
தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களுக்கு தேசப்பற்றை ஊட்டிய நடிகர் அர்ஜூன். இவரது சினிமா வாழ்க்கையில் சங்கர் இயக்கிய ஜென்டில்மேன் திரைப்படம் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இவ்வளவு பெரிய ஹிட் படத்தில் நடிக்க அர்ஜூன் முதலில் விரும்பவில்லை. ஆனால், அர்ஜூன் நடிக்க முக்கிய காரணமே பிரபல இயக்குநர் ஒருவர் தான். யார் அந்த இயக்குநர்? அர்ஜூன் எப்படி படத்தில் நடிக்க சம்மதம் சொன்னார் என்பதை இப்போது பார்ப்போமா!
ஜென்டில்மேன் திரைப்படம் கடந்த 1993 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. அந்த ஆண்டில் வெளிவந்த படங்களிலேயே இப்படம் தான் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டது. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் சங்கரின் முதல் திரைப்படமும் இதுதான். தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த படைப்புகளில் ஜென்டில்மேன் திரைப்படமும் ஒன்று. அர்ஜூன், கவுண்டமணி, மதுபாலா மற்றும் செந்தில் நடிப்பில் உருவான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. காமெடி காட்சிகளும் சரி; சண்டைக் காட்சிகளும் சரி; அனைத்துமே இப்படத்தில் ரசிக்கும் படியாக இருந்தது. மருத்துவம் படிக்க நினைத்த இரண்டு இளைஞர்களின் வாழ்வில் அரசியல் நிகழ்த்திய தாக்கத்தை இப்படம் எடுத்துரைத்து.
மிகப்பெரும் ஹிட் அடித்த ஜென்டில்மேன் திரைப்படத்தில் முதலில் நடிக்க வேண்டாம் என நினைத்துள்ளார் நடிகர் அர்ஜூன். ஏனெனில் அர்ஜூன் நடிக்கத் தொடங்கிய காலத்தில் அவரை வைத்து படம் எடுக்க எவரும் முன்வரவில்லை. ஆதலால், தானே ஒரு படத்தை இயக்கி, நடிக்க முடிவெடுத்தார். அதுதான் சேவகன் திரைப்படம். கடந்த 1992 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், பெரிய அளவில் வெற்றி அடைந்தது.
சேவகன் படத்திற்குப் பிறகே, ஜென்டில்மேன் படத்தில் அர்ஜூன் நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவெடுத்தார் இயக்குநர் சங்கர். அதன்படி அர்ஜூனை சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளார். இருப்பினும் அர்ஜூன் வெளிப் படங்களில் நடிக்க வேண்டாம் என்றிருந்தார். ஆனால், கதையை மட்டும் ஒருமுறை கேளுங்கள் என்று இயக்குநர் சங்கர் வற்புறுத்தி இருக்கிறார். அர்ஜூனும் கதையைக் கேட்டு விட்டு வேண்டாம் என சொல்லி விடலாம் என நினைத்துள்ளார். ஆனால், கதையின் தாக்கம் அவரை ஏதோ செய்து விட்டது. இதனால் ஜென்டில்மேன் திரைப்படத்தில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டார்.
ஜென்டில்மேன் திரைப்படம் திரையரங்குகளில் 175 நாட்களையும் கடந்து ஓடியது. வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற இத்திரைப்படம், 3 ஃபிலிம்ஃபேர் விருதுகள் மற்றும் 4 தமிழ்நாடு மாநில விருதுகளையும் பெற்றது. இப்படத்திற்கு பிறகு சங்கர் - அர்ஜூன் கூட்டணி 1999 ஆம் ஆண்டு முதல்வன் படத்தில் மீண்டும் ஒன்றிணைந்தது. இப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சங்கர் தனது படங்களில் பிரம்மாண்டமான காட்சிகளை வைப்பதில் கைதேர்ந்தவர். மேலும் தமிழ் சினிமாவில் அதிக பொருட்செலவில் படம் எடுக்கும் இயக்குநர்களில் இவர் தான் முன்னணியில் இருக்கிறார். இன்று இவரது வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது.