'சட்னி சாம்பார்'... யோகி பாபு - ராதாமோகன் நகைச்சுவைச் சிற்றுண்டி!

Chutney Sambar Review
Chutney Sambar Review
Published on

இது கம் பேக் சீசனாக இருப்பது அனைவருக்கும் தெரியும். விஜய் சேதுபதி கம்பேக், இந்தியன் தாத்தா கம்பேக் என்பது போல இது இயக்குனர் ராதாமோகனின் கம்பேக் என்று வைத்துக்கொள்ளலாம். 

ராதாமோகன் மற்றும் இயக்குனர் விக்ரமன் உலகங்களில் கெட்டவர்கள் என்பவர்களே கிடையாது. அந்தளவு நேர்மறை எண்ணங்களைத் தங்கள் படைப்புகளில் விதைப்பவர்கள் இருவரும். ராதாமோகனைப் பொருத்த வரை நகைச்சுவை இழையோடும் கதை, மெலிதான சோகம், இயல்பான வசனங்கள் மற்றும் நடிப்பு இவை தான் அவரின் ட்ரேட் மார்க். இவரது இயக்கத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளிவந்துள்ள வெப் சீரிஸான சட்னி சாம்பாரும் அதுபோலத் தான்.

இதைப் பற்றிப் பேசும் பொது யோகிபாபு இல்லையென்றால் இந்தச் சீரிஸ் நடந்திருக்கவே இருக்காது என்று ராதாமோகன் சொன்னார். அதற்குச் சற்றும் மாற்றுக் கருத்து இல்லாதவாறு தான் இதில் நடித்திருக்கிறார் யோகிபாபு. சச்சின் பாபு என்ற கேரக்டர் அவருக்கென்று அளவெடுத்துச் செய்தது போல் தான் இருக்கிறது. வார்த்தைக்கு வார்த்தை கவுண்டர் கொடுப்பது, தனது உருவத்தை மற்றவர்கள் கேலி செய்ய அனுமதிப்பதோடு தானே அதைச் செய்து கொள்வது, சோகமோ, நகைச்சுவையோ தனது மீட்டரிலிருந்து சற்றும் விலகாதது என ஜமாய்க்கிறார் மனுஷன். யோகிபாபு இருக்கும் இடத்தில் காமடி இருக்காது என்ற பேச்சும் சமீப காலங்களில் அடிபட்டுக் கொண்டிருந்தது. இதில் அதையும் அவர் மாற்றியிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். இவருக்கு அடுத்து இதில் ஸ்கோர் செய்பவர் நிதின் சத்யா. முட்டைக்கண்ணும், சிரிக்காமல் அவர் அடிக்கும் டயலாக்குகளும் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றன. 

இந்த இடத்தில் சோக கீதம் இசைக்கப் போகிறார்கள் என்று என்னும் இடத்தில் அதை அப்படியே புரட்டி நகைச்சுவையாக்கி விடுகிறார்கள். ஆரம்பத்தில் சில காட்சிகளில் நன்றாக இருந்த இந்தப் பாணி சில இடங்களில் அசௌகரியமாக உணர வைக்கிறது. குறிப்பாக அந்திமக் காரியங்களில் ஈடுபட்டிருக்கும்போது அடிக்கும் டயலாக்குகள் கொஞ்சம் அடங்குங்கப்பா என்று சொல்ல வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
Raayan Review - 'ராயன்' - ரத்த உறவுகளின் குருதியாட்டம்!
Chutney Sambar Review

கதையைப் பற்றிச் சொல்லவில்லையே. அமுதா கபே என்ற பெயரில் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார் நிழல்கள் ரவி. அந்த ஹோட்டலில் சாம்பார் ருசி இந்திய அளவில் பிரசித்தி பெற்றது. அந்த அளவு அதன் ரெசிபியை ரகசியமாக வைத்துள்ளனர் அவர் குடும்பத்தினர். திடீரென்று புற்றுநோய் காரணமாகத் தான் இறக்கும் தருவாயில் தனக்கு இருந்த ஒரு பழைய தொடர்பு பற்றியும் அதன் மூலம் இருக்கும் ஒரு மகன் பற்றியும் தனது தற்போதைய மகனிடம் (கயல் சந்திரன்) சொல்லிவிட்டு போய்ச் சேர்கிறார். போகும்போது அவனுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சத்தியம் வாங்கி கொள்கிறார். அவர் தேடி கண்டுபிடிக்கும் அந்த மகன் தான் யோகிபாபு. அவருக்குத் தன்னை சிறு வயதில் உதறிவிட்டுச்சென்ற தந்தை என்றாலே எட்டிக்காய். ஓடிப்போன பாடு ஒண்ணாம் நம்பர் பிராடு என்பது தான் அவர் உதிர்க்கும் தந்தையைப் பற்றிய அபிப்ராயம். கஷ்டப்பட்டு அவரை அழைத்து வரும் சந்திரன், நிதின் சத்யா, குமரவேல் கூட்டணி. இதன் பிறகு என்ன நடந்தது. அவர்கள் குடும்பம் யோகிபாபுவை ஏற்றதா இல்லையா? (சொல்ல மறந்து விட்டதே) நிழல்கள் ரவிக்கு சாம்பார் ரெசிப்பி ரகசியம்போல அவரது மகனான யோகிபாபுவிற்கு சட்னி ரெசிப்பி ரகசியம். சட்னியும் சாம்பாரும் இணைந்ததா டிபன் ரசித்ததா என்பது தான் இந்தச் சீரிஸ்.

பெரிதாக லாஜிக் பற்றி எல்லாம் கவலைப்படாமல் புன்னகையுடன் பார்க்கத் தகுந்த ஒரு சீரிஸை கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் இந்த அணி வெற்றி பெற்று இருக்கிறது. இவர்கள் வீட்டு சமையல் பெண்ணாக வரும் வாணி போஜன், மகளாக வரும் மைனா நந்தினி, இரண்டாவது மனைவியாக வரும் மீரா கிருஷ்ணன், வாணியின் அப்பாவாக வரும் சார்லி, தீபா ஷங்கர், மோகன்ராம், எல்லாரும் அவர்களுக்குக் கொடுத்துள்ள பாத்திரத்தைப் போதுமான அளவு செய்திருக்கிறார்கள். யாருக்கும் மரியாதை கொடுக்காமல் பேசும் யோகிபாபுவின் வசனங்கள் ஒரு கட்டத்தில் இவர் இப்படித் தான் என்று பழகிப் போகிறது.

இதையும் படியுங்கள்:
ANDHAGAN - அப்பாவின் இயக்கத்தில் பிரசாந்த் 'ரீ என்ட்ரி'!
Chutney Sambar Review

வசதியான திரைக்கதை அமைப்பின் மூலம் சில கேரக்டர்களின் முடிவுகள் அந்தரத்தில் விடப்படுகின்றன. சார்லி பாத்திரம் அதில் ஒன்று. அவர்மீது எரிச்சல் வந்த அளவு பரிதாபம் வரவே இல்லை. பெரிதாகத் திருப்பங்கள் தேவைப்படாத திரைக்கதையாக இருப்பதால் எதிர்ப்பார்ப்புகள் என்று எதுவும் இல்லாமல் இருப்பது ஒரு குறை. சொடக்கு போடும் நேரத்தில் நடைபெறும் கதாபாத்திரங்களின் மனமாற்றம் ஒரு உதாரணம். 

எல்லாம் இருக்க, காட்சிக்குக் காட்சி வன்முறையும், ரத்தமும், ஆபாசமும், கேட்கக்  கேட்கக் காதுகளை அறுத்து எறிந்து விடலாமா என நினைக்க வைக்கும் ஆபாச வசனங்களும் நிறைந்திருக்கும் சீரிஸ்கள் வெளி வந்து கொண்டிருக்கும் இந்த நாட்களில் இது மிகப் பெரிய ஆறுதல். அந்த வகையில் இயக்குனர்  ராதாமோகனுக்கும் இதில் நடித்தவர்களுக்கும் ஒரு பாராட்டு.

அது சரி அந்தச் சட்னி சாம்பார் சீக்ரட் ரெசிப்பி  என்ன என்று கேட்பவர்களுக்கு, "காத்திருங்கள். அடுத்த சீசனில் சொல்லக்கூடும்" என்பதுதான் பதில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com