கோலிவுட் இயக்குநர் பாலா, ரஜினி மற்றும் கமல் வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று கூறி சினிமா ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இதுகுறித்தான விரிவான செய்தியைப் பார்ப்போம்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை ஆண்டவர்கள்தான் ரஜினிகாந்த், கமல். தமிழ் சினிமாவின் இரு கண்களாக விளங்கியவர்கள். அன்றைய இயக்குநர்களும் சரி, இன்றைய இயக்குநர்களும் சரி, அவர்களை வைத்து ஒரு படமாவது எடுக்க மாட்டோமா என்று ஏங்கியிருக்கின்றனர். அவர்களுக்காகவே கதைகளை எழுதி இயக்கியும் இருக்கின்றனர். ஆனால், இயக்குநர் பாலா அவர்கள், ரஜினி மற்றும் கமல் வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று கூறியது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலா தற்போது வணங்கான் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் சினிமாவில் 25 ஆண்டுங்கள் நிறைவுசெய்ததை அடுத்து பாலாவை மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அருண் விஜய், சிவகார்த்திகேயன், சமுத்திரகனி, சிவக்குமார், கருணாஸ், வேதிகா, மிஷ்கின், லிங்குசாமி, மாரி செல்வராஜ் போன்ற பலர் கலந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமாரின் கேள்விகளுக்கு பாலா சுவாரஸ்யமாக பதிலளித்திருக்கிறார்.
அதில் முக்கியமாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் இருவரும் தங்களிடம் வந்தால் படம் இயக்குவீர்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு பாலா வாய்ப்பு இல்லை என்றும், அவர்கள் பாதை வேறு என் பாதை வேறு என்றும் கூறி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.
மேலும் சில கேள்விகளை சிவகுமார் கேட்டிருக்கிறார்.
'சிறுவயதில் உங்களைத் தத்துக் கொடுத்தபின் அம்மாவிடம் வளராதது கஷ்டமாக இருந்ததா?' எனக் கேட்டதற்கு, 'ஆமாம். அதனால், சிறு வயதிலேயே மனரீதியாக பாதிப்படைந்தேன் என்றார். பின் சினிமாவில் நடிகைகள் யாராவது உங்களைக் காதலித்தார்களா?" என்கிற கேள்விக்கு, "இரண்டு, மூன்று பேர் இருந்தார்கள். இப்போது, அவர்கள் திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பதால் பெயரைச் சொல்லமாட்டேன்" என நகைச்சுவையாகப் பதிலளித்தார் பாலா.
இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் பகிரப்பட்டன. பாலாவின் நந்தா படம் குறித்தும், சூர்யா குறித்தும் பேசப்பட்டது. அதேபோல் சிவகுமாரும் பாலாவும் நகைச்சுவையாக பேசிக்கொண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.