

கங்கை அமரன், ரோஜா, தர்ஷன் கணேசன், ஆடுகளம் நரேன், யுகேந்திரன் இவர்கள் நடிப்பில் DD பாலசந்திரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் லெனின் பாண்டியன்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். கிராமத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணி செய்கிறார் தர்ஷன் கணேசன். இவருக்கு வேலை எதுவும் தெரியாது என்று உயர் அதிகாரி பந்தோபஸ்துக்கு அனுப்பாமல் காவல் நிலையத்தில் உள்ள எடுபிடி வேலைகளை செய்ய வைக்கிறார். இது தர்ஷனுக்கு மிகவும் அவமானமாகவும்,வேதனையாகவும் இருக்கிறது. அதே ஊரில் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள் கங்கை அமரனும், ரோஜாவும்.
கங்கை அமரன் ஆசை ஆசையாக வளர்த்த ஒரு ஆட்டுக்குட்டியை ஆற்றில் மணல் அள்ளும் கூட்டம் தனது லாரியால் மோதி சாகடித்து விடுகிறது. இதற்கு நியாயம் கேட்க காவல் நிலையம் செல்கிறார் கங்கை அமரன். காவல் நிலையத்தில் "இதெல்லாம் ஒரு கேசா?" என்று அவமானப்படுத்தப்படுகிறார்.
இந்த அவமானம் தாங்காமல் தனது ஆடு இறப்பதற்கு காரணமாக இருந்த மணல் மாஃபியாவின் தலைவராக இருக்கும் யுகேந்திரன் செய்யும் மணல் கடத்தலை கிராம நிர்வாக அதிகாரியிடம் சொல்கிறார். கிராம நிர்வாக அதிகாரி இந்த மணல் கொள்ளையை தடுக்கிறார். கோபமடையும் மணல் மாஃபியா இந்த கிராம நிர்வாக அதிகாரியை கொன்றுவிடுகிறது. வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. நீதிமன்றம் கங்கை அமரனின் நியாயமான கோரிக்கையை ஏற்கின்றது. இந்த வழக்கு முடியும் வரை தர்ஷனை போலீஸ் பாதுகாப்பாக கங்கை அமரனுக்கு அனுப்பி விடுகிறது. மணல் மாஃபியாவின் தலைவராக இருக்கும் யுகேந்திரன் கங்கை அமரனை கொலை செய்ய முயற்சி செய்கிறார். இந்த முயற்சி பலித்ததா? தர்ஷன் இதை தடுத்தாரா? என்று சொல்கிறது மீதி கதை.
பலம்...
படத்தின் மிகப்பெரிய பலம் கங்கை அமரனின் நடிப்பு. இதுவரை ஆங்காங்கே சின்ன சின்ன நகைச்சுவை காட்சிகளில் தலைகாட்டி விட்டு சென்ற கங்கை அமரன், இப்படத்தில் ஒரு வயதான கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் போது மிகவும் நியாயமான கேள்விகளை கேட்டு அசர வைக்கிறார்.
தனது ஆடு இறந்து விட்ட போது அழும் இடமும் ரொம்ப நிகழ வைக்கிறது. இதற்கு அடுத்தபடியாக ரோஜா ஒரு வயதான பெண்மணி ஆக மிகவும் எதார்த்தமாக அதிக வசனம் இல்லாமல் உணர்வுகள் மூலமாகவே நல்ல நடிப்பை தந்துள்ளார். சிவாஜியின் அன்னை இல்லத்தில் இருந்து இன்னொரு நடிகராக தர்ஷன் கணேசன் அறிமுகமாகியுள்ளார். காவல் நிலையத்தில் உயர் அதிகாரியிடம் அவமானப்படும் போதும் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது எதிரிகளை துவம்சம் செய்யும் இடத்தில் நிமிர்ந்து நிற்கும் போதும் தர்ஷன் நடிப்பு பாராட்டப்படுகிறது.
தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் தர்ஷன் சிவாஜி, பிரபு, விக்ரம் பிரபு வரிசையில் ஒரு நல்ல நடிகராக வலம் வரலாம். படத்தில் மிகவும் ரசிக்கும்படியாக எழுதப்பட்டுள்ள கேரக்டர் ஜார்ஜ் மரியான் கேரக்டராகும். நீதிபதியாக வரும் ஜார்ஜ் மரியான் பேசும் வசனங்கள் நமது அதிகார வர்க்கத்திற்கு ஒரு சாட்டை அடியாக இருக்கிறது. காவல் நிலைய காட்சிகள் காவல்துறை எப்படி எளிய மனிதரை நடத்துகிறது என்று உள்ளவாறு சொல்லி இருக்கிறது. ஒரு தனிமனித மரியாதை எவ்வளவு முக்கியம் என்று நீதிமன்ற காட்சிகள் உணர்த்தும் இடம் மிகவும் சிறப்பு.
படத்தில் மற்றொரு சிறப்பு இளையராஜாவின் பின்னணி இசை. வழக்கம் போல எந்த குறையும் இல்லாமல் பின்னணி இசை மிக நன்றாக தந்துள்ளார் இளையராஜா. பாண்டி முனி சரணம் என்று தொடங்கும் பாடலை இளையராஜா பாடியிருக்கும்போது 80களில் நாம் கேட்ட இளையராஜாவின் இசை நினைவுக்கு வருகிறது. சிவகங்கை வெப்பத்தையும் கரிசல் மண்ணையும் கரிசல் மண்ணுக்குள் ஒரு தனியான ஒரு வீட்டையும் மிக அழகாக படம் பிடித்திருக்கிறது ஒளிப்பதிவு.
பலவீனம்...
படத்தின் பலம் என்பது பெரும்பாலும் முதல் பாதியில் தான் இருக்கிறது. இரண்டாம் பாதியில் வேறொரு விதத்தில் ஒரு வித்தியாசமான ட்ரீட்மென்ட் ஆக இருக்கும் என்று நாம் எதிர்பார்த்தால் ஒரு வழக்கமான டெம்ப்ளேட்டில் படம் செல்கிறது. வில்லனாக வரும் கதாபாத்திரங்கள் ஆழமாக எழுதப்படவில்லை. மேலும் வில்லன் கதாபாத்திரம் வழக்கமான மசாலா படங்களில் வரும் கதாபாத்திரம் போன்றே உள்ளது.
கிளைமாக்ஸ் இல் நாம் ஒரு வித்தியாசத்தை எதிர்பார்த்தால் கிளைமாக்ஸ் மிக சாதாரணமாக மற்ற படங்களைப் போல செல்கிறது. எனவே படத்தை நம்மால் முழுமையாக ரசிக்க முடியவில்லை. மேலும் கங்கை அமரன் ரோஜா வரும் காட்சிகளில் சில இடங்களில் இளையராஜா முதல் மரியாதை வந்த பூங்காற்று திரும்புமா? என்ற பாடலின் இசையை வைத்துள்ளார். இந்த இசை இந்த காட்சிக்கு பொருந்தவில்லை.
பலமா பலவீனமா எது முன்னணியில் இருக்கிறது?
முதல் பாதி பலமாகவும் இரண்டாம் பாதி திரைக்கதையில் பலவீனமாகவும் இந்த லெனின் பாண்டியன் திரைப்படம் வந்திருக்கிறது. முதல் பாதியில் உள்ள பலத்தை இரண்டாம் பாதியில் நீட்டி இருந்தால் லெனின் பாண்டியன் முழுவதும் ரசிக்கும் சிறப்பான படமாக வந்திருக்கும். இப்போது பிப்டி பிப்டி என்ற அடிப்படையில் பாதியளவு தான் இப்படத்தை நம்மால் ரசிக்க முடிகிறது. இருந்தாலும் அதிகார வர்க்கம் எளிய மனிதர்களை நமது நாட்டில் நடத்தும் விதத்தை தெரிந்து கொள்ள இப்படம் ஒரு வாய்ப்பாக அமையலாம்.
அதிகார வர்க்கத்திற்கு எதிரான எளிய மனிதனின் போராட்டத்தையும், கங்கை அமரனின் நெகிழ்ச்சியான நடிப்பையும், படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ்களைத் துல்லியமாக வாசகர்கள் புரிந்துகொள்ள முடியும்.