நடிகர் ப்ரித்விராஜ் தனக்கு ரஜினி வைத்து படம் இயக்க வாய்ப்பு வந்தது என்றும், ஆனால், இதனால்தான் நான் எடுக்கவில்லை என்றும் அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார். இதுகுறித்தான முழு விவரத்தையும் பார்ப்போம்.
மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவர் ப்ரித்விராஜ். தமிழிலும் அவ்வப்போது சிறப்பான படங்களை கொடுப்பார். சில காலங்களாக அவரது படங்களுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லாத பட்சத்தில், கம் பேக்கின் முதல் படியாக சலார் படம் அமைந்தது.
பிரபாஸுக்கு நண்பராக நடித்தாலும், அது ஒரு முக்கிய கதாபாத்திரம் என்பதால், டபுள் ஹீரோ படம்போல் தான் இருந்தது. அதன்பின்னர், ப்ரித்வி ராஜ் நடித்த ஆடு ஜீவிதம் படம் அதைவிட நல்ல வரவேற்பை பெற்றது. பல விருதுகளை வாங்கி வருகிறது.
ப்ரித்வி ராஜ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் அறிமுகமாகியிருக்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்' மூலம் இவர் இயக்குநராக அறிமுகமானார். இவரின் முதல் படமே 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அந்தவகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தையும் ப்ரித்வி ராஜ் தான் இயக்குகிறார். இதில் மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் மார்ச் 27ம் தேதி வெளியாகிறது.
லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு எல் 2 எம்புரான் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டனர். அப்போது ப்ரித்விராஜ் பேசினார். “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை வைத்து படம் பண்ண லைகா புரொடக்சன்ஸ் ஒருமுறை என்னை அணுகியது. ரஜினிகாந்த் சாரை இயக்குவது என்னைப் போன்ற இளம் இயக்குனர்களுக்கு மிகப்பெரிய கனவு. ஆனால், திட்டமிட்டப்படி அதனை செயல்படுத்த முடியவில்லை.
புரொடக்சன் ஹவுஸ் மனதில் ஒரு குறிப்பிட்ட கால வரையறை இருந்தது, மேலும் அந்த காலக்கெடுவுக்குள் ரஜினி சார் போன்ற நடிகருக்கு கதை உருவாக்குவது கடினமான ஒன்று.” என்று பேசினார்.