விமர்சனம்: டி டி நெஸ்ட் லெவல் - சிரிப்பு பேயா? பயமுறுத்தும் பேயா?
ரேட் டிங்(3 / 5)
"ஊருக்குள்ள பத்து பதினைந்து பிரண்ட் வெச்சிறுகவனெல்லம் சந்தோசமா இருக்கான் ஒரே ஒரு பிரண்ட்டை வச்சுகிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே" என்று ஆரியவை பார்த்து சந்தானம் ஒரு டயலாக் சொல்வார். திரையிலும், நிஜத்திலும் நண்பர்களாக இருப்பவர்கள் ஆர்யாவும், சந்தானமும். ஆர்யா தன் நண்பர் சந்தானத்தை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள படம் டிடி நெஸ்ட் லெவல்.
யூ டுப் சேனலில் புதிய படங்களை விமர்சனம் என்ற பெயரில் பங்காமாக 'கிசா' என்ற பெயரில் கிண்டல் செய்கிறார் கிருஷ்ணா (சந்தானம்). இதனால் பாதிக்கப்படும் தயாரிப்பாளர், கிருஷ்ணாவையும் அவரது குடும்பத்தையும் ஒரு பேய் படத்திற்குள் கதாபாத்திரங்களாக சிக்க வைக்கிறார். இந்த சிக்கலில் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார் சந்தானம். இந்த பேய் யார்? என்ன செய்தது? என்பதுதான் டி டி நெஸ்ட் லெவல் படத்தின் கதை.
இது வரை பேய் படமென்றால் பங்களாவுக்குள் பேய், டப்பாக்குள் பேய் என்றுதான் பார்த்திருப்போம். ஆனால் பேய் படத்திற்குள் ஒரு கதாபாத்திரமாக மாட்டி கொள்வது என்று மாற்றி யோசித்த ஐடியாவுக்காக டைரக்டர் பிரேம் ஆனந்தை பாராட்டலாம். நிஜ வாழக்கையில் சந்தானத்தின் அம்மாவாக வரும் கஸ்தூரி பேய் கதைக்குள் கிளாமர் பெண்மணியாக மாறுவது, ஆட்டோ டிரைவர் அப்பா பேய் கதையில் கப்பல் கேப்டனாக வருவது, அடக்கமாக வரும் தங்கை பேய் கதைக்குள் கவர்ச்சியாக மாறுவது போன்ற வித்தியாசமான ஐடியாக்களின் மூலம் டைரக்டர் தனித்துவமாக தெரிகிறார்.
முதல் பாதியில் சந்தானம் காமெடி மழையில் நினைய வைத்து விட்டார் என்றே சொல்லலாம். ரசிகர்கள் அதிகம் கை தட்டுவதை கேட்க முடிகிறது. இரண்டாம் பாதியில் நகைச்சுவைக்கு முக்கியத்துவத்தை குறைத்து சீரியஸில் ஸ்கோர் செய்கிறார்.
எப்போதும் சீரியஸாக நடிக்கும் செல்வராகவன், கெளதம் மேனன் போன்றவர்களை கூட காமெடி செய்ய வைத்து சிரிக்க வைத்திருக்கிறார் டைரக்டர். மாறன், மொட்டை ராஜேந்திரன் போன்ற சந்தானத்தின் ஆஸ்தான நடிகர்களை விட செல்வராகவன், கெளதம் மேனன் வரும் காட்சிகளில்தான் சிரிப்பு அதிகம் வருகிறது.
குறிப்பாக செல்வராகவன் சினிமா விமர்சகர்களை பற்றி பேசும் வசனங்கள் ஹைலைட்டாக இருக்கின்றன. தீபக் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் என்றால் ஆப்ரோவின் பின்னணி இசை மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம். இவரது பின்னணி இசை, பேய் கதையில் நாமே மாட்டி கொண்டது போல் ஒரு உணர்வைத் தருகிறது. நண்பர்களான ஆர்யாவும், சந்தானமும் சேர்ந்து வித்தியாசமான பின்னணியில் இந்த கோடையில் ஜில்லென்ற ஒரு மாறுபட்ட காமெடி படத்தை தந்துள்ளார்கள். டி டி நெஸ்ட் லெவல் - சந்தானத்தின் சரவெடி.