" 'ராயன்' திரைப்படம், என்னை இதுவரை வளர்த்து, இந்த உயரத்தில் கொண்டு வைத்துள்ள ரசிகர்களுக்கு எனது அர்ப்பணிப்பு. அவர்கள் இல்லையென்றால் நான் இல்லை. கருப்பாக நான் இருந்ததை அவர்கள் பொருட்படுத்தவில்லை. ஆங்கிலமே சரியாகப் பேச தெரியாத ஒரு ஆளை ஆங்கிலப்படங்களில் நடிக்க வைத்து அதைக் கொண்டாடியும் இருக்கிறார்கள். தேசிய விருதுகள் எல்லாமே இவர்களால் தான்."
தனுஷ் நடித்து இயக்கியுள்ள ராயன் படப்பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசியது தான் இது. சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிய அவர்,
"பதினாறு வயதில் நண்பனுடன் பைக்கில் சூப்பர் ஸ்டார் வீட்டைப் பார்க்கப் போயஸ் கார்டன் தெருக்களில் அலைந்திருக்கிறேன். இந்தப் பக்கம் தலைவர் வீடு. அந்தப் பக்கம் முதல்வர் ஜெயலலிதா வீடு. ஒரு நாள் நாமும் வளர்ந்து அங்கு வீடு வாங்க வேண்டும் என்ற கனவின் விதை விழுந்தது அப்போது தான். இருபத்திநான்கு வருடங்கள் கழிந்து அது சாத்தியமாகி இருக்கிறது. இது சிலருக்கு கண்ணையும் கருத்தையும் உறுத்தினால் நான் என்ன செய்ய முடியும். இது எனது உழைப்பு, சிந்திய வியர்வை, ரசிகர்கள் ஆதரவு ... இவை அனைத்தினாலும் நடந்த விஷயம். துள்ளுவதோ இளமை வெங்கட் பிரபு தனுஷுக்கு கொடுத்த கிப்ட்தான் போயஸ் கார்டன் வீடு" என்றார்.
"இந்தப் படத்தில் நான் இயக்குனராக மட்டும் இருந்திருந்தால் ராயன் பாத்திரத்தில் நான் யோசிக்க முடிந்த ஒரே ஆள் தலைவர் மட்டும் தான்" என்று
சொன்ன அவர், "இந்தப் படம் ஒரு கூட்டு முயற்சி. நடித்த அனைவரையும் வேலை என்ற பெயரில் கண்டிப்பாகப் படுத்தி எடுத்திருப்பேன். ஆனாலும் இறுதியில்
எனக்குத் தேவையானதை அவர்கள் கொடுத்தார்கள். இது எனது அண்ணன், எனது குரு செல்வராகவனுக்கும் பொருந்தும். அவர் இயக்கத்தில் நடிக்கும்பொழுது, நான்கு முறை தான் இமைக்க வேண்டும். ஒரு புருவம் மட்டுமே மேலே போக வேண்டும் எனப் பலவிதமாக டார்ச்சர் செய்தார். சார் இப்போது தெரியுதா?" என்று கேட்டார் தனுஷ்.
அதற்குப் பதில் சொன்ன செல்வராகவன், "எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள். சின்ன வயசுல தம்பிகளை நல்லா பாத்துக்குங்க, அன்பு செலுத்துங்க. இல்லன்னா வளர்ந்து வந்து நம்மை வெச்சு செய்வாங்க" என்றார் சிரித்துக் கொண்டே.
எஸ்.ஜே.சூர்யா பேசும்போது "அண்ணனிடம் நடித்து விட்டதால் தம்பியிடம் சற்று தப்பித்து விட்டேன். செல்வராகவன் ஒரு பார்முலா வைத்திருப்பார். அதைக்
கரெக்ட்டாகப் பிடித்துவிட்டால் தப்பித்து விடலாம். ஆனால் பாவம் அந்தப் பார்முலாவை மறந்துவிட்டு தம்பி தானே என்று இங்கு வந்து அவர் மாட்டிக் கொண்டார். தனுஷை நடித்துக் காட்டச் சொல்லிப் பார்த்துக் கொள்வேன்.
வசனங்களைச் சொல்லச் சொல்லிப் பதிவு செய்து கொண்டு வீட்டிற்கு வந்து விடுவேன். இரவு தூங்கும் நேரம் அதைக் கேட்டுக் கொண்டே தூங்கி விடுவேன்.
மறுநாள் செட்டுக்கு வந்ததும் இயல்பாக உள்ளிருந்து அது வெளியே வந்து விடும். தனுஷும் ஒரு ட்ரில் மாஸ்டர் தான்." என்றார்.
இரண்டு தேசிய விருதுகள் ஐந்து பிலிம்பேர் விருதுகள் என வாங்கியுள்ள தனுஷ் நடித்துள்ள ஐம்பதாவது படம் தான் ராயன். இதைத் தவிர தமிழில் நிலவுக்கு
என்மேல் என்னடி கோபம் என்று ஒரு படம் இயக்கி முடித்திருக்கிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
ஜெயிலருக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வரும் வெள்ளியன்று (ஜூலை 26) உலகெங்கும் வெளியாக இருக்கிறது ராயன். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில்
உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் எப்படியோ? காத்திருக்கிறோம் தனுஷ் சார்!