
படத்தின் ஆரம்பத்தில் ஒரு எச்சரிக்கை வாக்கியம் வருகிறது. "தயவு செய்து இந்தப் படத்தின் முடிவை வெளியில் சொல்லாதீர்கள்"
ஒரு மலைக்கிராமம். அதில் ஒரு காவல் நிலையம். அது காவல் நிலையமல்ல. ஒரு வீடு என்று தான் சொல்லலாம். ஒரு சிறிய சிறை கூட இல்லாத அந்தக் காவல் நிலையத்தை வேறு எப்படிச் சொல்வது. இருபத்து ஐந்து ஆண்டுகளாக பெரிய குற்றம் எதுவும் நடக்காத ஊர். அதன் காவலாளர் ரங்காயன ரகு. தனது மனைவி மக்களுடன் வாழ்ந்து வருகிறார். இறந்து போன தன் தாயின் நினைவாகப் படையல் வைக்கிறார். உடன் பணியாற்றுபவர்களை அழைத்து விருந்து வைக்கிறார். சரத் லோகிதஸ்தவா அந்த ஊரில் ஒரு பணக்காரர். கோபக்காரர். ஒரு நாள் திடீரென்று இறந்து போகிறார். அங்குத் துக்கம் விசாரிக்க வந்த ரகு அது இயல்பான மரணமல்ல கொலை என்று எச்சரித்து விசாரிக்க ஆரம்பிக்கிறார். அது நடந்து அதே நாளில் இன்னொரு மரணமும் நிகழ்கிறது. குற்றமே நடக்காத ஊரில் ஒரே தினத்தில் இரண்டு மரணங்கள். இதன் முடிவு தான் அஞ்ஞாதவாசி.
Zee 5ல் வந்துள்ள இந்தப்படம் ஒரு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு மலைக்கிராமம். யானைகள் உலவுகிறது. தொண்ணூறுகளில் நடக்கும் ஒரு கதை. கம்பியூட்டர், மின்னஞ்சல் எல்லாம் அந்த ஊருக்குப் புதுசு. கிராமத்தில் உள்ள மனிதர்கள். அனைவரும் ஒரு குடும்பம்போலத் தான். இப்படியொரு கதைக்களம் அமைந்தால் படம் எப்படி நகரும். உண்மையில் இந்தப்படத்தின் முதல் ஒரு மணி நேரத்தைக் கடப்பது மிகவும் சிரமம். திரும்பத் திரும்ப வரும் சில காட்சிகள். ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு முடிச்சுகள். இது ஏன் நடக்கிறது என்பதே புரியாது.
முதல் காட்சியிலேயே கிணற்றில் விழுந்த ஒரு குடும்பத்தை இருவர் காப்பாற்றுவார்கள். யானை ஒன்று மின்சார வேலியில் அடிபட்டு இறந்து விடும். மலையுச்சியில் தனது தாய்க்காக வைத்த படையலை ஒரு காகம் உண்பதைப் பார்த்துக் கொண்டிருப்பார் ரகு. குப்பையில் எதுவும் உண்ணாத கோழி. இது போன்ற இன்னும் சில காட்சிகள். இவையனைத்தையும் கடைசியில் திரும்பக் காட்டும்போது அட இதற்காகத் தான் இது வந்ததா என்றொரு சின்ன ஆச்சரியம் நமக்கு வரும். அந்த அளவு இயல்பான ஆனால் சற்றே சிக்கல் நிறைந்த திரைக்கதை படத்தின் இரண்டாம் பாதியில்.
ஒளிப்பதிவும் இசையும் என்ன தேவையோ அந்த அளவு மட்டுமே. ரகுவைத் தவிரப் பாவனா கவுடா, சித்து, ரவிசங்கர் கவுடா, எனப் பலர் அந்தப் பாத்திரங்களாக மட்டுமே தெரிகிறார்கள்.
"ஒரு குற்றம் நிகழ்வது அதைத் தீர்ப்பது என்று வந்தபிறகு இறுதிக் காட்சியில் இவர்களைத் தண்டிப்பது என்ற முடிவை நீங்கள் எடுப்பது சரி. ஆனால் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு குற்றம். அதன் வலியைத் தாங்கிக்கொண்டு இருக்கிறீர்களே. அந்தக் குற்றத்திற்கு என்ன தீர்வு. ஏன் அதே தீர்வை இப்பொழுதும் கொடுக்கக் கூடாது என ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது". அதோடு முடிகிறது படம்.
அன்பு, காதல், ஈர்ப்பு என்ற பெயரில் சுயநலமாக நடக்கும் மனிதர்கள். அவர்கள் எடுக்கும் முடிவுகள் அதனால் நிகழும் சம்பவங்கள் என இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் ஜனார்தன் சிக்கன்னா. இந்தப்படம் பார்க்கலாமென முடிவெடுத்தற்கு இன்னொரு காரணம் தயாரிப்பாளர் ஹேமந்த் ராவ். ஒரு கிரைம் திரில்லர் என்ற போர்வையில் வந்தாலும் எந்தவிதமான பரபரப்பும் கடைசி வரை இல்லை.
மிக மெதுவாக நகரும் ஒரு மலையாளப் படத்தைப் போல் தான் இதுவும். வித்தியாசமான கிரைம் திரில்லர்களைத் தேடித் தேடிப் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கலாம். ஆரம்பத்திலிருந்து அடிதடி, ரத்தம், சம்பவம் எனத் தேடும் ஆள்கள் மாற்றுப் பாதையில் சென்று சன்னி தியோலின் ஜாட் பார்த்து உய்யவும்.