
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராஷ்மிகா மந்தனா பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்ததன் மூலம் 'பான் இந்தியா' நடிகையாவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இந்தியில் அனிமல் படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான ‘சாவா’ (Chhaava) என்ற சரித்திர படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் 'சாவா'. இதில் சம்பாஜி மகராஜாவாக பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசலும், சம்பாஜியின் மனைவியான மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர்.
லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் நடிகர் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் அசுதோஷ் ராணா, வினீத் குமார் சிங், திவ்யா தத்தா மற்றும் டயானா பென்டி போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர்.
ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14-ம்தேதி உலகமெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.31 கோடியாகவும், 3 நாட்களின் முடிவில் ரூ.116 கோடி என உலகளவில் ரூ.150 கோடி வசூலை எட்டியது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 10 நாட்கள் ஆனநிலையில் உலகம் முழுவதும் ரூ.350 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இப்படி வசூலில் சாதனை படைத்து வரும் இந்த படத்திற்கு தற்போது புதிய பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது ‘சாவா’ படத்தில் மராட்டிய வீரர்களான கனோஜி மற்றும் கன்ஹோஜி ஷிர்கே ஆகியோர் முகலாய மன்னன் அவுரங்கசீப்புடன் இணைந்து சம்பாஜி மகராஜாவுக்கு துரோகம் செய்ததாக காட்சிகள் படத்தில் உள்ளதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
எங்கள் மூதாதையர்களை பற்றி படத்தில் தவறாக சித்தரித்து இழிவுப்படுத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டிய, அந்த வீரர்களின் வாரிசுகளாக இருக்கும் குடும்பத்தினர் ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடரப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதிர்ச்சி அடைந்த இயக்குனர் லட்சுமன் உடேகர் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் ‘சாவா’ படத்தில் கனோஜி மற்றும் கன்ஹோஜியின் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டு உள்ளதாகவும், அவர்களின் குடும்ப பெயர்களை குறிப்பிடவில்லை என்றும் விளக்கம் அளித்ததுடன், அதையும் மீறி ஷிர்கே குடும்பத்தின் உணர்வுகளை இந்தப்படம் புண்படுத்தி இருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்து உள்ளார்.