திரை விமர்சனம்: ‘Couple Friendly’ - காதல் என்பது வெறும் ஈர்ப்பல்ல; ஒரு நம்பிக்கை..!

Couple Friendly
Couple Friendly
Published on
ரேட்டிங்(3.5 / 5)

காதல் என்றால் "உடல் ஈர்ப்பு மட்டுமல்ல, ஒருவர் மீது மற்றொருவர் வைக்கும் மதிப்பு, தியாகம், பரஸ்பரம், விட்டு கொடுத்தல்' என்று காதலுக்கு விளக்கம் சொல்வார் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன். இவர் சொன்ன இந்த விஷயங்களை மைய்யப்படுத்தி, இந்த காதலர் தினத்தில் வந்துள்ள படம் 'Couple Friendly'.

சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி, யோகிபாபு, சனில் ரெட்டி நடித்துள்ள இப்படத்தை அஸ்வின் சந்திரசேகர் இயக்கி உள்ளார்.

சென்னையில் ஒரு அறையில் தங்கி கட்டிடங்களின் உட்பற வடிவமைப்பு (Interior Decoration) பணியை தேடி கொண்டிருப்பவர் சந்தோஷ் சோபன். வேலை கிடைக்காததால் வாடகை பைக் ஓட்டுகிறார். இந்த சூழ்நிலையில். மென் பொருள் நிறுவன வேலை தேடிக்கொண்டிருக்கும் மானசா வாரணாசியின் நட்பு கிடைக்கிறது. இந்த நட்பு ஒரே அறையில் தங்கும் அளவிற்கு செல்கிறது. மானசா சந்தோஷ் சோபனுக்கு வேலை கிடைக்க சில டிப்ஸ் தருகிறார். சந்தோஷ் இந்த டிப்ஸ்களை பயன் படுத்தி, வேலை பெற்று முன்னேறி பொருளாதாரத்தில் வளம் பெறுகிறார். இருவருக்குமிடையேயான நட்பு காதலாக மாறுகிறது. ஒரு சில நாட்களில் மானஸா ஒரு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார். இது என்ன பிரச்சனை? இந்த பிரச்சனை இவர்கள் காதலை என்ன செய்தது? என்று சொல்கிறது 'Couple Friendly'.

Couple Friendly
Couple Friendly

படத்தின் முதல் பதினைந்து நிமிடங்கள் எந்த வித சுவாரசியமும் இல்லாமல் செல்கிறது. இருவருக்கும் இடையே காதல் மலர, கதை சூடு பிடிக்கிறது. காதலின் மொழியையும், வலியையும் கடத்துவதில் எந்த வித ஆர்ப்பாட்டங்களையும் புகுத்தாமல், ஒரு வீணையின் இசை போல உணர்த்தி இருக்கிறார் டைரக்டர்.

படத்தின் இரண்டாம் பாதி காதலர்களுக்கு இடையே வரும் ஈகோ, விட்டு கொடுத்தல், காதலர்களின் பெற்றோர்களுக்கு இடையில் வரும் புரிதல் இன்மை போன்ற விஷயங்களை சொல்கிறது. காதலோடு சேர்த்து பெண்ணிற்கு பணி இடத்தில் தேவைப்படும் அங்கீகாரம், ஆண்கள் புரிந்து கொள்ளாத 'பெண்களின் வலி'யையும் Couple Friendly பேசியுள்ளது.

"வலி வலின்னு சொல்றீங்களே, பொம்பளைங்க எங்களோட வலி ஆம்பளைங்க உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று சந்தோஷ் சோபனின் அண்ணியாக வருபவர் கேட்கும் இடம் நம்மை யோசிக்க வைக்கிறது.

இந்த படத்தில் நல்ல விஷயம் யோகிபாபு இருக்கிறார். ஆனால் நல்ல வேளையாக நகைச்சுவை எதையும் முயற்சி செய்யவில்லை. சுனில் ரெட்டி நகைச்சுவை செய்து சிரிக்க வைக்கிறார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: சீதா பயணம் (2026) - ரொமாண்டிக் டிராமா!
Couple Friendly

மானஸா மாஸ் செய்து விட்டார். ஒரு துணிச்சலான பெண்ணாக, காதலனை பிரியும் போது மானஸாவின் நடிப்பு மனதிற்கு பிடித்து போகிறது. சந்தோஷ் சோபனின் நடிப்பில் வேலை கிடைக்காத சம கால இளைஞனின் விரக்தி, காதலிக்கும் போது செய்யும் ரொமான்ஸ் என சிறப்பாக நடித்துள்ளார். ஒளிப்பதிவு , இசை, எடிட்டிங் இந்த மூன்றும் ஒரு முக்கோண விதி போல் ஒன்று சேர்ந்து சந்தோஷ் - மானஸா காதலை உயிரோட்டமாக மாற்றி விட்டது.

படத்தின் முதல் ஒரிரு காட்சிகளில் பெரிய ஈர்ப்பு இல்லை என்றாலும், படம் போகப் போக பிடித்து விடுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் மானஸாவின் தந்தை, சந்தோஷ் சோபனை கட்டி பிடித்து அழும் இடத்தில் நமக்கே சற்று கண்களில் கண்ணீர் எட்டி பார்க்கிறது. காதல் என்பது நம்பிக்கை, துன்பம் வரும் போது சாய்ந்து கொள்ளும் தோள் என புரிய வைத்த Couple Friendly, இந்த காதலர் தினத்தில் நாம் பார்க்க வேண்டிய காதல் திரைப்படம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com