
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளது. நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், இயக்குநர், பாடகர் என பன்முக திறமைகொண்ட தனுஷின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் மக்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் செல்வராகவனின் இயக்கத்தில் 2002-ம் ஆண்டு மே மாதம் 10-ந் தேதி வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். வணிக ரீதியில் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான திருடா திருடி மற்றும் தேவதையைக் கண்டேன் போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார். 2013-ம் ஆண்டு வெளியான ராஞ்சனா என்ற இந்தி மொழி திரைப்படம் மூலம் பாலிவுட் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகராகவும் அறிமுகமான இவர் ‘3’ என்ற திரைப்படத்தில் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் உலகளவில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
2002-ம் ஆண்டு நடிகராக அறிமுகமான தனுஷ், இதன் மூலம் சினிமாத் துறையில் தன்னுடைய 23-வது வருடத்தை நிறைவு செய்திருக்கிறார். தன்னுடைய நடிப்புத் திறமையை வளர்த்துக்கொண்டு, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அது மட்டுமின்றி, நேரடி தெலுங்கு படம், நேரடி இந்தி படங்கள், ஹாலிவுட் படங்கள் என்று தன்னுடைய நிலையை வளர்த்துக்கொண்டிருக்கிறார்.
நடிப்பு மட்டுமின்றி, பாடல்கள் எழுவது, பாடல்கள் பாடுவது, படத்திற்கு கதை-திரைக்கதை எழுதுவது, இயக்கம், தயாரிப்பு என்று சினிமாவின் பல துறைகளிலும் கால் பதித்து, அவை அனைத்திலும் வெற்றியை பதிவு செய்திருக்கிறார். ‘ஆடுகளம்', ‘அசுரன்' ஆகிய படங்களில் சிறந்த நடிப்புக்காக தேசிய விருதுகளை வாங்கியிருக்கிறார். மேலும் ‘காக்காமுட்டை', ‘விசாரணை' ஆகிய படங்களின் இணை தயாரிப்பாளராகவும் தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். தனுஷின் 23-வது வருட சினிமாத்துறை பயண நிறைவை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். அதோடு சினிமாத்துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தனுஷ் சினிமா துறைக்கு வந்து 23 ஆண்டுகள் ஆன நிலையில், இவருக்கு ரூ.230 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது நடிகர் தனுஷ் 'குபேரா' படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் தனுஷ் 'தேவா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது.