
தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல திரைப்படங்கள் வெளிவந்தாலும், காலத்தைக் கடந்து நிற்கும் படங்கள் குறைவு தான். அவ்வகையில் கடந்த 2005 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் தமிழ்ப் புத்தாண்டிற்கு வெளியான சந்திரமுகி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்றும் கூட இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு பிரியம் உண்டு. ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர் மற்றும் வடிவேலு என ஒரு நடிகர் பட்டாளமே இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் எதுவென்றால், அது ஜோதிகாவின் அசாத்தியமான நடிப்பு தான். இப்படத்தில் ஜோதிகா சந்திரமுகியாகவே வாழ்ந்திருப்பார். அந்த அளவிற்கு அவரது கதாபாத்திரம் கச்சிதமாக இருந்தது. ரஜினியின் திரைப்பயணத்தில் மிகப்பெரும் வெற்றித் திரைப்படமாகவும் சந்திரமுகி அமைந்தது. காமெடி, த்ரில்லர், உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் பாடல் என முழு கமெர்ஷியல் ஹிட் அடித்தது சந்திரமுகி திரைப்படம்.
சந்திரமுகி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஜோதிகா இல்லை; சிம்ரன் தான் என்பது பலரும் அறியாத தகவல். சந்திரமுகி திரைப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் தொடங்கி 3 நாட்கள் சிம்ரன் நடித்தும் விட்டார். ஆனால் அதன்பிறகு குடும்பச் சூழ்நிலை காரணமாக சிம்ரனால் இப்படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. இதனால் சிம்ரனுக்கு மாற்று நடிகையைத் தேடியது படக்குழு. அந்த நேரத்தில் சந்திரமுகி படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் தான் ஜோதிகா.
சிம்ரனுக்கு மாற்றாக வந்தாலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஜோதிகா ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். இன்றும் சந்திரமுகி படத்தை நினைவு கூர்ந்தால் முதலில் நினைவுக்கு வருவது ஜோதிகாவின் நடிப்பு தான்.
சந்திரமுகி படத்திற்கு முன்பு வரை சிம்ரன், நடிகர் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடித்ததில்லை. சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இருப்பினும் அந்த வாய்ப்பு பாதியிலேயே கைநழுவியதால், வருத்தமடைந்தார். அதன்பிறகு பல ஆண்டுகளாக ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு சிம்ரனுக்கு அமையவே இல்லை. பிறகு 2019 ஆம் ஆண்டில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் தான் ரஜினியுடன் இணைந்து நடித்தார் சிம்ரன். சந்திரமுகியில் கைநழுவிய வாய்ப்பு பேட்ட திரைப்படத்தில் நடிகை சிம்ரனுக்கு கை கூடியது.
1990-களின் காலகட்டத்தில் தமிழ்த் திரைத்துறையில் நடிக்க வந்து, தனக்கென தனியிடத்தைப் பிடித்தவர் சிம்ரன். திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்தவர் குட் பேட் அக்லி மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். முன்பு கதாநாயகியாக வெற்றிப்படங்களைக் கொடுத்த பல நடிகைகள், இன்று குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அவ்வகையில் சிம்ரனின் வரவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் பிறகும் சிம்ரன், ரஜினியுடன் சேர்ந்தே நடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.