

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக இழுபறியிலிருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் விக்ரம் , சிம்ரன், ரித்து வர்மா, பார்த்திபன் , ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் , திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை திரைக்கதை எழுதி கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்திற்கு கௌதமின் ஆஸ்தான பாடலாசிரியர் தாமரை பாடல்களை இயற்ற அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் தொடங்கியதில் இருந்து பல்வேறு சிக்கல்களையும் ஏராளமான தடைகளையும் , நீண்ட இழுபறிகளையும் சந்தித்தது. அந்த திரைப்படத்தின் நீண்டகால இழுபறியில் இயக்குனர் மற்றும் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரான கௌதம் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார். துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் தடைகளுக்கு பின்னால் , கௌதம் மேனன் நடிகராகவும் தனது வாழ்க்கை பாதையை அமைத்துக் கொண்டார்.
ஆரம்பத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை சூர்யாவை கதாநாயகனாக வைத்து 2013 ஆம் ஆண்டு கெளதம் இயக்குவதாக இருந்தார். ஆனால், அந்த திரைப்படத்தை கௌதம் மேனன் தயாரிப்பதாக இருந்ததால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு சூர்யா அந்தத் திட்டத்திலிருந்து விலகினார். பின்னர் 2015 ஆண்டு மீண்டும் விக்ரமை நாயகனாக வைத்து தொடங்க திட்டமிடப்பட்டது , ஒரு வழியாக 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அந்த ஆண்டிலேயே இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. 2018 ஆம் ஆண்டு படத்தை வெளியிடுவதற்கு கௌதம் மேனன் பெரு முயற்சி எடுத்தார். தயாரிப்பு மற்றும் நிதி சிக்கல்கள் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே சென்றது. பின்னர் இந்த திரைப்படம் 2020 ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கு முயற்சிகள் நடந்தது.
அப்போது 2019 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து நஷ்டம் அடைந்த "என்னை நோக்கி பாயும் தோட்டா" திரைப்படத்தின் நிதி சிக்கல்கள் காரணமாக, அந்த திரைப்படத்தின் ஒரு தயாரிப்பாளர் மதன் , துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் தயாரிப்பில் 50% பங்கினை பிரேம் குமார் மற்றும் புண்ணிய மூர்த்தி ஆகியோருக்கு வழங்கினார்.
2023 ஆம் ஆண்டு துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியிடும் நேரத்தில் , தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகையினை கொடுத்துவிட்டு படத்தினை வெளியிட வேண்டும் என்று , பிரேம் குமார் மற்றும் புண்ணிய மூர்த்தி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனால் 2023 ஆம் ஆண்டு வெளிவர வேண்டிய துருவ நட்சத்திரம் திரைப்படம் மீண்டும் தடைப்பட்டது.
தற்போது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, துருவ நட்சத்திரம் திரைப்படம் ஜூன் 15 ஆம் தேதிக்குள் வெளியிட எந்த ஒரு தடையும் இல்லை. மேலும் திரைப்படத்தின் வரவு செலவுகளை கண்காணிக்க ஒரு வழக்கறிஞரையும் நியமித்து , இதற்காக தனியாக ஒரு வங்கி கணக்கையும் தொடங்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அந்தத் திரைப்படம் வெளியாக எந்த ஒரு தடங்கலும் செய்யக்கூடாது என்றும் புகார் மனுதாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீண்ட வருடங்கள் கழித்து துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாக உள்ளதால் , விக்ரம், ஹாரிஸ் ஜெயராஜ், கௌதம் மேனன் ஆகியோர் பழையபடி தங்களது மார்க்கெட்டினை பிடிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த கூட்டணி கம்பேக் கொடுக்க படத்தின் வெளியீட்டிற்கு காத்துக் கொண்டுள்ளது.