
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராஷ்மிகா மந்தனா பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்ததன் மூலம் 'பான் இந்தியா' நடிகையாவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
தமிழில் ‘சுல்தான், வாரிசு’ மற்றும் தெலுங்கில் ‘புஷ்பா’ படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனாவுக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா 2 படம் இதுவரை ரூ.1900 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. விஜய் ஜோடியாக இவர் நடித்த வாரிசு, இந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்த அனிமல், அல்லு அர்ஜூனுடன் அவர் நடித்த ‘புஷ்பா-2' ஆகிய மூன்று படங்களும் இதுவரை ரூ.3000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதால், இவர் நடித்தால் படம் வசூலாகும் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள் அவர்களது படங்களில் ராஷ்மிகாவை ஒப்பந்தம் செய்ய காத்து கிடக்கின்றனர்.
2016-ம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற கன்னடத் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், தனது வசீகரம், நடிப்புத் திறன், கவர்ச்சி மற்றும் தொற்றுப் புன்னகையால் உலகளவில் மில்லியன் கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார். ராஷ்மிகா மந்தனா தற்போது சிகந்தர் படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் தனுஷ், நாகார்ஜுனாவுடன் நடித்த 'குபேரா' திரைப்படம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியில் அனிமல் படத்தை தொடர்ந்து தற்போது ‘சாவா’ (Chhaava) என்ற சரித்திர படத்தில் நடித்து இருக்கிறார். மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவாக பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலும், மகாராணி யேசுபாயாக ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர்.
மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் 'சாவா'. லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் நடிகர் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் அசுதோஷ் ராணா, வினீத் குமார் சிங், திவ்யா தத்தா மற்றும் டயானா பென்டி போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர்.
இப்படம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது. நடிகை ராஷ்மிகா தனது காலில் காயத்துடன் ’சாவா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. அதாவது டிரெய்லரில், மகாராஷ்டிராவின் பாரம்பரிய இசைக்கருவியான 'லெசிம்' உடன் விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடனமாடுவது போன்ற காட்சி இடம்பெற்றதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிளது.
'சாவா' படத்தில் இருந்து சத்ரபதி சாம்பாஜி மகாராஜ் மற்றும் மகாராணி யேசுபாயின் நடனக் காட்சியை நீக்குமாறு மராட்டிய அமைப்பான சாம்பாஜி பிரிகேட் கோரியுள்ளது. இந்த நடனக் காட்சியின் மூலம் சாம்பாஜி மகாராஜை அவமதிப்பதாகவும், அதை நீக்க வேண்டும் என்றும் மராட்டிய அமைப்பான சம்பாஜி பிரிகேட் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் இந்த படத்தில் இருந்து நடன காட்சியை நீக்க வேண்டும் என்றும் சரித்திர சித்தரிப்பு உண்மைத் தன்மையோடு இருக்க வேண்டும் என்றும் பலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர்.
பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ‘சாவா‘ படத்தில் இருந்து நடன காட்சி நீக்கப்படும் என்றும், அந்த நடனத்தை விட சாம்பாஜி மகாராஜா மிகவும் பெரியவர், எனவே அந்த நடன காட்சியை படத்தில் இருந்து நீக்க உள்ளோம் என்றும் இயக்குனர் அறிவித்து உள்ளார்.