சிகரம் என்றால் அது இமயமலைதான். தமிழ்த் திரைத்துறையில் இயக்குநர்களின் சிகரம் என்றால் அது ‘கே.பி.’ என்று பலராலும் அழைக்கப்படும் கே.பாலச்சந்தர் மட்டுமே. இவரது புதுமையான படைப்புகள் சமூகத்திலும் மற்றவர் வாழ்க்கையிலும் ஒரு பெரும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது என்றால் அது மிகையல்ல. மற்றவர்கள் தொடத் தயங்கும் முரணான கருத்துக்களையும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் கதைக் களத்தை அமைப்பதில் இவருக்கு நிகர் இவரே.
தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பலருக்கும் அடையாளம் தந்து, கலையுலகில் நீங்காப் புகழுக்கு சொந்தக்காரரான இயக்குநர் கே.பாலச்சந்தரின் நினைவு தினம் இன்று.
1930ம் ஆண்டு பிறந்த தஞ்சாவூர் மண்ணின் மைந்தரான பாலசந்தர், திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே நாடகத் துறையில் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார். 59 ஆண்டுகளுக்கு முன்னர் எம்ஜிஆர் நடித்த தெய்வத்தாய் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றியதன் மூலம் இவரது திரையுலகப் பயணம் துவங்கியது.
1965ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் தமிழ் திரைப்படமான ‘நீர்க்குமிழி’ மாபெரும் வெற்றி பெற்றது. இதன் மூலம் கே.பி.யின் தனித்தன்மையை பலரும் பாராட்டி அங்கீகரித்து அவரை வரவேற்றனர். இதில் நடித்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் வேறொரு பரிமாணம் அவருக்கும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. மேலும், நடிகர் நாகேஷை புகழின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது பாலச்சந்தரின் கதையில் உருவான மற்றொரு திரைப்படமான ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம்.
குடும்பச் சச்சரவுகள், உறவுகளின் முரண்பாடு மற்றும் சமூகப் பிரச்னைகள் என்று பலதரப்பட்ட தனித்துவ கதைகளை துணிச்சலான வகையில் எடுத்த கே.பி. நகைச்சுவைக்கான இடமும் தந்து, அதை தனது படங்களில் சிறப்பாகக் காட்சி படுத்தியவர்.
ஆரம்பத்தில் நாடக எழுத்தாளரான பாலச்சந்தரின் படங்கள் நீர்க்குமிழி, பாமா விஜயம், எதிர்நீச்சல் உள்ளிட்ட பல படங்கள் நாடக வடிவமாகவே அமைந்தன எனலாம். ஆனாலும், குறைவான பட்ஜெட்டில் தரமான கதையம்சம் கொண்ட நிறைவான படத்தைக் கொடுக்கும் ஒரு படைப்பாளியாக திரையுலகில் பெயர் பெற்றார் கே.பாலசந்தர்.
அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர்நீச்சல், வறுமையின் நிறம் சிவப்பு, உன்னால் முடியும் தம்பி, மரோ சரித்ரா, சிந்து பைரவி போன்ற பல சிறந்த திரைப்படங்கள் இவரது இயக்கத்தில் சினிமா ரசிகர்களை மகிழ்வித்தது. இவர் இயக்கத்தில் உருவான ஒவ்வொரு படங்களிலும் காதல் மற்றும் அதை சார்ந்த உணர்வுகள் வெகு அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும். இதில் வெளி வராத அந்தரங்க உறவுகளும் அடக்கம். சிந்து பைரவியும், புதுப்புது அர்த்தங்களும் இதற்கு உதாரணங்கள்.
பெண்கள் மீதான ஆணாதிக்கம் மற்றும் சமூகத்தின் அவலங்களை வெகு அழுத்தமாக தனது படங்களின் வாயிலாகச் சொல்லி சினிமா மூலம் விழிப்புணர்வைத் தந்ததில் இயக்குநர் கே.பாலசந்தருக்கு முக்கியப் பங்குண்டு.
தற்போது இருக்கும் திரையுலகின் ஆளுமைகளான கமல், ரஜினியில் துவங்கி பெண்களில் சுஜாதா, சரிதா என இவர் அறிமுகப்படுத்திய ஏராளமான நட்சத்திரங்கள் மற்றும் இவரது கதைகளால் பெயர் பெற்ற திரைப் பிரபலங்கள் என இவரை தங்கள் குருவாக ஏற்று இன்றளவும் போற்றி வருவது சிறப்பு. யாரிடம் என்ன திறமை உள்ளது என அறிந்து சினிமாவில் அதை எப்படி வெளிக் கொண்டு வரலாம் என்ற கலையை நன்றாகவே கற்றவர் கே.பாலசந்தர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கி இந்தியாவில் திரைப்படத்துறைக்கான மிக உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றார். திரைப்பட இயக்குநராக புகழ் உச்சியில் இருந்தபோதிலும் தொலைக்காட்சி நாடகங்களையும் இவர் இயக்கியது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையில் தற்போது பிரபலமாக இருக்கும் மெகா தொடர் முறையை அறிமுகம் செய்ததும் இவரே. இன்னும் பட்டியலிட ஏராளமான சிறப்புகள் கொண்ட இவரை இயக்குநர் சிகரம் எனக் கொண்டாடுவது மிகவும் பொருத்தம்.
திரையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனது பங்களிப்பைத் தந்த இயக்குநர் கே.பி. மறைந்தாலும் அவரது படைப்புகளும், அவர் உருவாக்கிய நட்சத்திரங்களும் இன்றும் அவரின் திரை ஆளுமையை பறைசாற்றுவது நீடித்த பெருமைக்கு சான்று.