
கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சிஸ் நாட்டில் வருடாந்தோறும் நடைபெறும் உலகின் மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாவாகும். இதில் உலகம் முழுவதிலுமிருந்து ஆவணப்படங்கள் உட்பட அனைத்து வகையான புதிய படங்களையும் முன்னோட்டமிடுகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து திரைப்படத் துறை வல்லுநர்கள், பிரபலங்கள் மற்றும் ஃபேஷன் ஐகான்கள் என 3,50,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள். மேலும் இந்த விழா புதிய படங்களைப் பார்க்கவும், திரைப்பட தயாரிப்பாளர்களைச் சந்திக்கவும், பிற தொழில் வல்லுநர்களுடன் இணையவும் ஒரு சிறந்த இடமாகும்.
இந்நிலையில் இந்தாண்டுக்கான 78வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. மே 13ம் தேதி துவங்கிய இந்த திரைப்பட விழா வரும் 24ம் தேதி வரை நடக்கவிருக்கிறது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தாண்டு பாலிவுட் நடிகைகளான ஆலியா பட், ஜான்வி கபூரும் முதல் முறையாக கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடக்கவிருக்கிறார்கள்.
உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சனோ கடந்த 2002ம் ஆண்டில் இருந்து கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு வரும் நிலையில் 2003ம் ஆண்டு கேன்ஸ் நடுவர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் கேன்ஸ் திரைப்பட விழா நடுவராக நியமிக்கப்பட்ட முதல் இந்திய நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா கலந்து கொண்டது தற்போது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. இந்த விழாவில் செம்ம கலர்புல்லாக உடை அணிந்து பங்கேற்ற பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா மீதுதான் அனைவரது கண்களும் விழுந்தன.
மாடல், நடிகை, அழகு போட்டியாளர் என பன்முகம் கொண்டவர் ஊர்வசி ராவ்டேலா. மிஸ் யுனிவர்ஸ் இந்தியா, மிஸ் இந்தியா பட்டங்களை வென்ற இவர் 2013-ம் ஆண்டு ‘சிங் சாப் தி கிரேட்’ என்ற பாலிவுட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர் சரவணன் அருளுடன் இணைந்து தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஊர்வசி ராவ்டேலா செம்ம கலர்ஃபுல்லான உடை, கண்கவர் ஆபரணங்கள், வண்ணமயமான தலைப்பாகை அணிந்து சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது அனைவரின் கண்களும் அவர் மீதுதான் விழுந்தன. குறிப்பாக அவர் அணிந்திருந்த உடை, ஆபாரணங்களை விட அவர் கையில் வைத்திருந்த கிளி வடிவிலான பர்ஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
ஊர்வசி ராவ்டேலா நீலம், சிவப்பு, மஞ்சள் மற்றும் கருப்பு என அடர் நிறங்கள் கலந்த ஒரு அழகான ஸ்ட்ராப்லெஸ் ஸ்ட்ரக்சர்டு கவுனை அணிந்திருந்தார். அந்த உடைக்கு கூடுதல் அழகை சேர்த்தது அவரது உடைக்கு பொருத்தமான வண்ணமயமான கற்களால் பதிக்கப்பட்ட கிரீடம். இருப்பினும், உண்மையை சொல்ல வேண்டுமானால், ஊர்வசி ராவ்டேலாவின் வித்தியாசமான மற்றும் ஆடம்பரமான கிளி வடிவ பர்ஸ் சிவப்பு கம்பள தருணத்தை மறக்க முடியாததாக மாற்றியது மட்டுமில்லாமல், நிகழ்ச்சியில் அனைவரது மனதையும் திருடியது என்றே சொல்ல வேண்டும்.
வண்ணமயமான பறவையின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த பர்ஸ், அதில் பதிக்கப்பட்டிருந்த ரத்தினங்கள் மற்றும் மின்னும் படிகங்கள் கேமரா ஃப்ளாஷ்களின் கீழ் மின்னியது. இந்த கிளி வடிவ பர்ஸ், வடிவமைப்பாளர் ஜூடித் லீபரின் ஆடம்பரப் படைப்பாகும்.
நடிகை ஊர்வசி ராவ்டேலா சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்து அந்த கிளி பர்ஸ்க்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் இந்த கிளி பர்ஸின் விலை தற்போது வெளியாகி உள்ளது. இந்த கிளி பர்ஸின் விலை ரூ.4 லட்சத்து 68 ஆயிரம் மட்டுமே என தகவல் வெளியாகியிருக்கிறது. அதன் விலையை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஊர்வசி ராவ்டேலா தனது ஆடம்பரமான ஆபரணங்களுக்கு பெயர் பெற்றவர், மேலும் இந்த அரிய கிளி கிளட்ச் (பர்ஸ்) இப்போது கேன்ஸ் 2025-ல் அதிகம் பேசப்படும் ஃபேஷன் தருணங்களில் ஒன்றாக மாறியுள்ளது.