
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான மூத்த முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் சல்மான் கான். சல்மான்கானுக்கு நாடு முழுவதிலும், ஏன் உலகல் முழுவதிலும் கணிசமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்றால் அது மிகையாகாது. முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வரும் சல்மான் கான் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சல்மான் கான் தனது பிறந்தநாளை நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சகோதரி அர்பிதா வீட்டில் பிரமாண்டமாக கொண்டாடினார். இவருக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
அர்பிதாவின் மகள் அயத்துக்கும் இன்று தான் பிறந்தநாள். எனவே ஒவ்வொரு ஆண்டும் சல்மான் அவரது பிறந்த நாளை அவரது சகோதரி அர்பிதா தனது அவரது கணவர் மகள் அயத் ஆகியோருடன் கொண்டாடுவது வழக்கம். சூப்பர் ஸ்டார் சல்மான் கான் அர்பிதா வீட்டில் நள்ளிரவு நடந்த பார்ட்டியில் கருப்பு சட்டை மற்றும் ஜாக்கெட் அணிந்து தனது நீல நிற ரேஞ்ச் ரோவரில் வந்து கலந்து கொண்டார்.
சல்மான் கானின் குடும்ப உறுப்பினர்கள், சல்மானின் மருமகன் அயன் அக்னிஹோத்ரி, சோஹைல் கான், அவரது மகன் நிர்வான் ஆகியோர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர். பாபி தியோல், சங்கீதா பிஜ்லானி, இயுலியா வந்தூர், இசையமைப்பாளர் சஜித் கான், மறைந்த பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக், உடற்பயிற்சி பயிற்சியாளர் யாஸ்மின் கராச்சிவாலா போன்ற நெருங்கிய நண்பர்கள் பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்தனர்.
சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் (மலைக்கா அரோராவில் முன்னாள் கணவர்) மற்றும் அவரது மனைவி ஷுராவும் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா தேஷ்முக், தங்கள் மகன்களான ரியான் மற்றும் ரஹில் ஆகியோருடன் வந்திருந்தனர்.
பார்ட்டியின் சில புகைப்படங்களை நடிகர் சல்மான் கானின் சகோதரி அர்பிதா கான் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் நடிகர் சல்மான் கானுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
2025-ம் ஆண்டு ஈத் பண்டிகையை முன்னிட்டு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சிக்கந்தர் படம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சல்மான் கான் முதல் முறையாக ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்துள்ளார். சல்மான் கானின் பிறந்த நாளான இன்று சிக்கந்தர் படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
நடிகர் சல்மான் கான் கடந்த ஆண்டு கடைசியாக டைகர் 3 படத்தில் கத்ரீனா கைஃப் மற்றும் இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்தார். இந்தப் படத்தை மனீஷ் சர்மா இயக்கியிருந்தார். நடிகர் ஷாருக்கானின் பிளாக்பாஸ்டர் பதானிலும் நடிகர் சல்மான் கான் ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
சல்மான் கான் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அட்லீ தயாரிப்பில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பேபி ஜான் படத்தில் கேமியோ ரோலில் நடித்து கலக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.