ஆளரவமற்ற ஒரு தொகுப்பு வீடுகள் குடியிருப்பு. அதில் வார இறுதியை கொண்டாட வரும் ஜீவா, பிரியா பவானிசங்கர். நூற்றுக்கணக்கான வீடுகள் இருக்கும் குடியிருப்பில் வந்தவர்கள் இவர்கள் மட்டுமே. வழக்கமாக என்ன நடக்கும். ஒரு பேய் வரும். அல்லது சில கொலைகாரர்கள் வருவார்கள். இதில் சற்று வித்தியாசமாகச் சில சம்பவங்கள் நடக்கின்றன. யாருமில்லை என்று சொன்ன நேரத்தில் எதிர் வீட்டில் ஆள் நடமாட்டம் தெரிகிறது. யார் என்று தேடிப் போனால் அங்கும் ஜீவாவும், பிரியா பவானிசங்கரும். இவர்கள் யார். அங்கு என்ன நடக்கிறது. என்பதற்கான விடையைப் பிளாக் ஹோல், பேரலெல் ரியாலிட்டி, ஷ்ரோடிங்கர் பூனை என்று கலந்து கட்டி சொல்லியிருக்கிறார்கள்.
தமிழில் இது போன்ற படங்கள் அரிது. நமக்குச் சயின்ஸ் ஃபிக்ஷன் என்றால் அதிகபட்சம் டைம் மெஷின்தான். இது போன்ற குவாண்டம் பிசிக்ஸ் எல்லாம் நம்ம கிரிஸ்டோபர் நோலன் சிலபஸ். பல படங்கள் எனக்குப் புரியாது என்றாலும் பார்த்து வைப்பேன். இந்தப் படமும் அதிகமாக ஈர்க்கவில்லை. இருந்தும் மூன்றாம் நாள் சக்சஸ் மீட் வைத்ததும் இரண்டாம் வாரம் ஓடுவதும் இதைப் பார்க்கலாம் என்று நினைக்க வைத்தது.
முதல் அரை மணிநேரம் படம் எதைப் பற்றியது என்றே தெரியாமல், தேவையில்லாத பப் பாடல் சண்டை என்று ஓடுகிறது. விவேக் பிரசன்னாவின் பகுதியும் எதற்கென்று தோன்றியது. அதற்குப் பின்னால் ஒரு காட்சி வைத்து விட்டார்கள். முன் கோபியான ஜீவா சண்டையில் இறங்கும்போது இவர் பிரச்னைகளைத் துணிச்சலுடன் எதிர் கொள்வாரெனப் புரிகிறது…
தாங்கள் ஒரு மீள முடியாத டைம் லூபில் மாட்டிக் கொண்டு இருக்கிறோம் என அவர்கள் உணரும்போது இடைவேளை. அதன் பின் சற்றே வேகமெடுத்து பின்னர் கிளைமாக்சில் மீண்டும் மெதுவாகி விடுகிறது. ஒரே காட்சி திரும்பத் திரும்ப வருவதால் நேரக் குழப்பம் வராமல் கடிகாரத்தை வைத்தே விளக்கி இருப்பது சிறப்பு. சுவாரசியமாகப் படத்தை வளர்த்த இயக்குனர் கடைசியில் சப்பென்று முடித்தது போல் இருந்தது.
படத்தின் மிகப் பெரிய பலம் சவுண்ட் டிசைனும் ஒளிப்பதிவும். சாம் சி.எஸ் இசை பின்னணியில் அருமை. பாடல்களில் வெறுமை. சிக்கலை அவிழ்க்க வென்றே வரும் விவேக் பிரசன்னாவின் பாத்திரம் அவரது பொருந்தாத மேக்கப்பால் கொடுக்க வேண்டிய அழுத்தத்தைக் கொடுக்கவில்லை.
ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுக்க வேண்டும் என்று முயற்சித்து கூடுமான வரை குழப்பாமல் கொண்டு சென்ற இயக்குனர் பாலசுப்ரமணி அதில் வென்றிருக்கிறார். நோலன் படங்கள், சற்றே வித்தியாசமான திரில்லர் பட விரும்பிகள் ரசிக்கலாம். வெகுஜன ரசிகர்கள் என்னமோ புதுசா டிரை பண்ணிருக்காங்க. ஓகே என்று வெளியே வருகிறார்கள். நடிப்பிற்கென்று மெனக்கெட இதில் ஸ்கோப்பே இல்லை எனவே அதைப் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை.
ஒன்று மட்டும் சொல்லலாம். இது போன்ற ஆளரவமற்ற இடங்களில் வீடுகள் வாங்கிப் போட்டு வீக்கெண்ட் போகலாம் என்று நினைப்பவர்கள் ஒரு முறைக்கு ஒரு முறை யோசிக்கக்கூடும்.