
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரை ரசிகர்கள் ‘தல‘ என்று செல்லமாக அழைப்பார்கள். நடிகர் அஜித்குமார் நடிப்பு தவிர பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த சில வருடங்களாக நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் அதிக ஆர்வம் காட்டி வருவது மட்டுமல்லாமல் பல போட்டிகளிலும் கலந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நடிகர் அஜித்குமார் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பல்வேறு இடங்களுக்கு பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வடஇந்தியா முழுவதும் பைக்கில் சுற்றி வந்தார். இவர் சொந்தமாக பல லட்சம் மதிப்புள்ள பைக் மற்றும் ரேஸ் கார்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித்குமார் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். தனது குடும்பத்தின் மீது அதிக பாசம் வைத்துள்ள நடிகர் அஜித்குமார் ஓய்வு கிடைக்கும் நேரங்களில் அவர்களுடன் அதிகநேரத்தை செலவிடுவதைவும், வெளியூர்களுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கும் தவறுவதில்லை.
இந்நிலையில் துபாயில் நடக்கும் சர்வதேச கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக பயிற்சி எடுத்து வந்தார். இந்த பந்தயத்தில் கலந்து கொள்ள போர்ச் ஜிடி3 ஆர்.எஸ் என்ற சொகுசு காரை வாங்கி வெள்ளை, சிவப்பு, மஞ்சள் வண்ணத்தில் பிரத்யேகமாக தயார் செய்துள்ளார். இதன் முன்புறத்தில் அஜித்குமார் ரேசிங் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த காரின் மதிப்பு ரூ.4 கோடியாகும்.
'அஜித் குமார் ரேசிங் கிளப்' என்ற கம்பெனியை தொடங்கி இருப்பதாகவும், தற்போது தனது சிந்தனை முழுக்க முழுக்க கார் ரேஸில் மட்டுமே இருப்பதாகவும் நடிகர் அஜித்குமார் பேட்டி அளித்திருந்தார். மேலும் ஐரோப்பா உட்பட உலகம் முழுவதிலும் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார் அஜித்குமார். தற்போது கார் ரேஸில் முழு கவனம் செலுத்த உள்ளதால் புதிய படங்கள் எதையும் அஜித்குமார் ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கார் பந்தயத்திற்காக பயிற்சியில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக விபத்தை சந்தித்தார். ஆனால், இந்த விபத்தில் அஜித்குமாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்நிலையில் பல்வேறு காரணங்களுக்காக அஜித்குமார் கார் பந்தயத்தில் ஈடுபட போவதில்லை எனவும் அவரது அணி மட்டுமே இந்த பந்தயத்தில் ஈடுபட போவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் 'அஜித் குமார் ரேஸிங் அணி' 992 பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவைச் சேர்ந்த ஒரு அணி சர்வதேச போட்டியில் 3-வது இடத்தை பிடித்திருப்பது மிகப்பெரிய சாதனையாகும். நடிகர் அஜித்குமார் பரிசை வாங்கும் போது இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி பரிசை வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மேலும் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தின் போது அஜித், தனது மனைவி ஷாலினிக்கு "Shalu.. Thank you for letting me race" எனக்கூறி நன்றி தெரிவித்தார். பிளைங் கிஸ்ஸும் கொடுத்து தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.
மேலும் நடிகர் அஜித் குமார் மனைவி ஷாலினியை கட்டியணைத்து அவருக்கு நன்றி சொன்னதும், தனது மகள் அனோஷ்காவிற்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை சந்தோஷக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
கார் ரேஸில் பங்கேற்கும் நடிகர் அஜித் குமாரை உற்சாகப்படுத்த மாதவன், அர்ஜுன் தாஸ், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் துபாய்க்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.