
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் தனுஷ் நடிகர் மற்றும் இயக்குநர் என பன்முகம் கொண்டவராக கலக்கி வருகிறார். அதுமட்டுமின்றி தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலமாக படங்களைத் தயாரிக்கிறார். இவருடைய தயாரிப்பில் வெளிவந்த விசாரனை படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராக கலக்கி வரும் தனுஷ் நேரம் இல்லாமல் எப்போதும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இவரது கையில் ஏகப்பட்ட படங்கள் உள்ளன.
இவர் இயக்கத்தில் கடைசியாக உருவான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தனுஷ் அவரது சகோதரியின் மகனை கதாநாயகனாக களம் இறக்கினார்.
தற்போது ‘இட்லி கடை' என்ற படத்தை தனுஷ் இயக்கி நடித்து வருகிறார். இந்த படமும் விரைவில் ரீலீசுக்கு தயாராகி வருகிறது.
சேகர் கம்முலா இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘குபேரா' படம் ஜூன் 20-ம் தேதி திரைக்கு வருகிறது. இதுதவிர ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெயின்' (Tere Ishk Mein) என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் தனுஷ் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ‘போர் தொழில்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த விக்னேஷ் ராஜா டைரக்ட் செய்யும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கப் போகிறாராம். இந்த படத்துக்கு ‘அறுவடை' என பெயர் வைக்கப்பட்டு இருப்பதாகவும், ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்துக்காக சென்னை பூந்தமல்லியில் 15 ஏக்கர் நிலத்தில் பிரமாண்டமாக ‘செட்' அமைக்கப்பட்டு இருக்கிறது. இது பக்கா கமர்ஷியல் கதை என்றும், விவசாயத்தை மையப்படுத்தி சில கருத்துக்கள் சொல்லப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் கைவசம் ‛இட்லி கடை, குபேரா, தேரே இஸ்க் மெயின்' ஆகிய படங்கள் மட்டுமில்லாமல் ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, தமிழரசன் பச்சமுத்து போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் தனுஷின் லைன் - அப் அடுத்த சில ஆண்டுகளுக்கு பிஸியாக உள்ளது.
இந்த நிலையில் தனுஷ், தனது 56-வது படத்திற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படம் பெரிய பட்ஜெட்டில் வரலாற்று படமாக உருவாக உள்ளதால் வாள் ஒன்றும், அதன் கைப்பிடியில் மண்டைடோடும் உள்ளது போன்ற அறிவிப்பு போஸ்டர் வெளியாகி தனுஷ் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான கர்ணன் மிகப்பெரும் ஹிட் அடித்துள்ள நிலையில், மீண்டும் கைகோர்த்துள்ளதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதுமட்டுமல்லாமல், தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பதாகவும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.