
தமிழ் சினிமாவில் கதாநாயகர்களைப் போலவே ஒவ்வொரு காலகட்டத்திலும் சில காமெடி நடிகர்கள் உச்சத்தில் இருந்தனர். நாகேஷ், கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு எனத் தொடங்கி சந்தானம், சூரி மற்றும் யோகி பாபு வரை இந்தப் பட்டியல் நீள்கிறது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் சில காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக நடிப்பதால் தான், அடுத்ததடுத்த காமெடி நடிகர்கள் உதயமாகின்றனர். அவ்வகையில் தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர் தான் யோகி பாபு. இவர் தனது வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும், குறிப்பிட்ட ஒரு கிரிக்கெட் வீரரை மட்டும் தவறாமல் அழைப்பாராம். யோகி பாபுவிற்கு நெருக்காமான அந்த கிரிக்கெட்டர் யார் தெரியுமா?
சந்தானம் காமெடி டிராக்கில் இருந்து கதாநாயகனாக உருவெடுத்த பிறகு, சூரி காமெடியனாக பல படங்களில் நடித்தார். சூரியும் கதாநாயகனாக மாறவே, அந்த இடத்தை நிரப்பியவர் தான் யோகி பாபு. தொடக்கத்தில் எதிர்மறை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த யோகி பாபுவிற்கு, காமெடியன் அவதாரம் நன்றாக பொருந்தி விட்டது. இதனால் மிகவும் பிஸியான நடிகராக மாறி விட்டார்.
கோலமாவு கோகிலா, சுல்தான், சர்கார் மற்றும் கோமாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் யோகி பாபு. இவர் தனது வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும், தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனை அழைப்பது வழக்கம். ஒரு விஷேசசத்திற்கு கூட இவரை அழைக்க மறந்ததில்லை என நடராஜனே சமீபத்தில் தெரிவித்தார்.
இதுகுறித்து நடராஜன் கூறுகையில், “யோகி பாபு என்னை அவரது வீட்டில் ஒருவராகவும், சொந்த தம்பியாகவும் தான் பார்க்கிறார். அவர் வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும், நான் இல்லாமல் நடத்தவே மாட்டார். இதனை அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார். நான் அவரைத் தொடர்பு கொள்ள மறந்து விட்டாலும் கூட, ஒரு வாரத்திற்கு இரண்டு முறை வீடியோ கால் செய்து என்னிடம் பேசி விடுவார்” என அவர் கூறினார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தை அமைத்த போது, திறப்பு விழாவிற்கு யோகி பாபுவும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன், தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய அணிக்கும் தேர்வு செய்யப்பட்டார். ஒரு சில போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற நடராஜன், ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வெற்றி பெற உறுதுணையாக இருந்தார். இருப்பினும் காயம் காரணமாக நடராஜனால், இந்திய அணியில் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை.
தற்போது தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் நடராஜனுக்கு இந்திய அணியில் விளையாட பிசிசிஐ வாய்ப்பு வழங்குமா என்பது கேள்விக்குறி தான். கிரிக்கெட் வீரர் நடராஜன் மற்றும் காமெடி நடிகர் யோகி பாபு இவர்கள் இருவருமே, தமிழ்நாட்டில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வாழ்க்கையில் உயர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் ஒரு கிரிக்கெட் வீரரும், நடிகரும் இவ்வளவு சகஜமாக பழகுவது இயல்பானது தான். இருப்பினும் ஒருவரை ஒருவர் மதிப்பது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.