மார்ச் 6 நடிகர் சார்லி பிறந்த நாள்
திரைப்படங்கள் நம் வாழ்வின் அங்கமாக மாறி விட்ட சூழ்நிலையில் சில கதாபாத்திரங்களை பெரிய திரையில் மனம் விட்டு ரசிப்போம். கதை சுவாரஸ்யமாக நகர்தலுக்குத் தேவையான துணை பாத்திரங்களையும், மக்களை சிரிக்க வைக்கும் நகைச்சுவை நாயகர்களையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
நகைச்சுவையில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்தவர் நடிகர் சார்லி. நடிகர் விஜய், சூர்யா, ராதாரவி போன்ற பெரிய நடிகர் பட்டாளத்துடன் நகைச்சுவை மன்னரான வடிவேலுவுடன் இணைந்து பிரெண்ட்ஸ் படத்தில் இவர் ஏற்ற கோவாலு பாத்திரத்தின் நகைச்சுவை எப்போது பார்த்தாலும் வாய் விட்டு சிரிக்க வைத்து மனதை இலேசாக்கும்.
64 வயதை எட்டும் சார்லியைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை காண்போம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்த வேல்முருகன் தங்கசாமி மனோகர் என்ற இளைஞர் சார்லியாக இயக்குனர் சிகரம் என அழைக்கப்படும் பாலச்சந்தரால் பெயர் மாற்றம் கண்டது 'பொய்க்கால் குதிரை' எனும் அறிமுகப்படத்தில்தான். 1982 ஆம் ஆண்டில் அறிமுகமாகி இன்று வரை நகைச்சுவை, குணசித்திரம் என்று பல பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
வேதியியலில் பட்டம் பெற்ற இவர் கல்லூரி படிக்கும் போதே சிவாஜி கணேசன் , நாகேஷ் போன்ற தமிழ் நடிகர்களைப் போல் நடித்துக் காட்டி அசாத்திய திறமைக்காக பாராட்டப்பட்டவர். கலைஞராக , நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் 1000 க்கும் மேற்பட்ட நாடகங்களை நிகழ்த்தியது சிறப்பு.
பொழுதுபோக்கு கலைஞர் மற்றும் மேடைக் கலைஞராக மட்டுமின்றி தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பாடல் மற்றும் நாடகப் பிரிவிலும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.
சுமார் 800 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சார்லி இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தால் தயாரிக்கப்பட்ட படங்கள் உட்பட பல புகழ்பெற்ற படங்களில் முக்கியமான பாத்திரத்தில் பங்கு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மிமிக்ரி, மோனோ ஆக்டிங் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றுவதில் மிகவும் திறமையானவர். மேலும் மேடை பேச்சுகளிலும் வல்லவரான இவரது பேச்சுக்கள் தன்னம்பிக்கை நிறைந்தவை.
நகைச்சுவை நடிப்பால் மனங்கவர்ந்த சார்லி, மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் கலை முதுகலைப் பட்டமும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தத்துவ முதுகலைப் பட்டமும் பெற்றதுடன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாடகத் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் கே. ரவீந்திரன் வழிகாட்டலில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'தமிழ் சினிமாவில் நகைச்சுவை' என்ற தலைப்பில் தமிழில் முனைவர் பட்டம் பெற்று கல்வியிலும் சிறந்தவர் என்று நிரூபித்துள்ளார்.
சிறந்த நடிப்பிற்காக தமிழ்நாடு மாநில அரசு விருது, பல முறை சிறந்த நகைச்சுவை நடிகர் விருது, சிறந்த குணச்சித்திரக் கலைஞர் விருது, கலைமாமணி விருது , கலைச்சிகரம் விருது போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
அன்றைய படங்களான கோபுர வாசல், காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, வெற்றி கொடி கட்டு, உன்னை நினைத்து, கண்ணுபட போகுதய்யா , பிரண்ட்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் இவருடைய பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இப்போதும் பேசப்படுகிறது. இன்றும் இவர் மாற்றத்திற்கு ஏற்றவாறு தனது பாத்திரத்தில் பிரகாசிப்பது சிறப்பு. சான்றாக சமீபத்தில் வந்த பிரதர் படத்தில் குடிகாரத்தந்தையாக நடித்து சிறந்த குணச்சித்திர நடிகராக பாராட்டுகளை குவித்ததை கூறலாம்.
பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள இவர் நல்லதொரு குடும்பத் தலைவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்தவொரு பிரச்சினையிலும் சிக்காமல் தனது துறையில் முன்னேறி வரும் நடிகராக இவரை குறிப்பிடலாம். 'ஒழுக்கம் ஒன்றே முக்கியம்' என கற்றுத்தந்த தந்தையின் சொல்லை வேதவாக்காக நினைத்து சக நடிகர்களுடன் இணைந்து பழகும் குணம், நடிகைகளை தனது சகோதரியாக நினைக்கும் பண்பு என திரையுலகில் வலம் வருகிறார் சார்லி.
நடிக்க வந்த புதிதில் பழம்பெரும் நடிகர் சந்திரபாபுவின் சாயல் தெரிகிறது என வந்த விமர்சனத்தால் வருந்தி தனக்கென ஒரு பாணியை பின்பற்றி இதோ 40 வருடங்களுக்கு மேல் தொடரும் இவரது திரைப்பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துவோம்.