
ஒரு படத்தின் ட்ரைலர் எப்படிப் படத்தைப் பற்றிய முற்றிலும் வித்தியாசமான பார்வையைக் கொடுக்கும்? அப்படி அதைப் பார்த்து வரும் ரசிகர்களுக்கு வேறு விதமான திரையனுபவம் காத்திருந்தால் அதை எவ்வாறு எதிர்கொள்வார்கள்? அப்படியொரு படம் தான் துடரும்.
மோகன்லால், ஷோபனா நடிப்பில் தருண் மூர்த்தி இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்தப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. எம்புரான் என்ற மாபெரும் வெற்றிக்குப் பிறகு மோகன்லால் நடிப்பில் வந்துள்ள இந்தப்படம், அவருக்கு 'இன்னொரு திரிஷ்யம்' என்ற அளவில் சிலாகிக்கிறார்கள் சிலர். அது உண்மையா என்று பார்க்கலாம்.
ஒரு அம்பாஸடர் டாக்சி ஓட்டி மனைவி, மகன், மகள் என்று அமைதியாகக் குடும்பம் நடத்தி வருபவர் ஷண்முகம் (மோகன்லால்). இவரது மனைவி லலிதாவாக ஷோபனா. ஆரம்பக்காலங்களில் ஒரு ஸ்டண்ட் நடிகராக இருந்த மோகன்லால் ஒரு கட்டத்தில் அந்தத் தொழிலை விட்டுவிட்டு குடும்பத்துடன் சென்னையை விட்டு வெளியேறி வசிக்கிறார். அவரது ஸ்டண்ட் மாஸ்டர் பாரதிராஜா.
தனது குடும்பத்தை எவ்வளவு நேசிக்கிறாரோ அந்த அளவு தனது காரையும் நேசிக்கிறார். ஒரு கட்டத்தில் இவர் வெளியூர் சென்றிருந்த சமயம், அது கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது என்று கூறி, அந்தக் காரைக் கைப்பற்றிக் காவல் நிலையத்தில் வைத்து விடுகிறார்கள். இது தொடர்பாக எஸ் ஐ பென்னியுடன் (பினு பாப்பு) ஷண்முகத்திற்கு வாக்குவாதம் ஏற்படுகிறது. அங்கு வரும் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் (பிரகாஷ் வர்மா என்ன ஓர் அட்டகாசமான அறிமுகம்) அவரைச் சமாதானப் படுத்தி ஒரு ட்ரிப் சென்று வரலாம் என்று அழைத்துப் போகிறார். அந்த ஒரு இரவுப் பயணம் எப்படியொரு குடும்பத்தின் வாழ்க்கையையே மாற்றுகிறது என்பது தான் கதை.
இரண்டு மக்களுடன் ஒரு குடும்பம். காவல் நிலையத்தில் பிரச்சினை. காவலர்களுடன் சண்டை. என ஹெவியாக த்ரிஷ்யம் நெடி தவிர்க்க முடியாமல் அடித்தாலும், அதைச் சமாளித்து ரசிகர்களைப் புதிதாகப் பார்ப்பது போல் பார்க்க வைத்தது தான் திரைக்கதையின் சாமர்த்தியம். ஒரு விதத்தில் பார்த்தால் இவர் ஜார்ஜ்குட்டியின் ஆக்க்ஷன் அவதாரம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இடைவேளை வரை படம் வேறொரு மோடில் பயணித்தாலும் காவலர்களுடன் மோகன்லாலின் பயணம் படத்தின் டென்ஷனைக் கூட்ட ஆரம்பிக்கிறது. படத்தின் கதையும் மொத்தமாகத் திசை மாறிவிடுகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறும் இன்ஸ்பெக்டர் ஜார்ஜின் பாத்திரம் பிரமாதம். கண்ணாலும் வசனங்களாலும் உச்சரிப்பாலும் அச்சத்தைக் கடத்தும் இந்தப் பாத்திரம் படத்தின் அடிநாதம் என்றால் மிகையில்லை. மோகன்லால் போன்ற ஒரு தேர்ந்த நடிகருடன் நடிக்கும்போது அவரை இடது கையால் ஹேண்டில் செய்வது எல்லாம் கத்திமேல் நடக்கும் வேலை. அதில் நடக்காமல் நடனமே ஆடியிருக்கிறார் பிரகாஷ் வர்மா. ஒரு கட்டத்தில் நமக்கே அவரை ஓங்கி ஒரு அறை விடலாமா என்று தோன்றுகிறதென்றால் அந்தப் பாத்திரம் எப்படி எழுதப்பட்டிருக்கும் என்பதை ஊகிக்கலாம்.
படத்தின் ஆரம்பக்காட்சியில் காண்பிக்கப்படும் ஒரு நிலச்சரிவுக் காட்சிப் படத்தின் முக்கியமான திருப்பத்திற்கு எப்படி உதவுகிறது என்பதைக் காட்டிய விதத்தில் ஒரு ஸ்மார்ட்னெஸ் தெரிகிறது. அடிப்படையில் ஒரு சண்டைக்கலைஞர் என்று ஆரம்பத்திலிருந்தே எஸ்டாபிளிஷ் செய்து விடுவதால் பின்னால் மோகன்லால் சண்டையிடும்போது ஏற்றுக்கொள்ளும்படி தான் இருக்கிறது.
ஷோபனா இவ்வளவு வருடங்கள் கழித்து மோகன்லாலுடன் நடிக்கிறார். இன்னும் சற்று வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஒரு மணிச்சித்ரதாழு பார்வை ஒன்றைக் கடைசியில் கொடுக்கிறார். மற்றபடி சிறையில் நடக்கும் ஒரு காட்சியைத் தவிர அவர் நடிக்கப் பெரிதாக வாய்ப்பில்லை.
கதைப்படி ஒரு குற்றம் நிகழ்கிறது. காவல்துறை அதை மறைக்கச் சில ஏற்பாடுகள் செய்கிறது. அதில் நாயகன் மாட்டிக் கொள்கிறார் என்பதெல்லாம் சரி. ஆனால் அந்த உண்மையான காரணத்தைக் கடைசி வரை காட்டாமல் இருப்பது தான் சற்று உதைக்கிறது. ஒரு முக்கியமான விஷயத்தைப் பேசும் இந்தப் படம் அதை எண்ட் க்ரெடிட்டில் அறிவிப்பாக மட்டுமே காட்டுவது உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிடுகிறது. ட்விஸ்ட் என்று அதை வைத்தவர்கள் அது இவ்வளவு சப்பென்று எடுபடாமல் போகுமென்று நினைத்திருக்கவே மாட்டார்கள்.
ஒரு நல்ல கதை. முதல் பாதி டிராமா, பின் பாதி ஆக்க்ஷன் என்று பிரித்துக் கொண்டதெல்லாம் சரி. ஆனால் சினிமா ஆக்க்ஷன் நடிகராக இருந்த நாயகன் அந்தத் தொடர்பைப் பயன்படுத்தி இதைக் கொஞ்சம் எதிர்கொள்வதாக இருந்திருந்தால் இன்னும் சற்று சுவாரசியமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. தனியாளாக இருந்து அனைவரையும் அடித்துச் சாய்க்கும்போது கதையின் புத்திசாலித்தனம் அடி வாங்கிவிடுகிறது.
வசனங்களாகக் கடத்தப்படும் நாயகன் குடும்பத்தின் பிளாஷ்பேக் அதற்குண்டான அழுத்தத்தைத் தரத் தவறிவிடுகிறது. ஆனாலும் தனது குடும்பத்திற்கு ஒரு பிரச்னை என்றால் ஒரு தனி மனிதன் எப்படிச் செயல்படுவான். எந்த எல்லைக்கும் போகத் தயாராகிவிடுவான் என்று மீண்டும் ஒரு முறை அழுத்தமாகச் சொல்லிய விதத்தில் வெற்றி பெற்றுவிட்டது இந்த டீம்.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்தின் சூழ்நிலையைக் கச்சிதமாகச் சில சமயங்களில் ஆர்ப்பாட்டமாகச் சொல்லியிருக்கிறது. மழையும் மலையும் சூழ்ந்த பிரதேசங்களில் நிகழும் கதையைப் படமாக்கிய விதத்தில் ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் தனித்துத் தெரிகிறார்.
தமிழ்ப்படங்களில் போதாதென்று இளையராஜாவின் பாடல்கள் படத்தின் கதையை ஒட்டி வந்து கொண்டே இருக்கின்றன. அவருக்குப் பாராட்டு மழை பொழிந்து கொண்டே இருந்ததன் மூலம் இந்த குழு வழக்கிலிருந்து தப்பிக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மலையாளத்தில் வெளியானபோது நல்ல பேச்சு இருந்தாலும் குட் பேட் அக்லீ அலையில் சற்றுக் காணாமல் போன இந்தப்படம் ஓடிடி-ல் வெளியாகப் பத்து நாள்களே இருக்கும்போது தமிழ் டப்பிங்கில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.