நீங்கள் டைனோசர் வளர்த்து வருடத்திற்கு 30 லட்சம் வரை லாபம் ஈட்ட நினைக்கிறீர்களா? இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்.
இந்த செய்தியை பார்த்ததும் உங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கலாம். ஜூராசிக் பார்க் திரைப்படத்தில் வருவதைப் போல மீண்டும் டைனோசர்களுக்கு உயிர் கொடுத்து விட்டார்களா? என்றும் நீங்கள் நினைக்கலாம். விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் டைனோசர் போன்ற அழிந்து போன விலங்குகளை கொண்டு வந்தாலும் பரவாயில்லை. ஆனால், கொரோனா போன்ற எந்த ஒரு நோயும் பரப்பாமல் இருந்தாலே போதும் என்று தான் நாம் நினைக்கிறோம்.
சமீபத்தில் கோகுல்ஸ் பிள்ளை என்பவரின் இன்ஸ்டா கணக்கிலிருந்து ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருந்தது. அந்த வீடியோவின் தொடக்க காட்சி மிகவும் அழகான மலை அடிவார கிராமத்திலிருந்து தொடங்குகிறது. அந்த இடம் பாலக்காட்டு ஜில்லா என்று வர்ணனையில் குறிப்பிடப்படுகிறது. பாலக்காட்டில் டைனோசர் வளர்ப்பு முறை பற்றி அந்த காட்சிகள் விவரிக்கப் பட்டுள்ளன. வீடியோ காட்சிகள் முழுக்க அழகிய கிராமப்புறங்களின் பாரம்பரிய பின்னணியில் உருவாகி உள்ளது. முதலில் ஒரு வயதான பெண்மணி டைனோசர் குட்டிக்கு மாட்டுக்கு தீவனம் வைப்பது போல வைக்கும் காட்சி இருக்கிறது.
டினோமுக் என்ற பகுதியில் பிரதான தொழிலாக டைனோசர் வளர்ப்பு உள்ளது. ஆதி காலத்தில் இருந்து மனிதர்களோடு பழகும் டைனோசர்கள் மிகவும் அமைதியான விலங்குகளாகும். இந்த அமைதியான விலங்குகளை மனிதர்கள் முட்டைக்காகவும் , அதன் மென்மையான இறைச்சிக்காகவும் வளர்க்கின்றனர் என்று வர்ணனை வருகிறது. அடுத்ததாக ஒரு கசாப் கடையில் டைனோசரின் இறைச்சிகள் வெட்டப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. டைனோசரின் பெரிய முட்டையை ஒருவர் பானையை போல தலையில் வைத்து சுமந்து செல்கிறார்.
டைனோசர் வளர்ப்பு பற்றி பண்ணையாளர் ஒருவர் பேச ஆரம்பிக்கிறார். டைனோசர் வளர்ப்பு நல்ல லாபகரமான தொழில் என்று அவர் கூறுகிறார். "ஒரு வருடத்திற்கு டைனோசர் 300 முட்டைகள் வரை இடுகின்றன. அதன் ஒவ்வொரு முட்டையும் பெரிதாக இருப்பதால் அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும். மேலும், அதன் கழிவுகள் நல்ல இயற்கை உரமாக இருக்கும்" என்கிறார்.
அடுத்ததாக இன்னொரு இளம் பண்ணையார் பேச ஆரம்பிக்கிறார். டைனோசர்கள் மனிதர்களுடன் நட்பாக பழகக் கூடியவை என்று தன் கதையை தொடங்குகிறார். டைனோசர்களுக்கு பச்சை புல்லும் தண்ணீரும் உணவாக வைத்தால் போதும் என்கிறார். இந்தக் காட்சியில் டைனோசர்கள் சிறுவர்களுடன் ஆற்றங்கரையில் விளையாடுகின்றன. டைனோசர்கள் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடுகின்றன. அவர்கள் செல்லும் இடமெல்லாம் பின்னாடியே செல்கின்றன.
டைனோசர் வளர்ப்பு பற்றி கூடுதல் தகவல்களுக்கு நீங்கள் ஸ்டோரி டெல்லர் யூனியனை தொடர்பு கொண்டு அறியலாம் என்று முழு வீடியோவும் முடிகிறது.
AI தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்த வீடியோ பார்ப்பதற்கு தத்ரூபமாக உள்ளது. கிராமப்புறத்தின் அழகியலும் அதிநவீன தொழில்நுட்பத்தில் டைனோசர்களும் ஒருங்கே இணைந்து பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறது. அழிந்து போன உயிரினங்களை எதிர்காலத்தில் மீண்டும் கொண்டு வர வாய்ப்பு அறிவியலில் உள்ளது. இந்த கதையில் வருவதைப் போல அறிவியல் முன்னேற்றத்தில் நாளை இறைச்சிக்காக டைனோசர்கள் கூட வளர்க்கப்படலாம். அப்போது உண்மையிலேயே மிகவும் லாபகரமான தொழிலாக இது இருக்கும்.
டைனோசர் என்றாலே மிகவும் பயங்கரமான விலங்குகள் என்று நம் சிந்தையில் இருப்பதை இந்த வீடியோ நிச்சயமாக மாற்றும். இந்த வீடியோ சினிமா ஆர்வமுள்ள 6 நண்பர்களால் உருவாக்கப்பட்டது. லாபம் தரும் பிராணிகள் வளர்ப்பு வீடியோக்களை நம்பி, மக்கள் ஏமாறுவதை பற்றி நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இந்த வீடியோ பாராட்டத்தக்கது. மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த வீடியோ பயன்படும்.