இல்லை இருந்தாலும் வெற்றி தான் மிகவும் சாதாரணமாக நடித்திருக்கிறார்.
ஆக்சன் செய்ய வேண்டிய காட்சிகளில் கூட வேகம் இன்றி ஒரு பரபரப்பு இல்லாமல் நடித்திருக்கிறார். வெற்றி இனிவரும் காலங்களில் நடிப்பிற்காக கொஞ்சம் ஹோம் ஒர்க் செய்தால் நன்றாக இருக்கும். எவ்வளவு பெரிய திரில்லர் மூவியாக இருந்தாலும் கதை எப்படி சென்றாலும் ஹீரோவை லவ் செய்யும் ஒரு ஹீரோயின் வேண்டுமல்லவா இந்த படத்திலும் ஒரு ஹீரோயின் இருக்கிறார். அவர் எந்த வேலைக்கும் செல்லாத ஹீரோ வெற்றியை காதலிக்கிறார். இதெல்லாம் தவிர்த்து எடுத்துக் கொண்ட திரைக்கதைக்கு வலு சேர்த்திருந்தால் இந்த படம் ஒரு சிறந்த திரில்லர் மூவியாக இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.
இந்த படத்தை நீங்கள் தியேட்டரில் பார்க்கும்போது நம் தலை முடிக்கு இவ்வளவு பெரிய மதிப்பு இருக்கிறதா? அதை வைத்து இவ்வளவு பெரிய பிசினஸ் நடக்கிறதா? அது எங்கெல்லாம் பயன்படுகிறது? என்று தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்.
பிளாக் கோல்ட்: திரைக்கதையும் ஹீரோவின் நடிப்பும் நன்றாக இருந்திருந்தால் தங்கமாக ஜொலித்திருக்கும்.
காணாமல் போன லாரியையும் டிரைவரையும் தேடும் ஒரு தந்தை-மகன் போராட்டத்தின் வழியே வெளிப்படும் திடுக்கிடும் உண்மைகள்.