ஐந்தாவது முறையாக மீண்டும் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து பணியாற்றவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்தான முழு செய்தியையும் பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் தரமான படங்களைக் கொடுத்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் வெற்றிமாறன். அவருடைய ஒவ்வொரு படத்தின் முதல் அப்டேட் வெளியாகும்போதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடிவிடும். வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக விடுதலை 2 திரைப்படம் வெளியானது. சூரி ஹீரோவாக நடித்த இப்படத்தில், விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு பின்னர் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தின் படபிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில்கூட வெற்றிமாறன் வாடிவாசல் படப்பிடிப்பு ஆரம்பிக்கதான் திட்டமிட்டு வருகிறோம் என்று கூறினார். இந்த நிலையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து தனுஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவுகின்றன.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் முதன்முதலாக நடித்த படம் பொல்லாதவன். இந்தப் படம் இன்றளவும் இளைஞர்களுக்குப் பிடித்த படம். இந்த வெற்றியைத் தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்த படங்கள் சேர்ந்து பணியாற்றினர். ஆடுகளம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் இப்படம் நான்கு தேசிய விருதினையும் பெற்றுக் கொடுத்தது.
அடுத்ததாக இருவரும் வடசென்னை படத்தில் இணைந்தனர். இதற்கடுத்து தனுஷ் வைத்து அசுரன் படத்தை இயக்கினார் வெற்றிமாறன். இந்த நான்கு படங்களுமே ரசிகர்களின் ஆதரவை பெற்றது.
ஆகையால் இவர்கள் சேரும் அடுத்த படமும் எப்படியும் அடிதூளாக இருக்கும் என்றே ரசிகர்கள் கணித்தனர். இப்படியான நிலையில், தற்போது இவர்களின் கூட்டணி படத்தின் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இவர்கள் இணையும் படத்தினை ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். ஆனால், இதுகுறித்தான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிவாசல் படத்தின் படபிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் வேலை ஆரம்பமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலை 2 வெற்றிக்கு பின்னர் அடுத்தடுத்த வெற்றி கூட்டணி இணையவுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாடிவாசல் மூலமாவது சூர்யா கம்பேக் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.