Raayan Review - 'ராயன்' - ரத்த உறவுகளின் குருதியாட்டம்!

Raayan Review
Raayan Review
Published on

ஐம்பதாவது படம் என்பது எல்லா நடிகர்களுக்கும் ஒரு கண்டம். இது போன்ற படங்கள் பெரும்பாலும் வரவேற்பைப் பெறுவதில்லை. விஜயசேதுபதி சமீபத்தில் 'மகாராஜா' மூலம் அந்தக் கண்டத்தை உடைத்தார். இது தனுஷின் முறை. இரண்டு படங்களுக்கும் உள்ள ஒர் ஒற்றுமை என்னவென்றால், இருவரும் அதை ஒரு கமர்ஷியல் மசாலா படமாக எண்ணாமல் சற்றே கதை என்ற வஸ்து இருந்தால் பரவாயில்லை என்று நினைத்து நடித்து இருக்கிறார்கள். 

இரண்டு தம்பிகள், கைக்குழந்தையாக ஒரு தங்கையென ஊரை விட்டு ஓடி வரும் தனுஷ், செல்வராகவனிடம் அடைக்கலம் கேட்கிறார். வளர்ந்து, காலப்போக்கில் ஒரு வண்டியில் கையேந்தி பவன் நடத்தி வருகிறார். ஒரு தம்பி காளிதாஸ் ஜெயராம் கல்லூரியில் படித்து வருகிறார். மற்றொரு தம்பி சந்தீப் கிஷன் அடிதடியில் இறங்குகிறார் அல்லது அபர்ணா பாலமுரளியைக் காதலிக்கிறார். பெரிய அண்ணனின் அன்புப் பிடியில் தங்கை துஷாரா விஜயன்.

அவர்கள் இருக்கும் பகுதியில் இரண்டு தாதாக்கள். ஒன்று சரவணன். இன்னொன்று எஸ் ஜே சூர்யா. இவர்கள் இருவருக்கும் ஏற்படும் ஒரு மோதலில் தனுஷின் குடும்பம் மாட்டிக் கொள்ள, தம்பியைக் காக்க ஆயுதம் எடுக்கிறார் தனுஷ். கடைசியில் என்ன ஆனது என்பதுதான் ராயன்.

கதையாகப் பார்த்தால், பார்த்ததுப் பழகியதைப் போல இருக்கும் என்பதால் தனது உருவாக்கத்தில் சற்றே சுவாரசியம் கூட்ட நினைத்திருக்கிறார் இயக்குனர் தனுஷ். அது பல இடங்களில் ஒத்துழைத்தாலும் சில இடங்களில் 'அடப்போடா' என்று தான் சொல்ல வைக்கிறது. என்ன நடக்கும் என்பதை மிக எளிதாக யூகிக்க முடிவது ஒரு மிகப் பெரிய பலவீனம். சில கேரக்டர்களின் திடீர் மனமாற்றம் அவ்வளவு நம்பும்படியாக இல்லை அல்லது அப்படிச் சொல்லப் படவில்லை. 

'இந்தக் கேரக்டரில் ரஜினியை நடிக்க வைத்திருப்பேன்' என்று தனுஷ் ஏன் சொன்னாரெனத் தெளிவாகத் தெரிகிறது. மருத்துவமனையில் ஒருவரைப் பார்த்து தனுஷ் பேசும் காட்சி, எஸ் ஜே சூர்யாவுடனான அவர் அறிமுகக் காட்சி அவர் படங்களை நினைவு படுத்துகிறது; நன்றாக இருந்தாலும் கூட.

ஒரு படத்தில் தகுந்த நடிகர்களைப் பிடித்து விட்டால் படம் பிழைத்துவிடும் என்பதற்கு இப்படம் நல்லதொரு சாட்சி. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் துஷாரா விஜயன். ஒரு கிளினிக்கில் செல்வராகவனுடன் சேர்ந்து அவர் போடும் சண்டைக்காட்சி அதகளம். படத்தில் பலத்த கைதட்டல் வாங்கும் சண்டைக்காட்சிகளில் இதற்கு முதலிடம்.

இதையும் படியுங்கள்:
அடங்காத அசுரன் RAAYAN!
Raayan Review

பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை ரத்தம் தெறிக்க அமைத்து இருக்கிறார். ரகுமானின் பின்னணி இசையும் ஓம்ப்ரகாஷின் ஒளிப்பதிவும் போட்டி போட்டுக் கொண்டு அதற்கு உதவியிருக்கின்றன. அதிலும் அந்த 'அடங்காத அசுரன் தான்' பாடல்... ஆயிரக்கணக்கான ஆட்களுடன் அதைப் படமாக்கியிருக்கும் விதம் அற்புதம். 

நிறைவான அம்சங்கள் இருக்கும் அளவு குறைகளும் இல்லாமல் இல்லை. எஸ் ஜே சூர்யா மற்றும் சரவணன் இருந்தாலும் இவர்கள் வில்லன் என்றால் அவர்கள் கூட நம்ப மாட்டார்கள். இது போன்ற ஒரு கதைக்கு வில்லன் இன்னும் வலுவாக இருந்திருந்தால் படம் இன்னும் இறுக்கமாக இருந்திருக்கும். தனுஷ் ஜெயித்து விடுவார் என்று தெளிவாகத் தெரிவது போலத் தான் இருக்கின்றனர் இந்த வில்லன்கள் இருவரும். எஸ் ஜே சூர்யாவும் கொஞ்சம் அடக்கிதான் வாசித்திருக்கிறார். இரண்டு பெண்டாட்டிகளோடு அவர் அல்லாடும் சில காட்சிகள், படத்தில் காமடியன் இல்லாத குறையை இவர் தீர்க்கிறாரோ என்று நினைக்க வைக்கின்றன. வரலட்சுமி சில காட்சிகள் வந்தாலும் ஒரு காட்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துக் கொள்கிறார். 

கதைக்களம் என்று ஒன்று சரியாக வடிவமைக்கப்படாததும், பெரும்பாலான காட்சிகள் இருளில் நடப்பதும், குறிப்பிடத்தக்க குறைகள். அடுத்தடுத்து வரும் சண்டைக்காட்சிகளில் சில முக்கியமான நிகழ்வுகள் மேம்போக்காகக் கடந்து சென்று விடுகின்றன. துஷாரா விஜயன் சந்திப்பதாகச் சொல்லப்படும் வன்கொடுமைக் காட்சி அதுபோல ஒன்று. தம்பிகளின் மனமாற்றமும் அதுபோலத் தான். போலீஸ் இல்லாத குறையை தீர்த்து வைப்பதுபோல் உள்ளது பிரகாஷ்ராஜ் ரோல். ரவுடிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துப் அவரும் பெரிய ரவுடிபோலத் தான் நடந்து கொள்கிறார். அவரது தந்தை மரணத்திற்கு பதிலடி கொடுப்பேன் என்று முதல் காட்சியில் சொல்கிறார் அவ்வளவே.

இதையும் படியுங்கள்:
ஆசியாவிலேயே முதல் முறையாக...'லைவ்' சிங்கத்தின் கர்ஜனையுடன் ஒரு படம்! பிரபு சாலமன் இயக்கும் 'மாம்போ'!
Raayan Review

மிக முக்கிய சம்பவங்களான தனுஷ் குடும்பத்தின் பெற்றோர்கள் என்ன ஆனார்கள் என்ற கேள்வியும், ஒரு பெரிய ரவுடியே பயப்படும் அளவு  தனுஷ் செய்த அதி பயங்கர செய்கை என்ன என்பதையும் இவர்கள் காட்சிப் படுத்தவே இல்லை. அதனால் ஏதாவது ப்ளாஷ் பாக் வரும் என்று எதிர்பார்த்திருந்தால் ஏமாற்றம் தான்.

எல்லாவற்றையும் விட இத்தனை கொலைகளுக்குப் பிறகும் ஒரு வண்டியில் ஏறி தனுஷ் தப்பித்துப் போவது ஆடுகளம் கிளைமாக்சை நினைவூட்டுகிறது. செல்வராகவன், மற்றும் வெற்றி மாறனின் பாதிப்பு தனுஷிடம் அந்த அளவுக்கு இருக்கிறது. 

பார்த்துப் பழகிய கதை, திருப்பங்களில்லாத திரைக்கதை இது இரண்டும் படத்தில் சற்று தொய்வை ஏற்படுத்தினாலும், தனுஷின் அட்டகாசமான திரை ஆளுமையும், துஷார விஜயனின் நடிப்பும், ரகுமானின் இசையும் படத்தோடு நம்மை ஒன்றச் செய்து விடுகின்றன.

சில குறைகளைக் களைந்து, விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் இந்தப் படம் 'ஓகே' என்று சொல்லாமல் 'ஓஹோ' என்று சொல்லும்படியான உயரத்தைத் தொட்டிருக்கும். அப்படி இல்லாமல், 'பார்க்கலாம்' என்பதோடு வெளியே வரவேண்டியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com