விமர்சனம் - 'மேக்ஸ்' - சந்தன தேசத்தின் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!
ரேட்டிங்(3.5 / 5)
ஒரு விறுவிறுப்பான திரைக்கதையை, டைரக்டர் டீம், ரூம் போட்டு ஆற அமர உட்கார்ந்து உருவாக்கிவிடலாம். ஆனால் பேப்பரில் உள்ள விறுவிறுப்பை படம் பார்க்கும் ரசிகர்களை உணர வைக்க வேண்டும் என்றால் படத்தொகுப்பும், ஒளிப்பதிவும் கை கோர்த்து ஒரு விஷூவல் மேஜிக் நிகழ்த்த வேண்டும். இது போல் கை கோர்த்து ஒரு விஷூவல் மேஜிக்கை நிகழ்த்தி டைரக்டரின் கனவை நனவாக்கும் படமாக வந்துள்ளது. கிச்சா சுதீப் நடித்து வெளிவந்துள்ள 'மேக்ஸ்' படத்தை லோகேஷ் கனகராஜிடம் உதவியாளராக இருந்த விஜய் கார்த்திகேயா இயக்கி உள்ளார்.
மேக்ஸ் என்று செல்ல பெயருடன் அழைக்கப்படும் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் (சுதீப்) மிக நேர்மையான அதிகாரி. இதன் பரிசாக அடிக்கடி டிரான்ஸ்பர் கிடைக்கிறது. சில நாட்கள் கழித்து மீண்டும் பணியில் சேர ஆணை வருகிறது. பதவி ஏற்க உள்ள காவல் நிலையத்தில் அர்ஜுன் வருவதற்கு சில மணி நேரங்கள் முன்பு இரண்டு அரசியல் பின் புலம் தாதாக்கள் ஒரு சிறிய வழக்கில் கைது செய்து அழைத்து வரப்படுகிறார்கள். இரண்டு தாதாக்களும் தங்களுக்குள் சண்டை போட்டு அடித்துக்கொண்டு இறந்து விடுகிறார்கள். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் நாம் தான் இருவரையும் கொலை செய்தோம் என்று தாதாகளின் அண்ணன் எண்ணி நம் போலீஸ் ஸ்டேஷனையும், நம்மையும் அழித்து விடுவார்கள் என்று அஞ்சி இறந்தவர்களின் பிணங்களை இன்ஸ்பெக்டர் அர்ஜுனும், மற்ற கான்ஸ்டபில்களும் மறைக்க முயல்கிறார்கள்.
அர்ஜுன் தன் தம்பிகளை எதோ செய்து விட்டான் என்று சந்தேகப்படும் டானின் அண்ணன் மிகப்பெரிய அடியாட்களுடன் காவல் நிலையத்தை அட்டாக் செய்ய முயல்கிறார். இதற்கிடையில் ரூபா என்ற பெண்ணை வேவு பார்க்க போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்புகிறார். ரூபா ஸ்டேஷனுக்கு வந்து பார்த்து விட்டு தம்பிகளுக்கு ஆபத்து என்று தகவல் சொல்கிறார். டான் என்ன செய்தார்? போலீஸ்காரர்கள் தப்பித்தார்களா என்பதை ஒரு மாஸ் ஆக்ஷன் திரில்லர் தந்திருக்கிறார் விஜய் கார்த்திகேயா.
பொதுவாக ஆக்ஷன் திரில்லர் படங்களில் ஆக்ஷன் இருக்கும் அளவிற்கு திரில் இருக்காது. ஆனால் மேக்ஸ் படத்தில் திரில், ஆக்ஷன் இரண்டும் சரி விகிதத்தில் கலக்கப்பட்டு ஒரு சிறந்த ஆக்ஷன் திரில்லர் அனுபவத்தை தருகிறது. படத்தின் முதல் காட்சியில் சுதீப்பை பற்றி பில்டப் செய்யும் போது, இது நீங்க நினைப்பது போல் வெறும் பில்டப் இல்லை என்று மூன்றாவது காட்சியில் டாப் கியரில் ஏறி படம் முழுவதும் வேகம் இறங்காமல் செல்கிறது. ஆனால் படம் பார்க்கும் போது, சில இடங்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, விக்ரம் 2 பட காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.
ஒரு நாள் இரவில் நடக்கும் கதையை சரியாக நம்மிடம் கொண்டு சேர்ப்பதில் சேகர் சந்திரசேகர் ஒளிப்பதிவும், எஸ்.ஆர். கணேஷ் பாபுவின் படாதொகுப்பும் மிக முக்கிய பங்காற்றுகின்றன. அஜனீஷ் லோக்நாத் இசை பிளஸ் பாயிண்ட்டாக உள்ளது. இருந்தாலும் உதய் குமார் ஒலிப்பதிவு சற்று இரைசல் அதிகமாக உள்ளது.
படத்தில் பலர் நடித்திருந்தாலும் படத்தை நடிப்பால் தாங்கி பிடிப்பது சுதீப்பும், இளவரசும்தான். சுதீப் மாஸ், ஆக்ஷன், இன்டெலிஜென்ஸ் என நடிப்பு விருந்தையே படைத்திருக்கிறார். இறுக்கமான முகத்தில் வாய்ஸ் modulation செய்து சிறப்பாக நடித்திருக்கிறார். ஏட்டையாவாக இளவரசு மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் இவரின் நடிப்பு கண்ணீரை வர வைக்கிறது. பிணங்களை மறைப்பது, சேஸிங் என பல காட்சிகள் நம்மை சீட் நுனிக்கு வர வைக்கிறது. ஒரு நல்ல ஆக்ஷன் திரில்லர் படத்தை பார்க்க ஆர்வம் உள்ளவர்கள் சந்தன தேசத்தில் (கர்நாடகா) இருந்த வந்துள்ள 'மேக்ஸ்' படத்தை தாராளமாக பார்க்கலாம்.