

நடிகை திவ்ய பாரதி , ஜிவி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக, தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். தற்போது நரேஷ் குப்பிலி இயக்கத்தில் GOAT என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் திரைப்படத்தின் இயக்குனர் மீது பெண் வெறுப்பு மற்றும் அவமரியாதை தொடர்பான பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனால் தெலுங்கு திரையுலகில் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் நடிகை திவ்ய பாரதி பதிவிட்ட பதிவின் படி , கோட் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் நரேஷ் குப்பிலி, தன்னை பெண்களை அவமதிக்கும் வார்த்தைகளைப் கூறி மனதைப் புண்படுத்தியதாகவும , தொடர்ச்சியாக அவமதிக்கும் விதமாக நடந்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். நரேஷ் குப்பிலி அவரை இரண்டாவது கதாநாயகி வேடத்திற்கு மட்டுமே பொருத்தமானவர் என்று கூறியதுடன், 'சிலகா ' என்ற தெலுங்கு வார்த்தையை பயன்படுத்தி அழைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சிலகா என்ற வார்த்தை தெலுங்கில் 'பறவை' என்று பொருள்படும் என்றாலும் , அதை குறிப்பிடும் விதத்தில் , அது மோசமான வார்த்தையாக மாறுகிறது. இந்த வார்த்தை பெண்களை இழிவுபடுத்த பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு வார்தையாகவும் புழக்கத்தில் இருக்கிறது. அவர் அவ்வாறு கூறிய ஸ்கிரீன் ஷாட்டையும் திவ்யபாரதி தன் பதிவில் பகிர்ந்துள்ளார். சாதரணமாக பெண்களை 'சிலகா' என்று அழைப்பதும் ,வேறு சில வார்த்தைகளைக் கூறி அழைப்பதும் நகைச்சுவையான விஷயம் அல்ல, இது ஒருவர் மனதில் ஆழமாக வேரூன்றிய பெண் வெறுப்பின் பிரதிபலிப்பு," என்றும் திவ்ய பாரதி கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் தன் சக நடிகர் சுதிகாலி சுதீர் மௌனமாக இருப்பது தனக்கு ஏமாற்றத்தை கொடுப்பதாகவும், திவ்யா வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் தன்னை அவமதிக்கும் வார்த்தைகளை கூறிய போது சுதீர் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார். "ஹீரோ அமைதியாக இருப்பதைப் பார்த்து, இந்தக் கலாச்சாரம் இன்னும் ஒரு நாள் நிலைத்திருக்க அனுமதிப்பது தான், எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது," என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு திரைப்படத்தில் இயக்குனர் மீது குற்றச்சாட்டு வைப்பது பற்றி பலரும் கேள்வி கேட்கின்றனர்.
நான் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ,பல குழுவினருடன் பணிபுரிந்துள்ளேன் , அங்கு எனக்கு இது போன்ற அவமரியாதை யான சூழல் ஏற்பட்டதில்லை. நான் "பெண்கள் கேலிக்கு ஆளாகாத, மரியாதைக்குரிய பணியிடங்களை மட்டுமே தேர்வு செய்கிறேன். இது வெறும் தேர்வு மட்டுமல்ல, ஒரு கலைஞராகவும் ஒரு பெண்ணாகவும் எனது தரநிலை உறுதிப் படுத்திக் கொள்கிறேன் என்றார். திவ்யபாரதி தனது கவலை, எனக்கு படப்பிடிப்பு தளங்களில் உண்டான அவமரியாதைக்காக மட்டும் அல்ல , அது மீண்டும் தொடரக் கூடாது என்பதற்காகவும் தான் என்றும் கூறியுள்ளார்.
திவ்யபாரதியின் இந்த குற்றச்சாட்டுகள் திரைப்படத் துறையில் பெண்களுக்கான பணியிட மரியாதை மற்றும் அவமதிப்பு குறித்த விவாததங்களை தூண்டியுள்ளது. சமூக ஊடகங்களில் அவரது பதிவு வைரலாகி பலரும் அவருக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வருகின்றனர். திவ்ய பாரதி தற்போது தமிழில் 'மதில் மேல் கதை ' மற்றும் லிங்கம் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.