விமர்சனம்: DNA - இது அறிவியல் மட்டுமல்ல... உணர்வும் கூட!
ரேட்டிங்(3.5 / 5)
போதை மருந்து கடத்தல், கேங்ஸ்டர் படங்கள் வந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில், நாம் அடிக்கடி செய்திகளில் பார்க்கும் 'மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் கடத்தல்' என்ற ஒன் லைனில் ஒரு மாறுபட்ட மெடிக்கல் கிரைம் திர்ல்லர் படத்தை தந்துள்ளார் டைரக்டர் நெல்சன் வெங்கடசன்.
அதர்வா, நிமிஷா, பாலாஜி சக்தி வேல் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். காதல் தோல்வியால் குடி பழகத்திற்கு ஆளாகி சுற்றி கொண்டிருக்கிறார் அதர்வா. கால் கட்டு போட்டால் சரியாகும் என்று நினைக்கும் பெற்றோர்கள் சற்று வெகுளி போல் இருக்கும் நிமிஷாவை திருமணம் செய்து வைக்கிறார்கள். அதர்வாவும் திருந்தி குடும்பம், வேலை என்று இருக்கிறார். சில மாதங்களில் இந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கிறது. மருத்துவ மனையில் குழந்தை பிறந்த சில நிமிடங்கள் கழித்து தன் குழந்தையை பார்க்கும் நிமிஷா "இது என் குழந்தை இல்லை" என்று கத்தி கூச்சல் போடுகிறார்.
குடும்பத்தினரும், மருத்துவ மனை நிர்வாகமும் இதை ஏற்க மறுக்கிறார்கள். அதர்வா குழந்தையின் ரத்த மாதிரியை எடுத்து DNA டெஸ்ட்க்கு அனுப்புகிறார். சில நாட்களில் இது இந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை இல்லை என்ற அதிர்ச்சி DNA ரிசல்ட் வருகிறது.
இவர்களுக்கு பிறந்த குழந்தை என்ன ஆனது? என்பதை ஒரு மெடிக்கல் கரைம் திரில்லர் பின்னணியில், மலையாள, ஹிந்தி த்ரில்லர் திரைப்படஙகளுக்கு இணையாக தந்துள்ளார் டைரக்டர். இதனுடன் குழந்தை எமோஷன் என்ற அம்சத்தையும் சரியாக உணர்த்தி உள்ளார். படம் தொடங்கி அரைமணி நேரத்திற்கு பிறகு பரபரப்பாக நகரும் திரைக்கதையில் நாம் எதிர் பார்க்காத பல ட்விஸ்ட்கள் உள்ளன.
நடிப்பில் முதல் மதிப்பெண் பெறுவது நிமிஷா தான். வெகுளியாக வரும் போதும், குழந்தை தனது இல்லை என்று ஆர்ப்பாட்டம் செய்யும் போதும், வளர்த்த குழந்தையை பிரிய மனமில்லாமல் தவிக்கும் போதும் நடிப்பில் ஆஹா சொல்ல வைக்கிறார்.
இரண்டாவது மதிப்பெண் பெறுவது பாலாஜி சக்தி வேல். ஒரு வயதான ஏட்டையாவாக தனது பருமனான உடலில் அற்புதமான உடல் மொழியை தந்திருக்கிறார்.
தனக்கு ஒரு வெற்றி வேண்டும் என்பதை புரிந்து கொண்டு ஆக்ஷன், எமோஷன் இரண்டையும் கலந்து தந்திருக்கிறார் அதர்வா. "நம்ம நாட்டுல பணம், காசு இல்லைன்னா கூட கண்டுக்க மாட்டான். ஆனால் குழந்தை இல்லைன்னா அந்த கீரை சாப்பிடு, இந்த டாக்டரை பாரு, பரிகாரம் பண்ணு என ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணு வான். குழந்தைக்காக தவம் இருக்கும் தம்பதிகள் இருக்கும் இதே நாட்டில் தான் தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற குழந்தைகள் நிறைய பேர் இருக்காங்க" என வரும் வசனம் நம்மை யோசிக்க வைக்கிறது.
படத்தின் பாடல்களை விட இறுதியில் வரும் கைலாய வாத்திய இசை சிறப்பாக உள்ளது. படத்தில் தேவையில்லாமல் வரும் ஒரு குத்து பாடலை தவிர்திருக்கலாம். இந்த ஆண்டு தமிழில் வெளியான குடும்பஸ்தன், ட்ராகன், டூரிஸ்ட் பேமிலி பட வரிசையில் DNA படமும் மக்கள் விரும்பும் படமாக வந்துள்ளது. நாளை வெளியாகும் இப்படத்தை நீங்கள் பார்க்கும் போது கண்டிப்பாக ஒரு நல்ல திரைப்படம் பார்த்த அனுபவத்தை பெறுவீர்கள்.
DNA அறிவியல் மட்டுமல்ல, உணர்வும் தான் என்கிறது இப்படம்.