

"யாரடி நீ மோகினி..? கூறடி என் கண்மணி!" இந்த பாடல் நினைவிருக்கிறதா..?
1958ஆம் ஆண்டு வெளியான உத்தம புத்திரன் திரைப்படத்தில் வரும் மேற்கூறிய பாடல் மற்றும் ஆடல், இரண்டையும் யாராலும் எளிதில் மறக்க முடியாது.
"யாரடி நீ மோகினி ?" பாடல் காட்சியில், நடிகை ஹெலன் சுழன்று-சுழன்று வளைந்து-நெளிந்து, குழைந்து கேபரே நடனம் ஆடுவார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன், ஹெலனுக்கு ஈடு கொடுத்து ஸ்டைலாக ஆடுவார். பார்க்க அழகாக இருக்கும்.
ஒரு தடவையல்ல; இரு தடவையல்ல, ஐந்து தடவைகள் உத்தம புத்திரன் படத்தைப் பார்த்தவள் நான். ஹெலன் மற்றும் சிவாஜிகணேசன் மாதிரி வீட்டினுள் ஆடியதும் உண்டு.
தமிழின் முதல் ராக் அண்ட் ரோல் பாடலில் ஹெலன், ரிட்டா மற்றும் 'ஜெமினி' சந்திரா ஆகியோருடன் இணைந்து நடனமாடியுள்ளார்.
ஹெலன் (helen richardson khan) சுமார் 700 திரைப்படங்களுக்கு மேல் நடித்தும், நடனமாடியும் உள்ளார். ஹெலனுடைய "கேபரே நடனங்கள்" (cabaret dances) மிகவும் பிரபலமானவை.
ஹெலனை அநேகர் மறந்திருப்பார்கள். இன்னும் பலருக்கு ஹெலனைத் தெரியவே தெரியாது. என்னைப்போல சிலர் ஞாபகம் வைத்திருப்பார்கள்.
பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஹெலனுக்கு இவ்வருடம் வயது 87 ஆகிறதென்றாலும், தினசரி வாழ்க்கையில் குறிப்பிட்ட சில யோகா பயிற்சிகளைச் செய்து கொண்டு, ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.
தன்னம்பிக்கையுடன், மனம் தளராமல் வாழ்க்கையின் மேடுபள்ளங்களைத் தாண்டி முன்னேறி நிற்கின்ற பத்ம ஸ்ரீ ஹெலனைப் பற்றிய சில விபரங்களைத் தெரிந்து கொள்ளலாமா..!
ஹெலனின் வாழ்க்கை :
ஜார்ஜ் டெஸ்மியர் (George Desmier) என்ற ஆங்கிலோ இந்திய தந்தைக்கும் பர்மாவைச் (இப்போது மியான்மர்) சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் மகளாக பர்மா ரங்கூனில் பிறந்த இவருக்கு, இரு சகோதரர்கள். இரண்டாவது உலகப் போர் சமயத்தில் இவர்களது தந்தை இறக்க, 1943-ஆம் ஆண்டு பம்பாய்க்கு வந்து குடியேறினார்கள்.
1964-ஆம் ஆண்டு பிலிம்பேர் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஹெலன், "நாங்கள் பர்மாவிலிருந்து காடுகளையும் நூற்றுக்கணக்கான கிராமங்களையும் கால்நடையாக கடந்து வந்தோம்.
எங்களிடம் பணம் இல்லை. கருணையுள்ளம் படைத்தவர்கள் எங்களுக்கு உதவினார்கள். சில இடங்களில் பிரித்தானிய இராணுவத்தினர் எங்களை வண்டிகளில் ஏற்றிச் சென்றதுடன் உணவும் தந்து தேய்ந்த கால்களுக்கும் களைப்புற்ற உடலுக்கும் மருத்துவ உதவியும் செய்து எங்களை அகதி முகாம்களில் விட்டுச் சென்றார்கள்.
அஸ்ஸாமிலுள்ள திப்ரூகர் என்ற இடத்தை வந்தடைந்த போது எங்கள் குழுவில் பாதிபேர் தான் மிஞ்சியிருந்தனர். சிலர் இயலாமையால் இடையில் தங்கிவிட்டனர். இன்னும் சிலர் பசியினாலும் உடல் நலமின்மையாலும் இறந்து விட்டனர். என் தாய்க்கு வழியில் குறைப் பிரசவம் ஆனது. அம்மாவும் நானும் எலும்புக்கூடுகள் ஆகிவிட்டோம். என் சகோதரன் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தபின் வெளியேறி கல்கத்தா வந்தடைந்தோம்." என்று கூறியிருக்கிறார்.
பிறகு மும்பை வந்து சேர்ந்ததும், படிக்க வசதியில்லாமல், 1950-களில், நடிகை ஒருவரின் உதவியால், ஒரு பின்னணி நடனக்குழுவில் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கினார்.
உபரி தகவல்கள் :
* 1951ஆம் ஆண்டு "ஆவாரா" திரைப்படத்தில் பின்னணி நடனக் கலைஞராக பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.
* "ஷக்தி சமந்தா"வின் "ஹாவ்ரா பிரிட்ஜ்" திரைப்படத்தில் "மேரா நாம் சின்சின்" (Mera Naam Chinchin) என்ற பாடலுக்கு நடனமாடி பெரும் புகழ் பெற்றார்.
* "கேபரே ராணி" (Cabaret Queen) என்று அழைக்கப்பட்டார்.
* Vamp ஆன பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
* 1999 ஆம் ஆண்டில், வாழ்நாள் சாதனைக்கான பிலிம்பேர் விருதை (Filmfare Lifetime Achievement Award) வாங்கினார்.
* 2009 ஆம் ஆண்டில், பத்மஸ்ரீ விருதை (Padmashri Award) பெற்றார்.
* 1983 ஆம் ஆண்டில் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தினாலும், சில குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடித்தார்.
* மெஹ்பூபா (ஷோலே), பியா து (கேரவான்), ஏ மேரா தில் (டான்) போன்ற புகழ் பெற்ற பாடல்களுக்கு ஹெலன் ஆடிய நடனம் அனைவராலும் விரும்பப்பட்டதாகும்.
தன்னுடைய வாழ்க்கையில் எண்ணற்ற துக்கங்களை அனுபவித்து, எத்தனையோ தடைகளைத் தாண்டி, தன் தனித்துவமான நடனங்கள் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தால், பாலிவுட் திரையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட ஹெலனை பாராட்டுவோம்.