விமர்சனம்: பாட்டல் ராதா - மென்மையான, உணர்வுபூர்வமான, அவசியமான கருத்தை அழகாக விவரிக்கும் படம்!
ரேட்டிங்(3 / 5)
சிறப்பாக நடிக்க தெரிந்த தமிழ் நடிகர்கள் பலருக்கும் தமிழ் சினிமாவில் தங்களின் நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் யதார்த்தமாக நடிக்க தெரிந்த சில தமிழ் நடிகர்கள் பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்த வரிசையில் ஜோக்கர், பேட்ட போன்ற படங்களில் தனது மாறுபட்ட நடிப்பால் கவனம் ஈரத்த குரு சோமசுந்தரத்திற்கு தமிழ் சினிமாவை விட மலையாள படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்பு கிடைத்து வருகிறது. தற்போது சிறிய இடைவெளிக்கு பின்பு 'பாட்டல் ராதா' படத்தில் கதையின் நாயகனாக நடித்து தனது மாறுபட்ட நடிப்பால் சபாஷ் போட வைத்திருக்கிறார். இந்த படத்தை தினகரன் இயக்கி உள்ளார். பா. ரஞ்சித் தனது நீலம் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார். ரூபேஷ் ஷாஜியின் ஒளிப்பதிவில் வட சென்னையும் கூவமும் அழகாக தெரிகிறது.
காலை, மதியம், இரவு என அனைத்து நேரங்களிலும் கையில் பாட்டிலுடன் குடித்து கொண்டே இருப்பவர் ராதா மணி (குரு சோமசுந்தரம்). மனைவி, மகள், மகன் என வட சென்னையில் வாழ்ந்து வருபவர். இவரது அளவு கடந்த குடிப்பழக்கத்தால் இவரை பாட்டல் என்று ஏரியா மக்கள் கிண்டல் செய்கிறார்கள். போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்படுகிறார். அங்கே இருந்தும் தப்பி வீடு தேடி செல்கிறார் . நாள் தோறும் குடிப்பழக்கம் ராதாவுக்கு அதிகமாகிறது. ராதா பணம் இல்லாமல் திருட ஆரம்பிக்கிறார். மனைவி தற்கொலைக்கு முயல்கிறார்... குடியை கை விட்டு பாட்டல் ராதா சிறந்த மனிதனாக திருந்தினாரா என்பது தான் இப்படத்தின் கதை.
படம் முழுவதும் குடி பழக்கத்தை காட்டி விட்டு படம் முடியும் முன்பு குடி தவறு என்று இப்போது வரும் பல படங்களை போல் இல்லாமல் குடியினால் குடும்பத்தில் ஏற்படும் கோர முகத்தை எந்த வித சமரசமும் இல்லாமல் சொல்லி இருக்கிறது இந்த படம். தமிழ் நாட்டில் 'குடி ஒரு பழக்கம்' என்ற நிலையில் இருந்து 'நோயாக' மாறி, குடி நோயாளிகள் உருவாகி வருகிறார்கள் என்பதை வசனங்கள் வழியாகவும், இதற்கு மறுவாழ்வு மையம் வழியாக தீர்வு காண முடியும் என்பதை காட்சிகள் வழியாகவும் புரிய வைத்திருக்கிறார் டைரக்டர். தமிழ் நாட்டில் குடி பழக்கத்திற்கு பதவி, பணம் என்ற எந்த வேறுபாடும் கிடையாது என்பதை பெயிண்டர், பேராசிரியர், காவல் அதிகாரி கேரக்டர்கள் வழியாக சொல்லி இருக்கிறார் டைரக்டர்.
குடியை கை விட முயற்சி செய்து தோற்று போகும் போதும், குழந்தைகள் கண்முன்னே வறுமையில் வாடும் போதும், குடியால் தன் மனைவி வெறுக்கும் காட்சியிலும் 'சபாஷ் சோமு' என்று சொல்ல வைக்கிறார் குரு சோமசுந்தரம். குடிகார கணவனுடன் தமிழ் நாட்டு பெண்கள் படும் கஷ்டத்தை நம் கண் முன் கொண்டு வருகிறார் சஞ்சனா நடராஜன். 'குழந்தைகளுக்கு வலி இல்லாமல் எப்படி சாகணும்னு சொல்லி கொடுத்தேன்' என சஞ்சனா சொல்லும் ஒரு வசனம் நம் கண்களில் கண்ணீரை வர வைக்கிறது.
குடிகார கணவன்களுடன் நித்தம் போராடும் தமிழ் நாட்டு மனைவிகளுக்கு இந்த 'பாட்டல் ராதா ' படம் சமர்ப்பணம்.