

தனது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் சுகுமாருடன் இணைந்து மீண்டும் கும்கி 2 படத்தில் களம் இறங்கி உள்ளார் பிரபு சாலமன். தான் நேசிக்கும் யானைகளை மைய்யமாக வைத்து கதை செய்துள்ளார். குரங்கணி, தாய்லாந்து காடுகள் என தன் படத்தில் பதிவு செய்தவர், இந்த கும்கி 2 படத்தில் நெல்லையம்பதி காட்டை படம் பிடித்துள்ளார். கும்கி, மைனா, காடன் என கரடு முரடான மலை பகுதிகளில் பட பிடிப்பு நடத்துபவர் இம்முறை ஒரு படி மேலே சென்று மின்சாரம், மொபைல் வசதி இல்லாத ஒரு மலை கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ஒரு மின்சார வசதி இல்லாத பிரிட்டிஷ் காலத்து கட்டிடம் இருந்திருக்கிறது. இங்கே தான் படக் குழுவினர் தங்கி இருந்தனர்.
பைசன் பட வெற்றிக்கு பிறகு இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வந்துள்ளது கும்கி 2. பிரபு சாலாமன் நிவாஸ் கே. பிரசன்னாவை பற்றி குறிப்பிடும் போது "டைட்டானிக் படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற ஜேம்ஸ் கேமரூன் 'நான் இந்த படத்தில் ஒரு கப்பலை கட்டினேன். இந்த படத்திற்கு இசையின் மூலமாக உயிர் தந்தவர் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்றார்.' அதே போல் நிவாஸ் கே. பிரசன்னா இந்த படத்தின் காடுகளுக்கும், மலைக்கும் உயிர் தந்துள்ளார்" என்கிறார் பிரபு சாலமன் உணர்ச்சி பொங்க.
இந்த படத்தை பற்றிய ஒரு சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது. கும்கி முதல் பாகத்தில் விக்ரம் பிரபு அறிமுகம் ஆனார். இன்று விக்ரம் பிரபு முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இந்த இரண்டாம் பாகத்தில் விக்ரம் பிரபு ஏன் ஹீரோவாக நடிகவில்லை என்பது தான். முதல் பாக்கத்திற்கும் இந்த இரண்டாம் பாகத்திற்கும் தலைப்பை தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என்று பதில் தருகிறார். இரண்டும் வெவ்வேறு கதை களங்கள். கும்கியில் விக்ரம் பிரபு, மைனாவில் அமலா பால், கயல் படத்தில் சந்திரன் இந்த படத்தில் மதி அனைவருமே என் அறிமுகங்கள் தான். கதை தான் நடிகர்களை தேர்வு செய்கிறது என்கிறார் பிரபு சாலமன்.
இந்த கும்கி 2 படத்தின் சில காட்சிகளை 2018-19 ஆம் ஆண்டிலேயே எடுத்து விட்டார். கோவிட் ஊரடங்கால் படப்பிடிப்பு நின்று போக மீண்டும் சென்ற ஆண்டு தொடங்கி நடத்தி உள்ளார். படத்தில் நடித்த யானை ஷூட்டிங் முடிந்த பிறகு படக்குழுவினரை பிரிய மனமில்லாமல் சுற்றி சுற்றி வந்திருக்கிறது. அனைவரும் சமாதானப்படுத்தி பாகனுடன் அனுப்பி வைத்தார்கள். "இது போன்ற யானைகளின் அன்புதான் என்னை யானையை மைய்யமாக வைத்து படம் எடுக்க தூண்டியது" என்கிறார் பிரபு சாலமன்.
கும்கி முதல் பாகத்தை ரஜினி-கமல் இருவரும் பார்த்து பாராட்டினார்கள். இன்னும் ஓரிரு நாளில் படம் வெளியான பின்பு இந்த இரண்டாம் பாகத்தை இருவரும் சேர்ந்து பார்க்கும் நாளுக்காக படத்தின் டீம் ஆர்வத்துடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறது.