தெலுங்கு பட உலகில் மிகவும் பிரபலமான ஜூனியர் என்டிஆர்-க்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். RRR படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரது புகழ் உலகளவில் கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழ், தெலுங்கு இயக்குனர்கள் மட்டுமல்ல பிரபலமான பாலிவுட் இயக்குநர்களும் ஜூனியர் என்டிஆரை தங்களது படங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தி பட தயாரிப்பாளர் போனி கபூர், நாக வம்சி, மற்றும் நடிகர் சித்தார்த் ஆகியோர் கலாட்டா பிளஸ் வட்ட மேசை நிகழ்ச்சியில் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் நட்சத்திர சக்தியை விட நல்ல திரைக்கதை உள்ள சினிமா வெற்றி பெறுமா என்று அவர்கள் வாதிட்டனர்.
'ஏக் துஜே கே லியே' இந்தி படத்தில் தென்னிந்திய நடிகர் கமல்ஹாசன் அறிமுகமான போது பார்வையாளர்கள் அவரை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள் என்பதைப் பற்றி பேசிய போனி கபூர், அப்போது பாலிவுட்டில் கமல்ஹாசன் ஒரு புதிய முகமாக இருந்தாலும், அந்த படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது என்றும் பாலிவுட் திரையுலகம் கமல்ஹாசனை ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
இது குறித்து மேலும் பேசிய போனிகபூர், "புதுமுகம் என்பதால்தான் ஜூனியர் என்டிஆரை தனது படத்திற்கு (போர் 2) ஆதித்யா சோப்ரா தேர்ந்தெடுத்தார்” என்று கூறினார். அவரின் இந்த கருத்துக்கு, தயாரிப்பாளர் நாக வம்சி, ஜூனியர் என்டிஆர் 'புதிய முகம்' இல்லை என்று சிரித்து அவரைத் திருத்தினார். சித்தார்த்தும் அவருடன் சேர்ந்து "ஜூனியர் என்டிஆர் 'புதிய முகம்' அல்ல, நீங்கள் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரைப் பற்றி பேசுகிறீர்கள்" என்று திருத்தினார்.
போனிகபூரின் இந்த கருத்து இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பாலிவுட்டில் எப்போதும் தென்னிந்திய நடிகர்களை மட்டம் தட்டும் போக்கு காலம் காலமாக நடந்து வருவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய படங்களுக்கான வெளிநாட்டு சந்தை குறித்து பேசிய போனிகபூர் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், அனிமல் மற்றும் ஜவான் போன்ற படங்கள் தொழில்துறையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியதாக கூறினார். மேலும் நல்ல படங்கள் எப்போதும் வெற்றிபெறும் என்று கூறினார்.
படங்களுக்கு இடையேயான பிரிவு (பாலிவுட், தென்னிந்திய) மொழியின் அடிப்படையில் அல்ல, மாறாக திரைப்படங்களின் தரத்தை அடிப்படையாகக் கொண்டது என்று போனிகபூர் சுட்டிக்காட்டினார். பார்வையாளர்களின் விருப்பத்தேர்வுகள் காலப்போக்கில் மாறிவருவதாகவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் போனி கபூரும், நாக வம்சியும் பாலிவுட் மற்றும் தென்னிந்திய படங்கள் குறித்து விவாதத்தில் ஈடுபட்டனர்.
தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் 2024-ல் ஜூனியர் என்டிஆர் நடித்த தேவாரா: பார்ட் 1 மூலம் தென் இந்திய திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூனியர் என்டிஆர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானியுடன் அயன் முகர்ஜியின் வார் 2-ல் நடிக்கிறார்.