ஷோலே படத்தையும், தர்மேந்திரா - அமிதாப்பையும் மறந்திடவே இயலாது! ஏன்?

Sholay Movie
Sholay Movie
Published on

‘சபையில் ஆடை நெகிழ்கின்றபோது, அவசரமாக உதவிக்கு வரும் இரண்டு கைகளைப் போன்றது நட்பு!’ என்று நட்புக்கு இலக்கணம் வகுப்பார் தெய்வப்புலவர்!

     ‘கொண்டு வந்தால் தந்தை

      கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்

      சீர்கேட்பாள் சகோதரி

      உயிர் காப்பான் தோழன்

      கொலை செய்வாள் பத்தினி’

என்று தோழமையின் உயர்வை, உயிரையும் காக்கும் பண்பை, நம் பழைய சினிமா வசனம் கோடிட்டுக் காட்டும்!

இதிகாசம் தொடங்கி இன்றைய சினிமா வரை நட்பை, தோழமையைப் பறை சாற்றும் பல நிகழ்வுகள் பகிரங்கச் சான்றாய் உள்ளன!

ராமாயணத்தில் கூறப்படும் நட்பு, அந்த வட்டத்தையும் தாண்டி, சகோதர பாசமாகவே உருவெடுக்கிறது.

‘குகனொடும் ஐவரானோம்!’

என்று ராமன் கூறுவதுதான் எவ்வளவு பொருள் பொதிந்த கூற்று!

   வில்வித்தையில் விஜயனையே மிரட்டிய கர்ணன்;

   தர்ம தேவதையின் தலைமகன்;

   கண்ணனுக்கே சவாலாக நின்றவன்;

   இந்திரனாலும் இன்ன பிறராலும் சக்தி இழந்தவன்;

   உயிரையே தானம் செய்து உவகை அடைந்தவன்;

என்பதோடு ‘எடுக்கவோ; கோர்க்கவோ?’ என்று விகல்பமில்லாமல் ஆருயிர் நண்பன் துரியோதனனைக் கேட்க வைத்த உயர் பண்பாளன்! 

கர்ணன்- துரியோதனன் நட்பு மகா பாரதத்தின் மாபெரும் சிறப்பல்லவா?

வடக்கிருந்து உயிர் துறக்க மன்னன் கோப்பெருஞ்சோழன் முடிவெடுக்க, புலவர்கள் குழுவே ஒட்டு மொத்தமாக உடனிருக்க விருப்பப்பட, பாண்டிய நாட்டில் இருக்கும் தன் நண்பர் பிசிராந்தையாரை அது வரை சந்திக்காத போதும், அவர் வருவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், தனக்கு அருகில் இடம் ஒதுக்கப் பணித்தான் மன்னன்!

என்னே அவர்களின் இதய பூர்வ நட்பு; இறப்பிலும் பிரியா இறவா அன்பு!

‘எனக்கு ரெண்டு வீடு கிடைச்சா உனக்கு ஒண்ணு! ரெண்டு கார் கிடைச்சா உனக்கு ஒண்ணு!’ என்று அடுக்கிக் கொண்டே போன நண்பனிடம், ‘அதெல்லாம் வரும்போது பார்த்துக்கிடலாம்.. இப்போ ரெண்டு பேனா வெச்சிருக்கியே... ஒண்ணை எனக்குக் கொடேன்!’ என்று தோழன் கேட்க, ரெண்டு கிடைச்சா நண்பன், போன இடம் தெரியவில்லையாம்!

தற்கால, பெரும்பாலான நட்பின் அடையாளம் இது! அதற்காக எல்லோரும் அப்படி என்று சொல்லி விட முடியாது!

இதையும் படியுங்கள்:
கணவரை பறிகொடுத்த பின், ஆடவரோடு ஜோடி சேர்ந்து நடிக்காத வெண்கல குரல் திரைநாயகி!
Sholay Movie

இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்கு

உள்ளே, இறந்தே கிடந்தாலும் உலகறியப் பல நாட்களாகும் என்ற தனியிடம்!

கட்டிய கயிற்றில் கடைசி நேர மரணப் போராட்டம்!

கைகள் நான்கையும் இணைக்கவே, ஏகப்பட்ட போராட்டம்!

இறுதியாக இணைந்தன கைகள்!- இணைந்த கைகள்!

அருண் பாண்டியன் - ராம்கியின், இணைந்த கைகள், திரை வரலாற்றில் ஒரு மைல்கல்!

கொள்ளையர்களால் கைகளை இழந்த இன்ஸ்பெக்டர், அழைத்து வந்த இருவரும் நண்பர்கள்!

எல்லாவற்றிலும் தன் பங்கு இருக்க, எதற்கும் எப்பொழுதும் தன்னிடமுள்ள காசைச் சுண்டிப் போட்டு, பூவா? தலையா பார்த்து, தலையே எப்பொழுதும் வர, தானே முன்னிற்பான் அந்த நல்ல நண்பன்!

கொள்ளையர்களிடம் ஒரு நாள், நண்பனின் காதலியுடன் மூவரும் சிக்கிக் கொள்ள, நண்பனையும், காதலியையும் காப்பாற்றப் போராடுகையில் குண்டடி படுகிறான்! அந்த இறுதி நேரத்திலும், காசைச் சுண்டுகிறான் கனிவான நண்பன்!

- வழக்கம் போலத் தலை!

வேறு வழியில்லாமல், காதலியைக் கூட்டிக் கொண்டு, நண்பனை அபாயத்தில் விட்டு விட்டு, அகல மனமின்றி அகன்ற நண்பன், திரும்பி வந்து பார்க்கையில், தன் இறுதி மூச்சை நண்பனின் மடியிலேயே விட்டு மரணிக்கிறான் தோழன்!

வேதனையில் வெம்பும் அவன், எதார்த்தமாக இறந்த தோழனின் கையில் இருந்த காசை எடுத்துப் பார்க்கிறான்!

இதை வைத்துக் கொண்டுதானே பல முறை அபாயங்களையெல்லாம் அவனே ஏற்றான் என்ற ஏக்கப்பெரு மூச்சுடன் அந்தக் காசைத் திருப்ப, அடுத்த பக்கத்திலும் தலை! பூவில்லாத காசு அது!

இதையும் படியுங்கள்:
பிக் பாஸ் சீசன் 8ல் இணைகிறாரா காமெடி நடிகர் செந்தில்!
Sholay Movie

அதனைப் பார்த்த அவன் உச்சக் கட்ட எழுச்சி பெற்று வில்லனை நோக்கிக் குதிரையில் பாய, நம் இதயங்களிலும் நட்பு ரத்தம் குபீரெனப் பாய்ந்து, கண்களைக் குளமாக்கும்!

அன்பிற்கும், நட்பிற்கும் அடைக்குந்தாழ் ஏது?

ஷோலே படத்தையும், தர்மேந்திரா - அமிதாப்பையும் மறந்திடவே இயலாது!

இன்னும் எத்தனையோ சொல்லலாம்!

ஓரிரண்டு சோறுதானே பதம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com