
90-களின் காலகட்டத்தில் இளைஞர்கள் பலருக்கும் கனவுக்கன்னியாக இருந்த நடிகை சிம்ரன், தனது முதல் திரை அனுபவம் குறித்து தற்போது பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 1990-களின் காலகட்டத்தில் பல நடிகைகள் அறிமுகமாகினர். அதில் மிகவும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். ஜோடி, வாலி மற்றும் பிரியமானவளே உள்ளிட்ட பல காதல் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கிக் கொண்டார்.
பொதுவாக நடிகைகள் பலரும் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொள்வார்கள். சிம்ரனும் அதையேதான் செய்தார். இருப்பினும் தற்போதைய காலகட்டத்தில் பல ஆண்டுகள் கழித்து பல நடிகர், நடிகைகள் சினிமாவில் கம்பேக் கொடுத்து வருகின்றனர். இந்தப் பட்டியலில் நடிகை சிம்ரனும் இருக்கிறார்.
பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கத் தொடங்கினாலும், சிம்ரனுக்கான வரவேற்பு இன்றுவரை குறையவில்லை. அதற்கேற்ப சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் அடுத்தடுத்தப் படங்களில் நடிக்க சிம்ரனுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனால் சமூக வலைதளங்களில் தற்போது அதிகமாக உலா வருகிறார் சிம்ரன்.
சமீபத்தில் மலையாள நடிகர் மம்முட்டியைப் புகழ்ந்து பேசியுள்ளார் சிம்ரன். இதற்கு முக்கிய காரணமும் உண்டு. நடிகை சிம்ரன் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே மலையாளத்தில் தான் அறிமுகமானார். அதுவும் மம்முட்டி நடித்த இந்திர ப்ரஸ்தம் என்ற திரைப்படத்தில் தான். இந்தப் படம் தமிழில் டெல்லி தர்பார் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. மலையாளத்தில் சிம்ரன் நடித்த முதல் படமும் இதுதான்; கடைசி படமும் இதுதான். அதன்பிறகு தமிழில் முன்னணி கதாநாயகியாக பட்டையைக் கிளப்பினார் சிம்ரன்.
சமீபத்தில் தன்னுடைய திரைப் பயணம் தொடங்கியது குறித்து சிம்ரன் பேசுகையில், “தமிழுக்கு முன்பாகவே நான் மம்முட்டியுடன் இணைந்து மலையாளத்தில் இந்திர ப்ரஸ்தம் என்ற படத்தில் தான் முதன்முதலில் நடித்தேன். இந்தப் படத்தில் நான் அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும், அவருடன் இணைந்து நடித்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது. நான் சமீபத்தில் மம்முட்டி நடித்த பஷுக்கா திரைப்படத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன். அன்று எப்படி இருந்தாரோ அதே மாதிரி தான் இப்போதும் இருக்கிறார். இன்று வரை மம்முட்டி மாறவே இல்லை.
என்னுடைய தம்பியான சுமித்தும் பஷுக்கா படத்தில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் மம்முட்டி ஒரு ஐகானிக் நடிகர். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தைப் போலவே, மலையாளத்தில் மம்முட்டியும் என்னைப் போன்ற பல நடிகர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். அவரைக் காணும் போது இன்னமும் எனக்கு வியப்பாகவே உள்ளது” என அவர் புகழ்ந்துள்ளார்.
இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்திருக்கும் சிம்ரன், 2000-இல் அதிக சம்பளம் வாங்கிய நடிகையாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்ரன் தனது திரைப்பயணத்தில் சில ஏற்றத்தாழ்வுகளைக் கண்டிருந்தாலும், இன்றும் ரசிகர்களால் விரும்பப்படும் ஒரு நடிகை என்பதை மறுக்கவே முடியாது.